

க.நா.சு.வின் உலக இலக்கிய ஞானம் மிகவும் பரந்துபட்டது; ஆழமும் நுட்பமும் கூடியது. இந்த ஞானத்தின் எல்லைகளிலிருந்தும் அனுபவங்களிலிருந்துமே தமிழில் அவருடைய படைப்பாக்கங்கள் உருவாகின. சிறுகதைகள், மயன் என்ற பெயரில் கவிதைகள் எனக் கணிசமாக எழுதியிருக்கிறபோதும் படைப்பிலக்கிய ஆளுமையாக க.நா.சு.வின் வெளிப்பாட்டில் ஒளிர்வது அவருடைய நாவல்கள்தான். அவை வரலாற்றுரீதியான முக்கியத்துவமும் கொண்டவை. நவீனத் தமிழ் இலக்கிய உருவாக்கத்தின் தொடக்கத்தில் தமிழ் நாவல் பரப்பில் நிலவிய வறட்சி, அச்சாதனத்தில் சில வளமான முன்னோடி முயற்சிகளை முன்வைக்க க.நா.சு.வின் படைப்பாளுமைக்கு உதவியிருக்கிறது. 1946-ல் வெளிவந்த இவருடைய ‘பொய்த்தேவு’ தமிழ் நாவலின் உயரிய மரபைக் கட்டமைத்த முதல் நாவல்.
ஒவ்வொரு நாவலையும் வெவ்வேறு விதமாக, ஒன்றைப் போல் மற்றொன்று இல்லாமல், எழுதிப்பார்க்கும் உத்வேகத்தோடு செயல்பட்டவர் க.நா.சு. கதைக்களன்களில் புதிய உலகங்களையும், கட்டமைப்புகளில் புதிய பாணிகளையும் அவர் தன்னுடைய ஒவ்வொரு நாவல்கள் மூலமாகவும் உருவாக்கியபடி தன் புனைவுப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார். சோதனை முயற்சிகளாகவும், பல்வேறு வகையினதாகவும் அவர் எழுதிய பிற நாவல்கள்: ‘சர்மாவின் உயில்’, ‘ஏழு பேர்’, ‘ஒருநாள்’, ‘வாழ்ந்தவர் கெட்டால்’, ‘ஆட்கொல்லி’, ‘பெரிய மனிதன்’, ‘அவரவர் பாடு’, ‘மாதவி’, ‘கோதை சிரித்தாள்’, ‘பித்தப் பூ’, ‘தாமஸ் வந்தார்’, ‘அவதூதர்’. எனினும், ‘பொய்த்தேவு’, ‘ஒருநாள்’, ‘அசுரகணம்’, ‘வாழ்ந்தவர் கெட்டால்’ ஆகிய நான்கும் அவருடைய புனைவுவெளிப் பயணத்தின் அரிய கொடைகள்.
‘பொய்த்தேவு’ ஒரு காலத்தை, ஒரு குறிப்பிட்ட பின்புலத்தில் அகப்படுத்திய நாவல். சாத்தனூர் மேட்டுத்தெருவில் சிறுவனாக வளரும் சோமு, சிறுவயதிலேயே தன் சமயோசித சாகசத் திறனால் பிச்சாண்டி என்ற கொள்ளைக்காரனை போலீஸில் பிடித்துக் கொடுக்குமளவு திறமை கொண்டவன். பின்னர், வணிகம், தரகுவேலை எனப் புதிய தொழில் பிரிவுகளில் கவனம் செலுத்தி சோமு முதலியாராக வளர்ச்சி காண்கிறான். பொருள் சேர்ப்பதே வாழ்க்கை என்றாகிவிட்ட நிலையில் குடி, கூத்தி என்பனவும் சேர்ந்துகொள்கிறது. காலம் அதன் பாதையில் வாழ்வின் அர்த்தம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. நித்திய உண்மை பற்றிய ஓர் ஒளி தென்படுகிறது. சோமு முதலியார் சோமுப் பண்டாரமாகிறார். ஒரு காலச்சூழலின் பல்வேறு தளங்களில் பயணப்பட்ட நாவல். இப்பயணத்தினூடாக, ஒரு வளரும் சிற்றூரின் பூகோள அமைப்பு, சமூக அமைப்பு, சாதியப் பிரிவுகள் என அனைத்தும் உயிர்கொண்டிருக்கின்றன. தபாலாபீஸ், ரயில்வே ஸ்டேஷன் போன்றவற்றின் வருகை என காலமும் சமூகமும் வாழ்வும் அடர்த்தியாகப் புனையப்பட்டிருக்கிறது.
அவருடைய நாவல்களில் மிகவும் சிறந்ததாக நான் கருதுவது, ‘அசுரகணம்’. அசுரகணங்களின் மீது மனித மனம் கொண்டிருக்கும் அலாதியான கவர்ச்சியை அற்புதமாக வசப்படுத்தியிருக்கும் நாவல். இப்படைப்பில் புற நிகழ்வுகள் வெகு சொற்பம். அசாதாரணமானவன், விசித்திரமானவன், சிந்தனையாளன் என்றெல்லாம் தன்னைக் கருதிக்கொள்ளும் ஓர் இளைஞனிடம் சுழித்துச் சுழன்றோடும் சுபாவமான எண்ணவோட்டங்களில் இப்படைப்பு உருப்பெற்றிருக்கிறது. ஒரு நிகழ்வின் அடியாக ஒரு எண்ணம் எழுந்து, அது அதன் எல்லா பக்கங்களிலும் விரிந்து பரவி வியாபிக்கிறது. காதல்–காமம் என்ற பீடிப்புகளின் சுழல் பாதையில் விரியும் நாவல். மனித மனத்தில் எவ்விதப் பிரயாசைகளுமின்றி ஓயாது அலையடித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் பிரவாகத்தை அகப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே கலை வடிவம் நாவல். ஒரு சாதனத்தின் தனித்துவமிக்க சிறப்பம்சத்தில் உயிர் கொள்ளும் படைப்புதான் அச்சாதனத்தின் உச்சங்களைத் தொடுகிறது. அவ்வகையில் தமிழில் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று ‘அசுரகணம்’.
