

நாகை திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த பா.சரவணகுமரனின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. திருமணம் தள்ளிப்போகும் இளைஞனின் ஏக்கங்கள், அவன் மண் சார்ந்த நினைவுகள் என இரண்டு தளங்களில் எழுதப்பட்ட இயல்புவாதச் சிறுகதைகள்.
மகள் பருவம் எய்தியதும் கள்ளுக்கடையை மூடிவிட்டு தார்ச்சாலை போடும் வேலைக்குப் போகும் பரமேஸ்வரி, மகளின் திருமணத்துக்காக விற்ற ‘மாரியம்மா’ செல்லும் வழியில் இறந்துவிட மாடு வாங்கியவருக்குப் பணத்தைத் திருப்பிக்கொடுக்கும் சின்னச்சாமி என உழைப்புக்கும் பெருந்தன்மைக்கும் உதாரணங்களாக விளங்கும் காவிரிப் படுகையின் கதாபாத்திரங்கள், கதைகள் நெடுகிலும் கலந்திருக்கிறார்கள்.
பொங்கலுக்காக திருக்கண்ணங்குடிக்குப் போய் சென்னை திரும்பும் சத்தியநாதனின் நினைவுகளில் எல்லாம் கபடி, மஞ்சத்தண்ணி, கள்ளிவட்டம், ராஜேஸ்வரி என கிராமமே நிறைந்திருக்கிறது. எல்லாக் கதைகளிலும் அதே சத்தியநாதன்தான் வெவ்வேறு பெயர்களில் உலாவருகிறான். கூடவே, காவிரிப்படுகையின் நிலவெளியும், மனிதர்களும், அவர்களின் மனங்களும்.
மீண்டும் தமிழுக்கு வரும் ஜேம்ஸ் பாண்ட்
உள்ளங்கவர் உளவாளியாம் ஜேம்ஸ் பாண்ட், நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்; முற்றிலும் புதிய வடிவில். வண்ணச் சித்திரங்கள் கொண்ட இந்த காமிக்ஸ் கதை, ஷான் கானரி காலத்து ஜேம்ஸ் பாண்ட் படங்களைப் போலன்றி, டேனியல் க்ரெய்க் பாணி படங்களைப் போல் ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகளைக் கொண்டது.
அதேசமயம், அதிக விவரணைகள், வசனங்கள் இல்லாமல் காட்சிகள் மூலமே கதை நகர்கிறது. போதைப்பொருள் கும்பலைக் கண்டுபிடிக்கச் செல்லும் 007, மொத்தக் கும்பலையும் துவம்சம் செய்கிறார். முத்தமிட்டே கதை முடிக்கக் காத்திருக்கும் அழகிய ஆபத்துகளும் உண்டு. வன்முறை சற்றுச் தூக்கல் என்பதைத் தவிர, குறையொன்றும் இல்லை.