

பலருக்கும் சந்துருவை ஓர் அதிரடியான வழக்குரைஞராகத் தெரியும்; பின்னாளில் கறாரான நீதிபதியாகத் தெரியும்; பணி ஓய்வுக்குப் பின் ஓர் எழுத்தாளராகத் தெரியும். இப்படி வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு பரிமாணங்களில் காட்சியளிக்கும் சந்துருவிடம், மாறாத ஓர் அடையாளம் உண்டு: எல்லாக் காலத்திலும் தீவிரமான வாசகர் அவர். எவ்வளவு நெருக்கடியான பணிச் சூழலுக்கு இடையேயும் தினமும் புத்தகம் வசிப்பதற்குக் குறைந்தது மூன்று மணி நேரம் ஒதுக்கக்கூடியவர் சந்துரு. சென்னை புத்தகக் காட்சிக்கு வந்த அவர், வாங்கிய புத்தகங்களைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார்.
“சென்னைப் புத்தகக் காட்சிக்கு வயது 37 என்றால், எனக்கும் அதற்குமான தொடர்பு 35 ஆண்டுகள். உடல்நலக் குறைவு காரணமாக இரு ஆண்டுகள் மட்டுமே தவறவிட்டிருக்கிறேன். அப்போதும்கூட என் மனைவி வந்து புத்தகங்களை வாங்கி வந்தார். இந்த முறை 25 புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் முக்கியமானவை: பெருமாள்முருகனின் ‘நானும் சாதியும்’, பழ. அதியமானின் ‘சேரன்மாதேவி குருகுல சர்ச்சை’, ஜோ டி குரூஸின் ‘கொற்கை’ ஆகியவை முக்கியமானவை. தமிழத்தில் சாதியக் கொடுமைகள் மீதான விமர்சனங்களைச் சுமந்து வரும் புத்தகங்கள் குறைவு. நான் குறிப்பிட்ட முதல் இரு நூல்கள் சாதியக் கொடுமைகுறித்தான வரலாற்றைப் பேசுபவை. ‘கொற்கை’ மீனவர்கள் படும் பாட்டைச் சொல்வது. த.செ.ஞானவேலின் ‘ஒற்றையடிப் பாதை’, ‘திருப்புமுனை’ இரு நூல்களையும் வாங்கினேன். சாதாரண பின்னணியிலிருந்து முன்னேறியவர்களின் கதையைச் சொல்லும் நூல்கள் இவை. புத்தகங்கள் ஏராளமாகக் குவிந்திருக்கின்றன; ஆகையால், 10 நாட்களுக்குள் இன்னும் இரு முறை வருவேன்” என்றார் சந்துரு!