Last Updated : 28 Oct, 2018 08:54 AM

 

Published : 28 Oct 2018 08:54 AM
Last Updated : 28 Oct 2018 08:54 AM

க.நா.சு: ரசனையில் சுடர்ந்த விமர்சன ஒளி

விமர்சகர் என்ற அடையாள முத்திரை மூலம் பிற காத்திரமான பங்களிப்புகள் உரிய கவனம் பெறாது போகுமளவு விமர்சனத் தளத்தில் இயங்கியவர் க.நா.சு. விமர்சனம் என்பதைக் காலத்தின் தேவையைப் பூர்த்திசெய்யும் அத்தியாவசியமான செயல்பாடாகக் கருதி அதிலும் தீவிரமாகச் செயல்பட்டவர். தமிழ்ப் படைப்புலகம் புதுமைப்பித்தன், மெளனி, கு.ப.ரா., ஆர்.ஷண்முகசுந்தரம், கு.அழகிரிசாமி போன்ற கலை ஆளுமைகளால் பொலிவுற்றிருந்த அதேசமயம், வணிகப் பத்திரிகைகளின் ஆதிக்கத்தால் இலக்கிய ரசனையும் வாசகத் தரமும் மலினப்பட்டிருப்பதைக் காணச் சகிக்காது விமர்சனத்தைக் கைக்கொண்டவர். அதனாலேயே ரசனைவழி தர நிர்ணய விமர்சனமாக அவருடைய விமர்சன முறை அமைந்தது. வாசகனைத் திருப்திப்படுத்த படைப்பாளி இறங்கிவருவதான பாவனை மூலம் இலக்கியமும் பயனடைவதில்லை; வாசகனும் பயனடைவதில்லை. அதனாலேயே வாசகனின் வாசிப்புப் பயணத்தைத் தொடர்ந்து வலியுறுத்தியவர். ஒரு வாசகனாகத் தன்னுடைய வாசிப்பிலிருந்து மேலானவற்றை முன்வைத்தபடி இருந்தார். ஒரு வாசகனாக மிளிர்ந்த விமர்சகராகவே அவருடைய விமர்சனப் போக்கு அமைந்தது.

“இலக்கியாசிரியனின் கடமை வாசகனை எட்டுவதல்ல. அதற்கு எதிர்மாறாக வாசகனின் கடமைதான் ஆசிரியனை எட்டிப் பிடிப்பது என்பதை வலியுறுத்த இன்று இலக்கிய விமர்சனம் உபயோகப்பட வேண்டும். இலக்கியாசிரியன் ஒரு வாசகனையோ, ஒரு லட்சிய வாசகனையோ எண்ணிக்கொண்டு எழுதுவதில்லை. வாசகன்தான் தன் இலக்கியத் தாகத்தில், ‘நமக்கேற்ற ஆசிரியன் இவன்’ என்று தேடிக்கொண்டு இடைவிடாமல் ஓட வேண்டும்” என்று ‘விமர்சனக் கலை’ நூலில் க.நா.சு. குறிப்பிட்டிருக்கிறார்.

அதேசமயம், விருப்பமில்லாமலேயே, அவசியம் கருதி, விமர்சனத்தை மேற்கொண்டதாக அவ்வப்போது க.நா.சு. குறிப்பிட்டிருக்கிறார். எனினும், ரசனை அடிப்படையிலான தர நிர்ணயத்தின் மூலம் தற்கால இலக்கியம் குறித்த விமர்சனப் போக்கை உருவாக்கிய முதல் விமர்சகர் இவர்தான். இதே காலகட்டத்தில் கல்வித் துறை சார்ந்த அலசல் விமர்சனம் மூலம் படைப்புகளை அணுகியவர் சி.சு.செல்லப்பா. இவர்களைத் தொடர்ந்துவந்த பிரமிள், இலக்கியக் கருத்தாக்க அடிப்படையில் படைப்பை அணுகினார். ஆனால், விமர்சன ஆய்வு முறையோ, இலக்கியக் கருத்தாக்கங்களின் துணையோ இன்றி தன் வாசிப்பு அனுபவங்களிலிருந்து ரசனை அடிப்படையில் மேலான படைப்புகளைக் கண்டடைந்தவர் க.நா.சு. ஒரு பட்டியல் விமர்சகராக அவர் கருதப்பட்டபோதிலும், அதுவரை அவர் முன்வைத்த பட்டியல்கள்தான் தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வரிவடிவமாக நிலைபெற்றிருக்கிறது என்பது அவருடைய கூரிய அவதானிப்பையும், ரசனையின் துல்லியத்தையும் தெளிவாக்குகிறது.