க.நா.சு.வின் நூற்றாண்டாக 2012 அமைந்தபோது, அவருடைய பெரும்பாலான படைப்புகளை மீண்டும் வாசிப்பதற்கான ஒரு நல்வாய்ப்பு அமைந்தது. நூற்றாண்டும், படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டிருந்ததும், ராயல்டி தர அவசியமில்லாத படைப்பாளிகளின் படைப்புகளை வெளியிடுவதில் பதிப்பகங்கள் கொண்டிருந்த முனைப்பும் க.நா.சு.வின் படைப்புகள் மீண்டும் சரளமாகக் கிடைக்க வழிவகுத்தன. இச்சமயத்தில் ஓர் அற்புதமென நான் கண்டடைந்த அவருடைய நாவல் ‘வாழ்ந்தவர் கெட்டால்’. அவருடைய நாவல்களில் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கூடியது. இலக்கியத்தில் ‘வேகம்’ என்பதற்கு எதிரான மனோபாவம் கொண்டவர் க.நா.சு. எனினும், இந்நாவலில் வேகம் இயல்பாகக் கூடிவந்திருக்கிறது. இதன் களமும் பரப்பும் சிறியது; பாத்திரங்களும் நிகழ்வுகளும் மிகக் குறைவு. எனினும், அது விரிக்கும் அனுபவப் பெருவெளி பிரமிப்பூட்டக்கூடியது. சிலுவையெனச் சுமந்துகொண்டிருக்கும் இறந்தகால நினைவுகளின் பாரத்தாலும், குற்றம்-தண்டனை, பாவம்–விமோசனம் என்ற மதிப்புகளின் தவிர்க்க முடியா சுமையாலும் அலைக்கழிக்கப்படும் ஒருவன், விபரீதமான ஒரு தருணத்தில் ரயிலின் முன் தன்னைத்தானே எறிந்துகொண்டு இறந்துபோகிறான். அந்த மரணத்துக்குத் தான் காரணமென நினைக்கும் மற்றொருவன் கடும் காய்ச்சல் கண்டு மரணமடைகிறான். வாசிப்பில் நம்மை உலுக்கி எடுக்கும் படைப்பு.
தமிழின் வளமான சிறுகதை மரபின் முன், அவருடைய சமகாலச் சிறுகதை மேதைகளான புதுமைப்பித்தன், மெளனி, கு.ப.ரா. ஆகியோரின் சிறுகதை வளத்துக்கு முன், க.நா.சு.வின் சிறுகதை முயற்சிகள் சாதாரணமாகிவிட்டிருக்கின்றன. மயன் என்ற பெயரில் அவர் மேற்கொண்ட கவிதை முயற்சிகளில் அபூர்வமாகச் சில உயர்கவிதைகள் அமைந்துவிட்டிருக்கிறபோதும், கவித்துவ எழுச்சி கைகூடாமல் பொதுவாகப் பலவீனப்பட்டே இருக்கின்றன. அலங்காரத்தையும் படிமத்தையும் முற்றிலுமாக உதறி, கவிதையை எளிமைப்படுத்த அவர் புதுமுயற்சி எடுத்தபோதும், கவித்துவ உக்கிரத்துக்கான மொழியோ வெளியோ அவருக்கு வசப்படவில்லை. எனினும், நவீனக் கவிதை குறித்து அவர் முன்வைத்த அக்காலத்திய சிந்தனைகளே சமீப ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்திவருகின்றன. படிமத்தை முதன்மைப்படுத்திய ‘எழுத்து’ காலக் கவிதை இயக்கத்தில், படிமம் உட்பட சகல அலங்காரத்தையும் கவிதை துறக்க வேண்டுமென்ற இவருடைய கருத்துகள் மங்கியிருந்தன. ஆனால், இன்று அவையே பிரதானமும் பிரகாசமும் பெற்றிருப்பது அவருடைய கலை நம்பிக்கையையும் தீர்க்கதரிசனத்தையும் உணர்த்துகின்றன.
நவீனத் தமிழ் இலக்கியத்தின் தனிப்பெரும் ஆகிருதி க.நா.சு. என் பணியறையில் கணினி மேஜைக்கு மேலாக, ஓவிய நண்பர் நரேந்திரன் அன்புடன் அளித்த க.நா.சு.வின் உருவ ஓவியம்தான் வீற்றிருக்கிறது. அவரளவுக்குப் பேராற்றலும் பெரும் உழைப்பும் இல்லையென்றாலும் என்னளவில் எளிமையாக இயங்கிக்கொண்டிருப்பதற்கும் சோராது பணியாற்றுவதற்குமான உத்வேகமாக அந்த ஓவியம் இருந்துகொண்டிருக்கிறது.
- சி.மோகன், எழுத்தாளர்.
தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com