Published : 17 Nov 2018 08:46 am

Updated : 17 Nov 2018 08:46 am

 

Published : 17 Nov 2018 08:46 AM
Last Updated : 17 Nov 2018 08:46 AM

2019 சென்னை புத்தக்காட்சி: இம்முறை 17 நாட்கள்!

2019-17

அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபெறும் உலகின் மிகப் பெரும் புத்தகக்காட்சிகளில் ஒன்றான ஷார்ஜா புத்தகக்காட்சியில் முதல் முறையாகப் பங்கேற்றுவிட்டுத் திரும்பியிருக்கும் பபாசி, உற்சாகத்தோடு சென்னைப் புத்தக்காட்சிக்கான ஆயத்தங்களில் இறங்கியிருக்கிறது. நிறைய மாற்றங்களுக்குத் திட்டமிட்டிருக்கிறார்கள். முதல் மாற்றம்: 2019 சென்னை புத்தகக்காட்சி 17 நாட்களாம்! ஜனவரி 4 முதல் 20 வரை நடக்கிறது. செம திருவிழாதான்!

மன்றம்: தமிழின் அறிவுவெளி


அனைத்து வகையான அறிவுத் துறைகளைப் பற்றியும் தமிழில் பேசவும் விவாதிக்கவும் முடியாதா என்ன? அதற்கு ஓர் வடிவம் கொடுக்க முயன்றிருக்கிறார்கள் பசுமைப் புரட்சியின் கதையை எழுதிய சங்கீதா ஸ்ரீராம், வெங்கட்ராமன் இருவரும். சிந்தனையாளர்களையும் சாதனையாளர்களையும் ஒருங்கிணைத்து அவர்கள் கருத்துகளைப் பதியும் முயற்சி, ‘மன்றம்’. இருபது நிமிட கருத்துக்கோவைகளை ஒளிப்பதிவு செய்து இணையத்தில் காணொலிகளாகவும் வெளியிடவிருக்கிறார்கள். யோகா, கணினி நுண்ணறிவு, நீதித் துறை, சுயதொழில் வாய்ப்புகள், ஆட்டிசம் முதலான பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் தொடர்கின்றன.

சிறந்த தமிழ் மின்னூலுக்கு ரூ.5 லட்சம் பரிசு

அமேசான் கிண்டிலில் வெளியிடப்படும் சிறந்த புதிய தமிழ்ப் படைப்புக்கு ரூ.5 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. போட்டிக்கு அனுப்பப்படும் நாவல், சிறுகதை அல்லது கவிதைகள் 10,000 வார்த்தைகளுக்கு மேற்பட்டதாகவும் இதுவரை பிரசுரமாகாத புதிய படைப்பாகவும் இருக்க வேண்டும். இது தவிர 2,000 வார்த்தைகளிலிருந்து 10,000 வார்த்தைகளுக்கு இடைப்பட்ட ஒரு படைப்புக்கு ரூ.50,000 பரிசும் வழங்கப்படும். வாசகர்களால் தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகளிலிருந்தே இறுதிப் போட்டிக்கான சுருக்கப்பட்டியல் தயாராகிறது என்பது இந்தப் போட்டியின் சிறப்பம்சம். போட்டியில் கலந்துகொள்ள நவம்பர் 10 முதல் பிப்ரவரி 9, 2019-க்குள் அமேசான் தளத்தில் புதிய மின்னூல்களை வெளியிட வேண்டும்.

ராஜபாளையத்தில் புத்தகக்காட்சி

மீனாட்சி புக் ஷாப்பும் ‘இந்து தமிழ்’ நாளிதழும் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி ராஜபாளையத்தில் களைகட்டத் தொடங்கியிருக்கிறது. நவம்பர் 14 அன்று தொடங்கிய புத்தகக்காட்சி நவம்பர் 25 வரை நடைபெறுகிறது.

இடம்: காந்தி கலை மன்றம், ராஜபாளையம்.

‘இந்து தமிழ்’ வெளியீடுகளை இந்தப் புத்தகக்காட்சியில் வாங்கிக்கொள்ளலாம்.

தாமிரபரணிக் கரையில் இலக்கியப் புஷ்கரம்

தமிழில் நாட்டுப்புறவியல் குறித்த நூல்களின் மீது கவனத்தை உண்டாக்கியவர் பேராசிரியரும் பதிப்பாளருமான காவ்யா சண்முகசுந்தரம்.

1980-களில் காவ்யா பதிப்பகத்தைத் தொடங்கியவர், இதுவரை 1200-க்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளாகத் தனது தந்தையார் கால்கரை வெ.சுடலைமுத்துத் தேவரின் நினைவுநாளில் தாமிரபரணித் தமிழ்த் திருவிழாவை நடத்தி, பல்வேறு நூல்களை வெளியிட்டுவருகிறார். நவம்பர் 20-ல் நெல்லை சந்திப்பிலுள்ள ஓட்டல் ஜானகிராமில் 15-ம் ஆண்டு நினைவு விழா நடைபெற உள்ளது. இதில், நெல்லையைச் சேர்ந்த 11 எழுத்தாளர்களின் 12 நூல்களை வெளியிடவிருக்கிறார்.

சிறார்களை ஈர்க்கும் ‘ஆல்’ நூல் வரிசை

பாரம்பரிய மையங்கள் என்று யுனெஸ்கோ அறிவித்திருக்கும் இந்தியாவின் 8 இயற்கைச் சின்னங்களையும் 29 பண்பாட்டுச் சின்னங்களையும் பற்றிய சிறார் நூல்வரிசையை வெளியிட்டுவருகிறது மாப்பின் வெளியீட்டகம். கதை வடிவில் வண்ணச் சித்திரங்களை உள்ளடக்கிய இந்த ஆங்கில நூல்களைத் தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறது ‘ஆல்’ பதிப்பகம். மகாபலிபுரம், சாஞ்சி, குதுப்மினார், கேவலாதேவ் பறவைகள் சரணாலயம், சத்ரபதி சிவாஜி ரயில்முனை பற்றிய நூல்கள் தி.அ.சீனிவாஸனின் மொழிபெயர்ப்பில் தற்போது வெளியாகியுள்ளன. உள்ளடக்கம், ஓவியங்கள், வடிவமைப்பு என்று இந்தப் புத்தகங்கள் சிறார்களை மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும்வகையில் அமைந்திருக்கின்றன. தொடர்புக்கு: 96777 78863

தொகுப்பு: மானா பாஸ்கரன்,

மு.முருகேஷ், த.ராஜன்


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x