Published : 18 Nov 2018 09:10 am

Updated : 18 Nov 2018 09:10 am

 

Published : 18 Nov 2018 09:10 AM
Last Updated : 18 Nov 2018 09:10 AM

பாபு இளைப்பாறட்டும்

தன்யாவுக்கு வயது

எட்டு நாட்கள்


இன்குபெட்டரிலிருந்து

ஆறாவது நாளில்

வெளியே வந்தாள்

கால்கண்கள் திறந்தநிலையில்

உங்களைத்தான் பார்க்கிறாள்

என்கிறாள்

அவள் அம்மா

உடலெங்கும்

ட்யுப்களால்

பேசிக்கொண்டிருப்பவள்

அரை குறையாய்ப்

பற்றிக்கொள்கிறாள்

சுண்டுவிரலை

ஐயோ தன்யா

இந்தச் சுண்டுவிரலை

கெட்டியாய்ப் பிடித்துக்கொள்ளேன்

என்னைக் காப்பாற்றேன்

- வே.பாபு

கவிஞர் வே.பாபு மறைந்துவிட்டார். 1974-ல் பிறந்த பாபு தொண்ணூறுகளின் பிற்பகுதியிலிருந்து கவிதைகள் எழுதிவந்தவர். எனினும், 100-க்கும் குறைவான கவிதைகளையே எழுதியுள்ளார். ‘தக்கை’ சிற்றிதழின் ஆசிரியர்களுள் ஒருவர்.

பாபுவின் கவிதைகள் எளியவை. சமத்காரங்கள் அற்றவை. உணர்ச்சிகரம் என்கிற ஒன்றைத் தவிர அதனிடம் வேறு ஆபரணங்கள் ஏதுமில்லை. இந்த நோக்கில் அந்தக் கவிதைகளைப் பலகீனமானவை என்று சொல்லிவிடலாம். ஆனால், எல்லா தருணங்களிலும் பலத்தால் மட்டுமே பிரகாசித்துவிட முடியாது. பலகீனம் பளீரிடும் தருணங்களும் உண்டு. அங்கு துலங்குபவை அவன் சொற்கள். அவை தன் எளிய உடலால் வலிய மனங்களையும் அசைத்துப்பார்த்தன. தாமிரபரணி படுகொலை, ஈழப் போராட்டம், வர்க்க முரண்கள் என்று சில கவிதைகள் எழுதியபோதும் பாபு ஒரு எளிய லெளகீகக் கவிதான். லெளகீகம் அவ்வளவு எளிதில்லை என்பது கூடவே சொல்லியாக வேண்டிய ஒன்று.

‘தக்கை’ அமைப்பின் வழியாக பாபு ஒருங்கிணைத்த இலக்கியக் கூட்டங்களுக்குத் தனிச் சிறப்புகள் உண்டு. வேறு வேறு நிலைப்பாடுகள் உடைய எழுத்தாளர்களையும் பாபுவால் எளிதாக ஒன்றிணைக்க முடிந்தது. மிகச் சுதந்திரமான இந்தக் கூட்டங்கள் சேலம் சிவா லாட்ஜில் நடக்கும் அல்லது அதை மையப்படுத்தி அருகில் எங்காவது நடக்கும். அந்த விடுதியின் வராந்தாவிலும், மொட்டைமாடியிலும் மலைகளைப் பார்த்தபடி அமர்ந்து, விடிய விடிய பேசிக் களித்த பொழுதுகளை மறப்பது கடினம். அங்கு புதிதாக வந்துசெல்லும் இளம் எழுத்தாளன்கூட அடுத்த சில நாட்களில் அன்றாட வாழ்க்கையில் ஒன்ற முடியாது வினோதத் துயரங்களுக்கு ஆளாவதைக் கண்டிருக்கிறேன். அப்படி அந்த விடுதி முழுக்க மகிழ்ச்சி வியாபித்திருக்கும். “நீ ஒரு எழுத்தாளன்; வேறு ஒன்றுமில்லை” என்று அது உறுதிபடச் சொல்லிவிடும்.

பாபுவின் நினைவேந்தல் உரையில் செல்மா ப்ரியதர்சன் சொன்னதுபோல, “செயல்முனைப்பும், தன்முனைப்பும் அவ்வளவு எளிதாகப் பிரிக்க முடியாதவை.” ஆனால், பாபுவால் இயல்பாகவே தன்முனைப்பிலிருந்து விலகி நிற்க முடிந்திருக்கிறது. அவன் அரும்பாடுபட்டு ஒருங்கிணைக்கும் கூட்டங்களில் ‘ஒருங்கிணைப்பு’ என்று வேறு யாராவது ஒருவரின் பெயரே இருப்பது வழக்கம். மேடையும் அவர் வசமே இருக்கும். பாபு கடைசி வரிசையிலோ அல்லது மதிய உணவுக்கான ஏற்பாடுகளிலோ இருப்பார்.

பாபுவின் நிறையக் கவிதைகளில் ஒரு முன்னறிவிப்புபோல மரணம் தொடர்ந்து பேசப்பட்டுவந்திருக்கிறது. கூடவே, ஒரு சிறுமியும் வருகிறாள். இனி அந்தச் சிறுமியின் மடிதனில் அவன் இளைப்பாறட்டும்.

- இசை, கவிஞர். தொடர்புக்கு: isaikarukkal@gmail.comSign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x