Last Updated : 04 Nov, 2018 12:50 AM

 

Published : 04 Nov 2018 12:50 AM
Last Updated : 04 Nov 2018 12:50 AM

நினைவுகள் ஒருவகையில் கொடை.. நினைவுகள் ஒருவகையில் அவஸ்தை! -கலாப்ரியா பேட்டி

தமிழ் சினிமாவுக்குள் வழக்கமான நாயக பிம்பத்தை உடைத்து நுழைந்த ரஜினியைப் போன்றது தமிழ்ப் புதுக்கவிதைக்குள் கலாப்ரியாவின் வருகை. அப்போதுவரை மத்தியதர வர்க்கத்தினரின் பார்வையில் வாழ்க்கையை ஜன்னல் வழியே எட்டிநின்று விசாரித்த கவிதைகளைத் தெருவுக்கு இழுத்துவந்தவர் கலாப்ரியா. ‘எழுத்து’ புதுக்கவிதை மரபும் ‘வானம்பாடி’ கவிதை மரபும் அழகியல்பூர்வமாக இணைந்த இடம் இவருடையது. ‘வெள்ளம்’, ‘தீர்த்தயாத்திரை’, ‘மற்றாங்கே’, ‘எட்டயபுரம்’, ‘சுயம்வரம் மற்றும் கவிதைகள்’ என 1970, 1980-களில் இவர் வெளியிட்ட தொகுதிகள் உள்ளடக்கம்ரீதியாகவும் வெளிப்பாட்டுரீதியாகவும் அரசியல் கூருணர்வுடனும் தமிழ்க் கவிதை புதிய வெளியீட்டைப் பெற்றது. சினிமா எப்படி சமூக மாற்றத்தில் மிகப் பெரிய பங்கு வகித்தது என்பதைத் தன் பால்ய நினைவுகளின்வழி கலாப்ரியா மீட்டெடுத்த ‘நினைவின் தாழ்வாரங்கள்’ இவரது முக்கியமான உரைநடை ஆக்கம். எழுத்துலகுக்குள் நுழைந்து 40 ஆண்டுகள் கழித்து கலாப்ரியாவின் முதல் நாவல் ‘வேனல்’ 2017-ல் வெளியாகியது.

தமிழ்க் கவிதையுலகில் உங்கள் வருகை அதிரடியானது. தொடக்க காலத்தில் எப்படியான விமர்சனங்களை எதிர்கொண்டீர்கள்?

புதிதாகச் சொல்ல வேண்டும் என்பது எல்லோருக்கும் இருக்கக் கூடிய ஆசைதான். சொல்லப்படாத விஷயங்களை ஏன் சொல்லக் கூடாது அல்லது இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லையே என வெளிப்படையாகச் சில விஷயங்களைச் சொல்லலாம் என ஆரம்ப காலத்தில் தோன்றியது. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கை சார்ந்த விஷயங்களில் என் அக்கறை இருந்தது. அதிலிருந்து கிடைத்த அனுபவங்கள், படிமங்களை எழுதினேன். ஜெயமோகன் சொன்னதுபோல வீட்டுக்குள் சாக்கடையைக் கொண்டுவருவதுபோலத்தான் அது பார்க்கப்பட்டது. ஆனால், நிறையப் பேர் அந்த அதிர்ச்சியை, அதிலிருந்த உண்மையை ரசித்தார்கள். சில பேராசிரியர்கள், தீவிர இடதுசாரிகள், அரசியல் சார்ந்த இலக்கியம் படைத்தவர்கள் எதிர்த்தார்கள். பின்னாளில் உண்மையான விஷயத்தைத்தான் ஒளிவுமறைவின்றி வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார் என அவர்களிடமிருந்த எதிர்ப்பும் மங்கிவிட்டது.

சித்திரங்கள் கொண்ட கவிதை பாணியை எப்படித் தேர்ந்தெடுத்தீர்கள்?