இலக்கியத்தின் அவசியம் என்ன? நாம் ஏன் இலக்கியப் படைப்புகளை வாசிக்க வேண்டும்? தமிழ் இலக்கியத்தின் சத்தான பகுதிகள் எவை? நவீனத் தமிழ் இலக்கியம் என்பது எது? பத்திரிகை எழுத்து என்பதற்கும் இலக்கிய எழுத்து என்பதற்குமான வித்தியாசம் என்ன? உலக இலக்கியப் போக்குகளின் மைய மற்றும் கிளை நீரோட்டங்கள் எத்தன்மையானவை? இந்திய இலக்கியப் பாரம்பரியம் எத்தகையது? இந்தியத் தன்மை என்றால் என்ன? இந்தியத் தன்மை கொண்ட படைப்புகள் எவை? தமிழில் அது எவ்வாறு இழையோடி இருக்கிறது? பாரதிக்குப் பின்னான இலக்கியத் தடங்களைத் தமிழ்ப் பண்டிதர்கள் அறியாதிருப்பதன் காரணம் என்ன? போன்ற பல அடிப்படையான கேள்விகளை எழுப்பி அவற்றுக்கான விடைகளைத் தன் எழுத்தில் தேடிச்சென்றவர். ‘விமர்சனக் கலை’, ‘இலக்கிய விசாரம்’, ‘படித்திருக்கிறீர்களா?’ (இரண்டு தொகுதிகள்), முதல் ஐந்து தமிழ் நாவல்கள்’, இலக்கிய வளர்ச்சி’, ‘நாவல் கலை’. ‘கலை நுட்பங்கள்’ ஆகியன இவரின் முக்கிய விமர்சன நூல்கள்.

1985-88 வரையான அவருடைய 73-வது வயதிலிருந்து 76 வயது வரையான மூன்றாண்டுகாலப் பிற்காலச் சென்னை வாழ்க்கையின்போதும் வாசிப்பையும் எழுதுவதையும் தொடர்ந்தபடி இருந்தார். அச்சமயத்தில், மயிலாப்பூர் டி.எஸ்.வி. கோயில் தெருவில் நாங்கள் அருகருகாகக் குடியிருந்தோம். ஒவ்வொருமுறை வெளியில் போகும்போதும் அவர் வீட்டைக் கடந்துதான் போக வேண்டும். அப்போது, வயோதிகத்தின் தளர்ச்சியோடு அவருக்குப் பார்வையும் சீர்கெட்டிருந்தது. அந்த வீட்டின் ஜன்னல், தெரு பார்த்திருக்கும். பகலில் பெரும்பாலான நேரங்களில் ஜன்னல் முன் நின்றபடி கண்களுக்கு மிக நெருக்கமாக ஒரு கையில் புத்தகத்தை வைத்துக்கொண்டு மறு கையில் பூதக்கண்ணாடி கொண்டு வாசித்துக்கொண்டிருப்பார். அக்காலகட்டத்தில் ‘குங்குமம்’, ‘துக்ளக்’ ஆகிய இதழ்களில் தொடர் கட்டுரைகளும் எழுதினார். எழுதுவதையும் பூதக்கண்ணாடியின் துணையுடன்தான் மேற்கொண்டார். இலக்கிய வாழ்வின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை வாசிப்புதான் அவருடைய வாழ்வியக்கத்தின் ஆதார சுருதியாக இருந்திருக்கிறது. வாசிக்காமலும் எழுதாமலும் வீணே ஒரு நாளைக்கூட அவரால் சுமந்திருக்க முடியாது.

அக்காலகட்டத்தில் ஒருமுறை ஏதோ ஒரு கருத்தரங்குக்காக வடக்கே தொலைதூர நகரம் ஒன்றுக்குச் செல்வதாக இருந்தார். “இப்போது அவசியம் நீங்கள் அங்கு தனியாகப் போக வேண்டுமா?” எனக் கேட்டேன். “ஏன் எங்கயாவது தனியா செத்துப்போயிடுவேன்னு பயப்படுறியா? உயிரோட இருக்கிற வரைக்கும்தான் இந்த உடம்பு நம்மோட பிரச்சினை. செத்துப்போயிட்டா இந்த உடம்பை என்ன செய்வது, எவர் வசம் ஒப்படைப்பது என்பதெல்லாம் அடுத்தவங்க பிரச்சினை” என்று சிரித்தபடியே சொன்னார். இன்று நான் ரசித்திருக்கும் என்னுடைய தனிமை வாழ்க்கையில் இந்த வார்த்தைகள் புது வெளிச்சம் கொண்டு துலங்குகின்றன.

சுவையான காபி, பதார்த்தங்கள், சாப்பாட்டிலும் அலாதியான ருசியும் ரசனையும் கொண்டவர். நல்ல உணவகத்தைத் தேடிப்போய்ச் சாப்பிடுபவர். அவர் செல்லக்கூடிய எந்த ஒரு சிற்றூரிலும்கூட ருசியான உணவு கிடைக்கக்கூடிய சிறு கடைகளை அவருடைய ருசி வேட்கை தேடிக் கண்டடைந்திருக்கிறது. அவருடைய இந்த ருசி வேட்கை, சக எழுத்தாளர்களின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கிறது. ஒருமுறை மதியச் சாப்பாட்டுக்கு நான் கோபாலபுரம் ‘காதி கிராமோத்யோக் பவன்’ பற்றிச் சொன்னேன். மறுநாளே ஒரு ரிக்‌ஷாவில் போய் அங்கு சாப்பிட்டுவிட்டு மனைவிக்கும் பார்சல் வாங்கிவந்துவிட்டார். அன்று மாலை அவரைச் சந்தித்தபோது மிகவும் சிலாகித்தார். பாரீஸில் பல எழுத்தாளர்கள் ஏதேனும் ஒரு காபி கடையில் இருந்துதான் எழுதுவார்கள். அவர்கள் தங்களுடைய ஏதேனும் ஒரு புத்தகத்தை அந்த காபி கடைக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள். தானும் அப்படி ஒரு புத்தகத்தை காதி பவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டும் என்றார். வாழ்வின் சகல அம்சங்களிலும் ரசனை வழிநடத்திய வாழ்வு அவருடையது.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x