Published : 10 Nov 2018 08:24 AM
Last Updated : 10 Nov 2018 08:24 AM

இணையகளம்: விஜய்ண்ணாவும் முருகதாஸ்ண்ணாவும் பிறந்திராத நாட்களில் நடந்த வரலாறு!

1966 நவம்பர் மூன்றாவது வாரத்தில் வெளியான ஒரு செய்தி: ‘கொட்டும் மழையில் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் வரிசையில் நிற்கிறார்கள். சிலரிடம் மறைத்துக்கொள்ளக்கூட எதுவும் இல்லை.’ இப்படித்தான் இருந்தது அப்போது நிலைமை. அந்தக் காலகட்டத்தில் நடிகர் விஜய் பிறந்திருக்கவில்லை.

1965-ல் மிகப் பெரிய உணவு தானிய பஞ்சத்தை இந்தியா எதிர்நோக்கியிருந்தது. 1964-65-ல் 89.4 மில்லியன் டன்னாக இருந்த தானிய உற்பத்தி

65-66-ல் 72.3 மில்லியன் டன்களாகக் குறைந்திருந்தது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் தண்ணீர்ப் பற்றாக்குறை. கேட்கவும் வேண்டுமா?

இந்தத் தருணத்தில்தான் தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1966 நவம்பர் 16-ல் இந்தத் திட்டம் வந்தது. ஆனால், எல்லா குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் கிடைக்கவில்லை. 1967-ல் முதலமைச்சரானார் அண்ணா. தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி ரூபாய்க்கு 3 கிலோ அரிசி திட்டத்தை அவரால் செயல்படுத்த முடியவில்லை. ஆனால், அப்போதுதான் தமிழக நிர்வாகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நடந்தது என்கிறார் இந்தியாவின் நிதி மற்றும் பொருளாதாரத் துறை செயலராக இருந்து ஓய்வுபெற்ற எஸ்.நாராயண்.

தமிழ்நாட்டில் சமூகநலத் திட்டங்களின் பார்வையையும் செயல்படுத்தப்படும் முறையையும் அண்ணா மாற்றினார். அதுவரை திட்டங்கள் மேலே திட்டமிடப்பட்டு, கீழ்நோக்கிச் செயல்படுத்தப்படுவது வழக்கம். அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியில்தான் கீழிருந்து மேல் நோக்கி திட்டங்களைத் தீட்டும் பார்வை உருவானது என்கிறார் நாராயண்.

1969-ல் கருணாநிதி முதல்வரானார். 1972-ல் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் தொடங்கப்பட்டது. 1975-க்குள் அனைத்துக் குடும்பங்களுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுவிட்டன.

அண்ணா வழியில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா என்று இரு திராவிடக் கட்சிகளின் ஆட்சியாளர்களும் அடுத்தடுத்த சமூகநலத் திட்டங்களைக் கொண்டுவந்தனர். அரிசிக்காகத் தொடங்கப்பட்ட அமைப்பின் மூலமாகவே சர்க்கரை, மண்ணெண்ணெயும் வழங்கப்பட்டன. குடும்ப அட்டையை வைத்தே கலர் டிவி, மிக்ஸி, கிரைண்டர் ஆகியவையும் வழங்கப்படுகின்றன. அரசின் பல நலத் திட்டங்கள் இந்த அட்டையின் மூலம் செயல்படுத்தப்படுகின்றன.

ரேஷன் கார்டுகளுக்காக அடிதடியில் ஈடுபட்ட காலம் மாறி, வருவாய்க்கேற்றபடி வெவ்வேறு வண்ணங்களில் ரேஷன் கார்டுகள், பொருட்களே வழங்கப்படாத ரேஷன் கார்டுகள் வரை வந்துவிட்டன. மக்கள்தொகையின் பெரும் பகுதி அரிசி வாங்க ரேஷன் கடைகளைச் சார்ந்திருந்த காலம் இன்று மாறியிருக்கிறது.

1970-76 காலத்தில் மாநிலத்தின் உற்பத்தி 17% அதிகரித்தது. தனிநபர் வருவாய் 30% அதிகரித்தது.

1971-ல் 39.5% ஆக இருந்த எழுத்தறிவு, 1981-ல் 54.4% ஆக மாறியது. வறண்ட நிலங்களுக்கு நில வரி ஒழிக்கப்பட்டது. 1980-ல் கொண்டுவரப்பட்ட சட்டத்தால் பரம்பரைக் கர்ணம் முறை ஒழிக்கப்பட்டது. இதையெல்லாம் இடஒதுக்கீட்டை வைத்து, ‘தகுதி’ இல்லாமல் வேலைக்குச் சேர்ந்தவர்களே செய்தார்கள்.

சமூகநலத் திட்டங்கள் என்றால் என்ன, தமிழ்நாட்டில் அவை எப்படியெல்லாம் சமூகத்தின் வளர்ச்சியில் தாக்கங்களை உண்டாக்கின என்பதை உண்மையிலேயே அறிந்துகொள்ள வேண்டியவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய முக்கியமான புத்தகம் ‘டிரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்டு வெல்ஃபேர் இன் தமிழ்நாடு’ (Dravidian Years: Politics and Welfare in Tamilnadu). நூலாசிரியர் எஸ். நாராயண். முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பொருளாதார ஆலோசகராக இருந்தவர்; நாட்டின் பல்வேறு மாநிலங்களின் நிர்வாகம் தொடர்பில் ஆழ்ந்த அறிவு கொண்டவர் என்பது புத்தகத்துக்குக் கூடுதல் மதிப்பு சேர்க்கிறது.

 - முரளிதரன் காசி விஸ்வநாதன்

டிரவிடியன் இயர்ஸ்: பாலிடிக்ஸ் அண்டு வெல்ஃபேர் இன் தமிழ்நாடு

எஸ்.நாராயண்

ஓயூபி இந்தியா வெளியீடு

விலை: ரூ.550

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x