ஞானக்கூத்தன், வைத்தீஸ்வரன், கல்யாண்ஜி ஆகியோரின் படிமங்கள் வழியாக வெறுமனே ஒரு காட்சியைச் சொல்வது மாதிரிதான் எனது கவிதைகள் முதலில் இருந்தன. பிரமிளும் படிமக் கவிஞர் என்றாலும் அவர் இவர்களிலிருந்து வித்தியாசமானவர். எனது கவிதைக்கான பாடுபொருள், கருத்துகளை நானும் வாழ்க்கையிலிருந்துதான் எடுத்தேன். எனது அனுபவம் என்பது மிகவும் சிதைவுற்ற வாழ்க்கைத் தரிசனங்களால் ஆனது. அதுபோக மகாபாரதம், கிரேக்கப் புராணங்கள் போன்ற புராணங்களிலும் தொன்மங்களிலும் எனக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது. அதை வாசிக்கும்போது உருவாகும் படிமங்களையும் எனது கவிதைகளில் பயன்படுத்தினேன். ஒருகட்டத்தில் பார்வையில் படுவதையெல்லாமே படிமமாகவே பார்க்கும் பழக்கம் உருவாகிவிட்டது. நான் எதிர்கொள்கிற ஒரு காட்சிக்கு இன்னொரு பக்கம் இருக்கும் என்பது எனக்குத் தோன்றிக்கொண்டேயிருக்கும். அதை மறைமுகமாகக் கோடிகாட்டுவதாகவோ, நேரடியாகச் சொல்லிப் பொருத்துவதாகவோ எனது கவிதையை வடிவமைத்துக்கொண்டேன்.

கவிதையை நீங்கள் எப்படி வரையறுப்பீர்கள்?

கவிதையைப் பொறுத்தவரை வரையறை என்று தீர்மானமாகச் சொல்ல முடியாது. ஒரு கவிதை தன்னைத்தானே எழுதிக்கொள்கிறது என்பது ஒரு பகுதி என்றால், அந்தக் கவிதையை வாசகன் முழுமைப்படுத்திக்கொள்கிறான் என்பது மிச்சப் பகுதி. மற்றபடி, ‘வரையறுத்தல்’ என்றால் அதில் உயிர்ப்பில்லாமல் போய்விடும்.

ஆரம்ப காலத்திலிருந்த உங்களது கவிதை குறித்த நிலைப்பாடு பிறகு வேறொன்றாக மாறியிருக்கும் இல்லையா? என்னென்ன விதமான மாற்றங்கள் உங்களுக்குள் நிகழ்ந்துள்ளன?

ஆரம்ப காலத்தில் காதல் கவிதைகளைத்தான் அதிகமாக எழுதினேன். பிறகு, “கவிதை என்பது மொழி, சமூகம் சார்ந்து இயங்க வேண்டும், அதற்கான பங்களிப்பை வழங்க வேண்டிய பொறுப்பு கவிஞனுக்கு இருக்கிறது” என நெருங்கிய நண்பர்கள் சுட்டிக்காட்டினார்கள். காதல் கவிதைகளில் இருந்த விஷயங்களையே மொழி, சமூகம் சார்ந்ததாக மாற்றிக்கொண்டேன். காதல் தோல்வி எனக்குத் தந்த வலியும் சோகமும், நான் எதிர்கொண்ட மனிதர்களின் வலியைக் காண உதவியது. சொந்த வலியின் உணர்வுகளைச் சக மனித வாழ்வுக்கு விரிவுபடுத்தியபோது வேறொரு வடிவம் கிடைத்தது.

இலக்கியத்துக்கும் சோகத்துக்கும் ஏன் இவ்வளவு இணக்கம்?

தன் வாழ்வில் கண்ட சோகம் ஒரு படைப்பாளியின் மனதைப் பசுமரம்போலவோ களிமண்போலவோ மெல்லிய தன்மையுடையதாக மாற்றிவிடுகிறது. பூமி முக்கால் பங்கு நீராலும் கால் பங்கு நிலத்தாலும் ஆனதுபோல வாழ்க்கையில் சோகம் அதிகப் பங்கை ஆக்கிரமிக்கிறது. எனவே, அந்த சோக பாவம் அதிகமாக இலக்கியத்தில் சொல்லப்படுகிறது.

