Published : 03 Nov 2018 09:51 AM
Last Updated : 03 Nov 2018 09:51 AM

திருவண்ணாமலையில் ஞான தீபம்!

திருவண்ணாமலையில் ஞான தீபம்!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் - பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நூல் மேம்பாட்டுக் குழுமம் இணைந்து நடத்தும் 2-வது ‘திருவண்ணாமலை புத்தகத் திருவிழா’ நவம்பர் 9 வரை வேங்கிக்காலிலுள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. ‘இந்து தமிழ்’ வெளியீடுகள் அரங்கு எண் 42-ல் கிடைக்கும். ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு வெவ்வேறு துறையைச் சேர்ந்த ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். இந்த தீபாவளியைப் புத்தகங்களோடும் கொண்டாடுவோம்!

வாசகசாலை விருதுகள்

தமிழகத்தின் சின்னஞ்சிறு நகரங்கள் வரையில் புத்தக விமர்சன நிகழ்வுகளையும் விவாதங்களையும் கொண்டுபோய்ச் சேர்த்திருக்கிறது வாசகசாலை இலக்கிய அமைப்பு. கடந்த மூன்று ஆண்டுகளாகச் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு விருதளித்துப் பாராட்டியும் வருகிறது. இந்த ஆண்டு, டிசம்பர் மாதம் நடத்துகிற முப்பெரும் விழாவில் சிறந்த கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாவல், சிறுகதைத் தொகுப்பு, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு மற்றும் சிறந்த எழுத்தாளர் ஆகிய எட்டு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. விருது பெறும் படைப்பாளிகளுக்கு விருதோடு சேர்த்து ரூ.5,000 பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது. வாசகர்களைக் கொண்ட தேர்வுக்குழுவின் மூலம், பரிசீலனைக்கு வரும் அனைத்து படைப்புகளையும் படித்து விவாதித்து விருதுகள் வழங்குவது வாசகசாலையின் சிறப்பு. படைப்புகள் அனுப்ப வேண்டிய இறுதித் தேதி நவம்பர் 7.

தொடர்புக்கு: vasagasalai@gmail.com

சேலத்தில் புத்தகத் திருவிழா

சேலம் மாவட்ட நிர்வாகம் நடத்தும் மாபெரும் புத்தகத் திருவிழாவுக்குத் தயாராகுங்கள் சேலம்வாசிகளே. பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள சேலம் போஸ் மைதானத்தில் நவம்பர் 9 தொடங்கி 11 வரை நடைபெறவிருக்கிறது. ஒவ்வொரு நாளும் காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை புத்தகக்காட்சி நடைபெறும்.

மு.ராஜேந்திரனுக்கு மலேசிய அங்கீகாரம்

எழுத்தாளரும் வரலாற்று ஆய்வாளருமான மு.ராஜேந்திரன் எழுதிய ‘1801’ நாவலுக்கு மலேசியாவின் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியத்தின் சிறந்த அனைத்துலகத் தமிழ்ப் படைப்புக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.6.5 லட்சம் பரிசுத் தொகையை உள்ளடக்கியது இந்த விருது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெறவுள்ள இலக்கிய விழாவில் பரிசு வழங்கப்படும்.

தேவதச்சனுக்கு கவிக்கோ விருது

தமிழ் நவீனக் கவிதையுலகில் ஏறக்குறைய 35 ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கிவரும் கவிஞர் தேவதச்சனுக்கு அப்துல் ரகுமான் அறக்கட்டளையின் கவிக்கோ விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர் 9 அன்று வேலூரில் நடக்கும் விழாவில் ரூ.1 லட்சம் பொற்கிழியுடன் கூடிய விருது வழங்கப்பட உள்ளது.

தொகுப்பு: மு.முருகேஷ், த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x