Published : 27 Oct 2018 10:32 AM
Last Updated : 27 Oct 2018 10:32 AM

ஆத்மாநாம் விருதுகள் - 2018

ஆத்மாநாம் விருதுகள் - 2018

ஆத்மாநாமின் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையில் ‘கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’ மூலமாக 2015 முதல் அவரது பெயரில் விருது வழங்கப்பட்டுவருகிறது. 2018-க்கான ஆத்மாநாம் விருதுகள் போகன் சங்கர், கார்த்திகைப் பாண்டியன், அனுராதா ஆனந்த் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக மராத்திய கவிஞர் சந்திரகாந்த பாட்டிலும் தமிழின் மூத்த படைப்பாளிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஆங்கிலத்தில் ரவிசுப்பிரமணியன் கவிதைகள்

தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு நல்ல கவிதைகள் மொழிபெயர்ப்பாவது அபூர்வமாகவே நிகழும். சீராகவும் தரமாகவும் எழுதிவரும் நவீன கவிஞர்களில் ஒருவரான ரவி சுப்ரமணியனின் 51 கவிதைகள் ‘தட் வாஸ் எ டிஃபரெண்ட் சீசன்’ (That Was a Different Season) நூலாக ஆங்கிலத்தில் வெளியீடு கண்டுள்ளதை முக்கியமான ஒன்றாகவே சொல்ல வேண்டும். பேராசிரியர் ஆர்.ராஜகோபாலன் இதை மொழிபெயர்த்துள்ளார்.

கொங்கு வரலாறு பேசும் ‘சிலுவை’

எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் தனது 17-வது நாவலை எழுதி முடித்திருக்கிறார். ‘1300 பக்கங்களில் எழுதப்பட்டுள்ள இந்நாவல், 1700-களில் தொடங்கி தற்போது வரையான 300 ஆண்டு கால கொங்கு மண்ணின் வரலாற்றைப் பேசுகிறது’ என்று சொன்னார். திருப்பூர், சோமனூர், செகடந்தாளி  ஆகிய மூன்று ஊர்களை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாம். கிறிஸ்தவ குழுக்களின்  பங்களிப்பு, தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் என விரியும் நாவலின் பெயர் ‘சிலுவை’!

தமிழுக்கு வருகிறது அன்னா ஸ்விர் கவிதைகள்

போலந்துக் கவிஞர் அன்னா ஸ்விர் கவிதைகளை சமயவேல் மொழிபெயர்த்துள்ளார். வார்ஸாவில் 1909-ல் பிறந்த அன்னா ஸ்விர், ஓவியராக இருந்த தந்தையின் ஓவியக்கூடத்திலேயே தனது இளமைப் பருவத்தைக் கழித்தவர். நாஜிக்கள் ஆக்கிரமித்த போலந்தில் போலிஷ் எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்தார். வார்ஸா எழுச்சியின்போது ராணுவத்தில் தாதியாகப் பணிசெய்தார். இரண்டாம் உலகப் போர் அனுபவங்கள் அவர் கவிதைகளில் விரவியிருக்கின்றன.

நாவலாகப் பொற்கொல்லர் வாழ்க்கை

‘உறைமெழுகின் மஞ்சாடிப்பொன்’ என்று தாணு பிச்சையா எழுதிய கவிதைத் தொகுதி, பொன் ஆபரணத் தொழிலில் உள்ள அபூர்வமான கவிதைத் தருணங்களுக்காகச் சில ஆண்டுகளுக்கு முன்னர் பேசப்பட்டது. இதை எழுதிய தாணு பிச்சையா, ‘டெம்பிள் ஜுவல்லரி’ என்று சொல்லப்படும் புராதன நகை வடிவமைப்பில் தேர்ந்தவர். தற்போது தனது களத்தையே மையமாகக் கொண்டு ஆவண வடிவிலான நாவல் ஒன்றை எழுதத் திட்டமிட்டுள்ளார்.

அரசுப் பள்ளி மாணவர்களின் வாசிப்பு பேரியக்கம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் புதுக்கோட்டையில் மூன்றாவது ஆண்டாக நவம்பர் 24 முதல் டிசம்பர் 3 வரை புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. புதுக்கோட்டையிலுள்ள 1,999 அரசுப் பள்ளிகளிலும் அக்டோபர் 30 அன்று காலை 11.30 மணியிலிருந்து 12.30 மணிவரை பாடப்புத்தகங்கள் தவிர்த்த ஏனைய நூலகப் புத்தகங்களை மாணவ-மாணவிகள் அனைவரும் வாசிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு முதன்மை கல்வி அலுவலர் வனஜா அறிவுறுத்தியுள்ளார். இதனால், 2 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்கள் புத்தகங்களை ஒரே நேரத்தில் வாசிக்கவுள்ளனர். வாசிப்பு பேரியக்கம் பள்ளிகள்தோறும் பரவட்டும்!

திருவண்ணாமலையில் புத்தகத் திருவிழா

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் - பள்ளிக்கல்வித் துறை, தமிழ்நூல் மேம்பாட்டுக் குழுமம் இணைந்து நடத்தும் 2-வது ‘திருவண்ணாமலை புத்தகத் திருவிழா’ அக்டோபர் 31 முதல் நவம்பர் 9 வரை வேங்கிக்காலிலுள்ள ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்தத் தீபாவளியைப் புத்தகங்களோடு கொண்டாடுவோம்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x