Published : 03 Nov 2018 09:46 AM
Last Updated : 03 Nov 2018 09:46 AM

நூல் நோக்கு: ஏவாளான காந்தியின் கதை

கதை வடிவில் காந்தியை வடிப்பது சவாலான ஒன்று. காந்தி குறித்த மதிப்பீடுகளுடன் எழுத்தாளனின் கற்பனையும் மோதிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த மோதல் மதிப்பீடுகளுக்குப் புதிய உருவம் அளிக்கின்றன. அவற்றைக் கூர்ப்படுத்துகின்றன. இவ்விளையாட்டில் வெற்றிபெற்றிருக்கிறது ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல். இந்நாவல் காந்தியின் பிரம்மச்சரிய பரிசோதனையைக் களமாகக் கொண்டிருக்கிறது. அனைத்து ஒடுக்குமுறைகளுக்கும் காமமே காரணமாகிறது. காமத்தை வெல்லும் ஒருவன் பெண்ணாக மாறுகிறான். அம்மாற்றம் சமூகத்தில் நிலவும் பால்பேதத்தையும் அதனால் எழும் வன்முறையையும் ஒடுக்கச் செய்யும் என்பதைத் தன் வாழ்வின் வழியே சோதனைசெய்து நிரூபிக்க விரும்புகிறார் காந்தி. அச்சோதனைகளே நாவலாக விரிவுகொள்கிறது. சபிக்கப்பட்ட கனியை உண்பதற்கு முன் ஆதாமும் ஏவாளும் நிர்வாணமாய் வாழ்கின்றனர். அந்தக் குறுகிய காலத்தில் காந்தியின் உருவத்தைப் பொருத்தி பரிசோதனைகளை நிகழ்த்தியிருக்கிறார் சரவணகார்த்திகேயன்.

- கிருஷ்ணமூர்த்தி

ஆப்பிளுக்கு முன்

சி.சரவணகார்த்திகேயன்

உயிர்மை பதிப்பகம், சென்னை-18.

விலை: ரூ.170

தொடர்புக்கு: 044-24993448

எண்ண அலைகளை ஈர்க்கும் இரண்டாம் சுற்று

இந்திய ஆட்சிப் பணித் தேர்வு முழுவதும் தமிழில் எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்று ஆட்சிப் பணியில் நுழைந்தவர் ஆர்.பாலகிருஷ்ணன். சிந்துவெளிப் பண்பாடு செழித்த ‘கொற்கை, வஞ்சி, தொண்டி’ வளாகத்தை ஆய்வுலகின் கவனத்துக்குக் கொண்டுவந்தவர். அவருடைய சமீபத்திய ‘இரண்டாம் சுற்று’ நூலில், தான் பயணித்த இடங்கள், சந்தித்த மனிதர்கள், சம்பவங்கள் என இரண்டாம் முறையாக எதிர்கொண்டதை நுட்பமாகப் பதிவுசெய்துள்ளார். தமிழே பாதையும் பயணமுமாய் இலக்காகவும் இருக்கும் தமிழ் நெடுஞ்சாலையில் பயணம் தொடங்குகிறது. பாலகிருஷ்ணன் எந்தத் துறையில் நுழைந்திருந்தாலும் நட்சத்திரமாக மின்னக்கூடியவர். இந்தப் புத்தகமும் அவரது இன்னொரு சாதனை. சாதாரணக் குடும்பத்திலிருந்து சாதனையாளர்கள் உருவாகிய விதத்தை அறிய உதவும் நல்லதொரு தன்வரலாற்று நூல்.

- சாரி

இரண்டாம் சுற்று

ஆர்.பாலகிருஷ்ணன்

பாரதி புத்தகாலயம்

தேனாம்பேட்டை, சென்னை - 18.

விலை: ரூ.240

தொடர்புக்கு:

 044-24332424

கர்நாடக தலித்துகளின் வரலாறு

தமிழக அரசின் தொல்லியல் துறையில் உதவி இயக்குநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தி.சுப்பிரமணியன் பல்வேறு அகழாய்வுப் பணியில் ஈடுபட்டவர். தொல்லியல் சார்ந்த பல்வேறு நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவரது புதிய நூல் ‘முரசுப் பறையர்’. தமிழக சாதிய அமைப்புகளில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அண்டை பிராந்தியங்களின் சாதிகளும் இணைந்திருக்கின்றன. இப்படிப் பிணைப்பு கொண்ட சமூகம் பற்றிய இனவரைவியலாக இந்நூல் எழுதப்பட்டிருக்கிறது. இந்த நூலில், கர்நாடகத்திலிருந்து தமிழ்நாடு வந்துசேர்ந்த தலித்துகளின் வரலாறு, பண்பாடுகள் போன்றவற்றை விவரிக்கிறார். முரசு நாடு குறித்து களஆய்வு மேற்கொண்டு எழுதப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு புதிய உரையாடலுக்கு வித்திடுகிறது.

- ரா.பாரதி

முரசுப் பறையர்

தி.சுப்பிரமணியன்

அடையாளம் பதிப்பகம்

புத்தாநத்தம்,

திருச்சி - 621310.

விலை: ரூ.150

தொடர்புக்கு:

04332 273444

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x