Last Updated : 11 Nov, 2018 10:01 AM

 

Published : 11 Nov 2018 10:01 AM
Last Updated : 11 Nov 2018 10:01 AM

விவசாயியாகப் பிறப்பது முன்ஜென்மப் பாவமோ என்ற எண்ணம் எனக்குண்டு!- சி.எம்.முத்து பேட்டி

காவிரிப் படுகை விவசாயிகளின் வாழ்க்கைப்பாடுகளையும் அவர்களின் உள்மனப் போராட்டங்களையும் யதார்த்தத்தோடும் கலையம்சத்தோடும் முப்பதாண்டுகளுக்கு மேலாக எழுதிவருபவர் சி.எம்.முத்து. ‘நெஞ்சின் நடுவே’, ‘கறிச்சோறு’, ‘அப்பா என்றொரு மனிதர்’ போன்றவை இவரது குறிப்பிடத்தக்க நாவல்கள். தன் வாழ்க்கையையும் எழுத்தையும் விவசாயத்தோடு பிணைத்துக்கொண்டவர். இவரது சமீபத்திய ‘மிராசு’ நாவலில் விவசாயக் குடிகளின் மூன்று தலைமுறை வாழ்க்கையைச் சித்தரிப்பதன் வாயிலாகக் காவிரிப் படுகையின் சமூக, பொருளாதார மாற்றங்களை விரிவாகப் பேசியிருக்கிறார். தஞ்சை ப்ரகாஷ் பெயரில் ‘பேசும் புதிய சக்தி’ இதழ் வழங்கும் சிறந்த எழுத்தாளுமை விருது இந்த ஆண்டு சி.எம்.முத்துவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பல ஆயிரம் பக்கங்கள் எழுதியிருக்கிறீர்கள். முதல் விதை எப்போது விழுந்தது?

எட்டாவது படிக்கும்போது என் வகுப்பில் கதை, கவிதை எழுதும் ஒரு பையன் இருந்தான். வாத்தியார்கள் எதற்கெடுத்தாலும் அவனைத்தான் அழைப்பார்கள். அவன் மீது எனக்கு ஒருவித எரிச்சல். அவன் நூலகம் செல்லும்போது பின்தொடர ஆரம்பித்தேன். அவன் வாசித்த புத்தகத்தையே நானும் எடுத்து வாசித்தேன். வீட்டுக்கு வந்ததும் அதைப் போலவே ஒரு கதையை எழுதிப்பார்த்தேன். வாத்தியார்களிடம் அந்தக் கதைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பிறகு, எழுத்து கொடுத்த மயக்கத்தில் பள்ளிக்கூடம் செல்வதையும் விட்டுவிட்டேன்.

சி.மாரிமுத்து ஏன் சி.எம்.முத்து ஆனார்?

மாரிமுத்து என்பது கிராமியச் சொல்லாக இருக்கிறது. மாரியம்மனைக் குறிக்கும் பெயராகவும் இருக்கிறது. ஊரில் பல பேர் இந்தப் பெயரில் இருப்பார்கள். எனவே, அப்பாவின் பெயர் சந்திரஹாசனிலிருந்து ‘சி’யும் மாரியிலிருந்து ‘எம்’மும் எடுத்துக்கொண்டு சி.எம்.முத்து என சுருக்கிக்கொண்டேன்.

தஞ்சை, விவசாயிகள், நிலவுடைமை போன்றவை உங்கள் படைப்புகளின் மையமாக இருக்கின்றன. இவற்றை எழுத வேண்டுமென்று ஏன் தீர்மானித்தீர்கள்?

நானே விவசாயிதானே! விவசாயிகளின் வலி, அவர்களின் வலிமை எல்லாமும் கலந்துதான் என் வாழ்க்கை இருக்கிறது. விவசாயிகளின் வாழ்க்கைப் போராட்டம் என்பது மிகக் கொடியது. முன்ஜென்மத்தில் செய்த பாவத்தால்தான் ஒருவன் விவசாயியாகப் பிறக்கிறானோ என்றுகூட நான் நினைப்பதுண்டு. சொல்லப்போனால் என் வாழ்க்கையைத்தான் என் எழுத்தின் மையமாக்கியிருக்கிறேன்.

இதோடு ஆண், பெண் உறவுச் சிக்கல்களும் உங்கள் படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறது இல்லையா?