‘மருத மர நிழல்கள் மீட்டாத தண்டவாளச் சோகங்களை எனக்கேன் நிரந்தரித்தாய் சசி’ தோன்றிய கணங்களை நினைவுகூர முடியுமா?

அந்தக் காலத்தில் சாலை நெடுக மரங்கள் இருந்தன. அதுவும் திருநெல்வேலியின் மருதமரச் சாலைகள் மறக்க முடியாதவை. ஆனால், தண்டவாளங்களுக்கு அருகே மரங்கள் இருக்காது. ரொம்ப அபூர்வமாக ஒரு இடத்தில் மரத்தைச் சந்தித்தேன். தென்காசியிலிருந்து பேட்டை இந்துக் கல்லூரிக்கு நிறைய மாணவர்கள் ரயிலில் வருவார்கள். அவர்கள் ஒருமுறை ஏதோ பிரச்சினை என்று ரயிலை வழியில் நிறுத்தியிருந்தார்கள். அதில் நானும் ஆதரவுக்காகப் போயிருந்தேன். சமாதானம் ஆன பிறகு, கல்லூரி முதல்வர் முன்னால் செல்ல அவருக்குப் பின்னால் வெற்றிப் பெருமிதத்தோடு ஒரு நூறு பேர் நடந்தோம். எங்களுக்குப் பின்னால் நடை வேகத்தில் ரயில் மெதுவாக வந்துகொண்டிருந்தது. அப்போது அபூர்வமாக ஒரு மரநிழல் தண்டவாளம் மீது விழுவதைப் பார்த்தேன். தண்டவாளக் கட்டைகள் வீணைபோலவும், நிழல் அதை மீட்டுவதுபோலவும் தோன்றியது. தண்டவாளம் எங்கேயும் ஒன்றுசேராது என்பதும் தோன்றியது. அந்தக் காட்சி ரொம்ப நாள் என் மனதில் இருந்தது. பிறகு, இதை ஒருதலைக் காதலோடு ஒப்பிடும்படியாக எழுதினேன்.

உங்களது சமீபத்திய கவிதைகளில் ஜென்னுக்கு நெருக்கமான ஒரு தொனி ஒலிக்கிறதே?

‘உளமற்ற தீ’ தொகுப்பிலிருந்து அந்த மாதிரியான விஷயத்துக்குள் சென்றேன். காண்பதை மட்டும் நிகழ்வின் அழகோடு சொன்னால் போதும், அதிலிருந்து மீதியை வாசகன் நிரப்பிக்கொள்ளட்டுமே என்று நினைத்தேன். வெறும் காட்சிகளை மட்டும் வார்த்தை ஓவியமாக எழுத முடிவெடுத்தேன். நீங்கள் சொன்னதுபோல அதன் அழகியலில் ஒரு ஜென் தன்மை இருக்கத்தான் செய்கிறது. நிறைய ஜென் கவிதைகள் வாசித்ததன் பாதிப்பு எனது சமீபத்திய கவிதைகளில் இருக்கிறது; ஆனால், அது ஹைக்கூ அல்ல.

உணர்வுகளற்ற மொழி, வடிவமற்ற கதை, காட்சிகளற்ற கவிதை என இன்னொரு வகைமையும் உருவாகியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நாங்கள் பழையதின் மீதான சலிப்பில் வேறொரு வடிவத்துக்கு வந்ததுபோலப் பிறகு வந்தவர்கள் அதிலிருந்து புதிதாக ஏதாவது செய்ய வேண்டுமென்று விரும்புகிறார்கள். அந்த விருப்பத்தின் வெளிப்பாடுதான் இந்தப் புதிய வகைமை. தேய்வழக்குகளைத் தவிர்த்து அலங்காரமில்லாமல் சொல்லலாம் என்பதாக எதிர்க்கவிதை மாதிரியான இயக்கமெல்லாம் உருவானது.

உங்களது கவிதைகளில் அரசியலுக்குப் பிரதான பங்கு இருக்கிறது. பிற நாடுகளில் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் மட்டுமல்லாமல் நேரடியாகக் களத்திலும் செயல்படுகிறார்கள். ஆனால், நீங்கள் படைப்புகள் தவிர்த்து பிற செயல்பாடுகளில் விலகியிருக்கிறீர்களே?

