

சச்சின் டெண்டுல்கர் எடுத்த 99 ‘செஞ்சுரி’கள் தொடர்பான தகவல்களைக் கொண்டு ஓவியர் சந்தோஷ் நாராயணன் உருவாக்கிய ஓவியம், சச்சினின் கைகளுக்குச் சென்றிருக்கிறது. ‘டைப்போகிராஃபி’ வகையைச் சேர்ந்த அந்த ஓவியத்தை ‘ஸ்போர்ட்ஸ்டார்’ இதழின் ஆசிரியர் சச்சினுக்குப் பரிசாக வழங்கியிருக்கிறார். ஓவியத்தில் இருந்த தகவல்களைப் பார்த்து அதிசயித்த ‘கிரிக்கெட் கடவுள்’, மிக அருமையான படைப்பு என்று பாராட்டினாராம். சந்தோஷத்தில் திளைக்கிறார் சந்தோஷ்!
திக்கெட்டும் ஒலிக்கும் ‘முரசு’ சத்தம்
மீனாட்சி ரெட்டி மாதவன் தனது 16 வயதிலேயே எழுத்தாளராக வேண்டுமென முடிவெடுத்தவர். மகாபாரதத்தின் பெண் பாத்திரங்களை மையமாகக் கொண்டு தொடர் நாவல்கள் எழுதத் திட்டமிட்டிருக்கிறார் மீனாட்சி. அதன் முதல்கட்டமாக சத்யாவதியைக் கொண்டு எழுதிய ‘தி ஒன் ஹூ ஸ்வாம் வித் தி ஃபிஷ்ஷஸ்’ நாவல் கடந்த ஆண்டு வெளியாகியது. அம்பையை வைத்து அடுத்த நாவல் எழுதிக்கொண்டிருக்கிறார்.
மெட்ராஸ் காதல்
மெட்ராஸின் அடையாளங்களாக விளங்கும் திரையரங்குகள், வடசென்னையின் கால்பந்து, இசை, நிலப்பரப்பு என செறிவான கட்டுரைகள், கலைநயமிக்க புகைப்படங்கள், சர்வதேசப் பத்திரிகைகள் போன்ற வடிவமைப்புடன் வெளிவந்திருக்கிறது ‘தி மெட்ராஸ் மேகஸின்’ ஆங்கில இதழ்.
பத்திரிகைத் துறை மீது ஆர்வம் கொண்ட புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் அருண்பிரசாத் இந்த இதழை அழகுற உருவாக்கியிருக்கிறார். மெட்ராஸ் மேகஸின் இணையதளம்: https://madrasmagazine.wordpress.com