கல் தோன்றி மண் தோன்றா காலத்திலேயே இந்தச் சிக்கல்களெல்லாம் வந்ததுதானே? ஒரு எழுத்தாளனாக அதையெல்லாம் சொல்லாமல் இருக்க முடியாது.

தஞ்சை ப்ரகாஷுடனான உறவைச் சொல்லுங்கள்...

அது ஒரு சுவாரசியமான கதை. நான் பூமணி மூலமாகத்தான் ப்ரகாஷைச் சந்தித்தேன். பூமணி எனக்கு அனுப்பியிருந்த தபாலில், “உங்கள் ஊரில் ப்ரகாஷ் என்று அற்புதமான மனிதர் இருக்கிறார். அவரைப் பார்த்திருக்கிறீர்களா?” என்று கேட்டிருந்தார். அதன் பிறகுதான் ப்ரகாஷைத் தேடிச் சந்தித்தேன். அவர் ஒரு கதை எழுதுவார். இரண்டு மூன்று வருடங்கள் ஆனாலும் அது பிரசுரம் ஆகாது. எனக்கோ ஒரு மாதத்துக்கு எட்டு கதைகள் பிரசுரமாகிவிடும். இது ஒவ்வொரு மாதமும் நடக்கும் கூத்து. “இது எப்படி உன்னால முடியுது? நீ சுலபமா எழுதுறது மாதிரி என்னால முடியறதில்ல. கொஞ்சம் கனமாத்தான் எழுத வருகிறது” என்று ப்ரகாஷ் சொல்வார். “அந்த கனத்தோட என்னால எழுத முடியல. எனக்கு இப்படித்தான் எழுத முடியுது” என்று நான் சொல்வேன்.

ப்ரகாஷைச் சந்திப்பதற்கு முன்பாக மாலை முரசில் எழுதிக்கொண்டிருந்தேன். ‘தீபம்’, ‘கணையாழி’ போன்ற தளங்களில் எழுதுவதற்கு அவர் ஒரு காரணமாக இருந்தார். நிறைய இலக்கியப் பத்திரிகைகளை எனக்குப் படிக்கக் கொடுத்தவர் ப்ரகாஷ்தான். அந்தப் பத்திரிகைகளை வாசித்து, அதுகுறித்து ப்ரகாஷோடு உரையாடியபோதுதான் எனக்குப் புதிய தளத்தில் எழுதுவதற்கான பிரக்ஞை ஏற்பட்டது.

அறியப்படாத ஆளுமைகளின் பட்டியலில் உங்கள் பெயரைக் குறிப்பிடுகிறார்களே?

நான் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருந்தபோதும், பலரால் பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிடப்பட்டுக்கொண்டிருக்கும்போதும் இப்படிச் சொல்லப்படுவதை எப்படிப் புரிந்துகொள்வது? நம் சூழலின் கோளாறு என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், இப்படியான பட்டியல்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. யார் என்ன சொன்னாலும் சரி, நான் எழுதிக்கொண்டே இருப்பேன்.

இப்படித் தொடர்ந்து எழுதுவதற்கு எது உத்வேகம் தருகிறது?

என் ஊரைச் சுற்றி நடக்கும் விஷயங்களே என்னை எழுதத் தூண்டுவதாக இருக்கின்றன. எனது கிராமம், சுற்றியுள்ள பக்கத்துக் கிராமங்கள் எனக்கு எழுதுவதற்கான களத்தை ஏற்படுத்தித் தருகின்றன. அந்த விஷயங்களே எனக்கு எழுதப் போதுமானதாகவும் இருக்கின்றன. நான் அசலிலிருந்து அசலை எழுதுகிற கலைஞன். கற்பனையாக எதையும் நான் எழுதுவதே கிடையாது. எழுத்தின் நேர்த்திக்காகச் சில கற்பனைச் சொற்களைச் சேர்க்கிறேன் என்றாலும் அது அசல்தன்மையை விலக்கிவிட ஒருபோதும் முயல மாட்டேன்.

தஞ்சாவூர் படைப்பாளிகள் என்றாலே தி.ஜா., கு.ப.ரா., கரிச்சான் குஞ்சு போன்றவர்களே இன்றும் முன்னிறுத்தப்படுகிறார்கள். நீங்கள் இவ்வளவு எழுதிய பிறகும் தஞ்சையின் பழைய இலக்கிய முகம் மாறவில்லையே?