அப்படி நான் விலகியிருக்கிறேன் என்று சொல்லிவிட முடியாது. கண்டனக் கூட்டங்களில் கலந்துகொள்கிறேன், வேறு அரசியல் நடவடிக்கைகளிலும் எனது பங்கு இருக்கிறது. எனக்குத் திராவிட அரசியல் மீது சாய்வு உண்டு. இடதுசாரி அபிமானியும்கூட. எனது ‘எட்டயபுரம்’ தொகுப்பு முழுவதுமே அரசியல்தான். பூமிக்கடியில் பதுங்கிக்கொண்டிருப்பவர்களை மேலே கொண்டுவர எத்தனித்த முயற்சிதான் அந்தத் தொகுப்பு. நானாக எதுவும் முன்னெடுத்ததில்லையே தவிர, அரசியல் செயல்பாடுகளில் தயக்கம் காட்டியதில்லை. எல்லோருடனும் எனக்கு நல்ல உறவு இருக்கிறது. அரசியல் எனக்கு அந்நியம் அல்ல.

உங்களுக்குள் ஒரு சேகரிப்பாளர் இருக்கிறார். உங்கள் நினைவுகளை வெவ்வேறு வடிவங்களில் பத்திரப்படுத்துபவராக இருக்கிறீர்கள். இந்தப் பழக்கம் எப்படி வந்தது?

என் அப்பாவிடமிருந்து வந்திருக்கக்கூடும். ‘டைம் கேப்சியூல்’ என்பார்கள். இன்றைய விஷயங்களைப் பின்னால் வருபவர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதற்காக ஒரு பெரிய கேப்சியூலுக்குள் வைத்து பூமிக்கு அடியில் புதைப்பார்கள். அதுபோல, என் அப்பா என்ன செய்வாரென்றால் புகைப்படங்களை ஃபிரேம் செய்யும்போது அன்றைய காலண்டர் தாளையோ செய்தித்தாளையோ புகைப்படத்துக்குப் பின்னால் வைத்துவிடுவார். கல்யாணப் பத்திரிகைகள், கணக்கு வழக்குகள் என்று நிறைய விஷயங்களைப் பத்திரப்படுத்திவைக்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. நானும் அப்படித்தான். எனக்குப் பிறகு அந்த நினைவுகளெல்லாம் என்னவாகும் என்பது பெரிய கேள்வி. இடமும் பிரச்சினையாக இருக்கிறது. இதெல்லாம் வேண்டாம் என 100 விஷயங்களைக் கழித்துவிட எடுத்துவைத்தால் அதில் ஒன்றைத்தான் தூரப்போட மனம் வருகிறது.

நினைவுகள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம்?

நினைவுகள் என்பது ஒருவகையில் கொடை, இன்னொரு வகையில் அவஸ்தைதான். நினைவுகள் எனக்குப் படகுகள்போல. ஒரு விஷயத்தை நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் அதோடு இன்னொரு எளிய பிடித்தமான விஷயத்தை இணைத்து வைத்துக்கொண்டீர்களென்றால் அது மறக்காது என்று சொல்வார்கள். நான் சினிமாக்களைக் கொண்டு நிகழ்ச்சிகளை ஞாபகப்படுத்தி வைத்திருக்கிறேன். 1963 தீபாவளிக்கு என்ன சட்டை போட்டிருந்தேன் என்பதுகூட எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதை அணிந்துகொண்டுபோன ‘பரிசு’ சினிமாவோடு இணைத்துவைத்திருக்கிறேன்.

மனிதர்களின் நினைவுகளையெல்லாம் துடைத்தெடுத்து விடலாம் என்று சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

என்னால் முடியாது. நினைவுகளை என்னிடமிருந்து எடுத்துவிட்டால் நான் ஒரு காய்கறிபோல ஆகிவிடுவேன். நடமாடும் பிணமாகத்தான் இருப்பேன். தாராளமாக உறுப்புதானம் செய்துவிடலாம்; குறிப்பாக மூளையை!

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x