அவர்களோடு ஒப்பிடும்போது அவர்களுக்கு மத்தியில் ஒரு கடுகுபோல நான் இயங்கிக்கொண்டிருக்கிறேன். ஆனால், கடுகின் காரம் பெரியது என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே? இன்றைக்குத் தஞ்சை மக்களை ரத்தமும் சதையுமாக எழுதுவது சி.எம்.முத்துதான் என்று சொல்கிற விமர்சகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். “என்னைவிட முத்து அதிகமாக எழுதிவிட்டார்” என்று தி.ஜானகிராமன் ஓரிடத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ‘உலகத் தரத்துக்குத் தமிழை எடுத்துச்சென்றவர் சி.எம்.முத்து. அவர் மறக்கப்பட்டது தமிழின் சாபக்கேடு’ என்று எழுதியிருக்கிறார் வெங்கட் சாமிநாதன். எல்லோருக்கும் இடமிருக்கிறது.

இலக்கியவாதிகளைச் சந்தித்தால் ‘கண்மணி’ என்று கட்டிப்பிடித்து உருகிவிடுகிறீர்களே? இலக்கியத்தில் உங்களுக்கு எதிரிகள் யாருமே இல்லையா?

பிறந்த குழந்தையைக்கூட வா, போ என்று அழைத்ததேயில்லை. மண்ணில் பிறந்த எந்த மனிதரையும் கொண்டாட ஆசைப்படுகிறவன் நான். என்னுடைய ரத்தமாக, என்னுடைய சதையாக அவர்களைப் பார்ப்பதால் பாசம் மிகுந்த சொற்கள் என்னை அறியாமல் இயல்பாகவே வந்துவிடுகின்றன. துவேஷமாக யாரையுமே பார்ப்பதில்லை.

உங்களுடைய அடுத்த திட்டம் என்ன?

இத்தனை ஆண்டு கால எனது அனுபவத்தில் விவசாய வாழ்க்கை என்னென்ன மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது என்பதை ஒட்டி ஒரு பிரம்மாண்டமான நாவல் எழுதப்போகிறேன். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், திருச்சி மாவட்டத்தின் சில பகுதிகள் - இப்படி ஒரு நிலப்பரப்பை எடுத்துக்கொண்டு அங்குள்ள விவசாய வாழ்க்கையைச் சித்தரிக்கக்கூடிய நாவலை உருவாக்கும் முனைப்பில் ஈடுபட்டிருக்கிறேன். இங்கே ஐந்து மைல்களுக்குள்ளேயே சொற்பிரயோகங்களெல்லாம் மாறுபடுகின்றன. காவிரிப் படுகையில் ‘போய்ட்டு வர்றீங்களா’ என்பார்கள். கொஞ்சம் தள்ளிப்போனால் ‘போய்க்கிட்டு வர்றீங்களா’ என்பார்கள். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியரான கல்பனா சேக்கிழார் இந்தப் பகுதிகளிலிருக்கும் சொற்களை ஆராய்ந்துவருபவர். அவரது உதவியுடன் ஒவ்வொரு பகுதியிலுமிருக்கும் நுட்பமான சொற்பிரயோகங்களை ஆராய்ந்து அடுத்த நாவலை எழுதத் திட்டமிட்டிருக்கிறேன்.

இன்று இயந்திரங்கள் இல்லாமல் விவசாயம் சாத்தியமேயில்லை எனும் நிலைமைக்கு விவசாயிகள் ஆளாகியிருக்கிறார்கள். சரியான நேரத்தில் விவசாயம் நடந்தால்தான் அது சரியான பலனைத் தரும். விவசாயிகள் நினைக்கும் நேரத்தில் டிராக்டர்கள், அறுவடை இயந்திரங்கள், நடவு இயந்திரங்கள் போன்றவற்றைப் பணத்தட்டுப்பாடு காரணமாக அவர்களால் கொண்டுவர முடிவதில்லை. இப்படியான சிக்கல்களால் விவசாயம் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கிறது. நவீனத்துக்குள் விவசாயம் நுழைந்தாலும்கூட மீண்டும் பழைய சிக்கல்களுக்குள்ளிருந்து வெளிவரவில்லை. இதையெல்லாம் நான் எழுதித்தானப்பா ஆக வேண்டும்?

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x