Last Updated : 21 Oct, 2018 09:22 AM

 

Published : 21 Oct 2018 09:22 AM
Last Updated : 21 Oct 2018 09:22 AM

எழுத்தாளர்களைப் பதிப்பாளர்கள் சுரண்டுகிறார்கள்- தோப்பில் முஹம்மது மீரான் பேட்டி

கடற்புர இஸ்லாம் சமூகத்தின் அகவுலகை முதன்முறையாகப் படைப்பாக்கிய முன்னோடி ஆளுமை தோப்பில் முஹம்மது மீரான். நாவல் மொழி, கதைசொல்லும் விதம், வடிவ நேர்த்தி என தனித்துவம் கொண்டவர். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’, ‘சாய்வு நாற்காலி’, ‘கூனன் தோப்பு’ ஆகியவை இவரது சாதனைப் படைப்புகள். இவரது முதல் சிறுகதை வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியிருக்கும் வேளையில் அவரோடு உரையாடியதிலிருந்து...

உங்கள் முதல் நாவல் வெளிவந்தபோது நீங்கள் வேறு எந்த தமிழ்ப் படைப்பையும் வாசித்திருக்கவில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உங்களுக்கான தனித்துவமான மொழியை, கதைசொல்லும் உத்தியை எப்படி வரித்துக்கொண்டீர்கள்?

எங்கள் பகுதி தமிழ்ப் பாரம்பரியம் மிக்கது. தொல்காப்பியத்திலுள்ள பல சொற்கள் இன்றும் அங்கே புழக்கத்தில் இருக்கின்றன. அப்படி இயல்பாக எனக்குள் கூடியிருந்த மொழியைக் கொண்டுதான் எழுதினேன்.

உங்கள் நாவல்கள் பல தலைமுறை வாழ்க்கையை, பல்வேறு காலக்கட்டங்களைப் பேசினாலும் ஒரே ஒரு நாற்காலி, ஒரு தோப்பு, ஒரு தெரு என ஏதேனும் ஒரு அம்சத்தை மையமாகக் கொண்டிருக்கிறது. ஏன் இப்படி?

நீங்கள் சொல்கிற இந்த விஷயமும் இயல்பாகவே அமைந்ததுதான். நாவல் எழுதிக்கொண்டிருக்கும்போது அது எங்கே முடியுமெனத் தெரியாது. எந்த இடத்தில் முற்றுப்புள்ளி வைக்கத் தோன்றுகிறதோ அங்கே வைத்துவிடுவேன். நீங்கள் சொல்வதுபோல ஒரு மையத்தைப் பிரதானமாகக் கொண்டு எழுத வேண்டுமென்ற திட்டமிடலெல்லாம் கிடையாது. திட்டமிட்டு எழுதினால் ஒருவித செயற்கைத்தன்மை கூடிவிடும். அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு மதத்தின் பெயரால் எப்படி எங்கள் மக்களை ஒடுக்கினார்கள் என்பதைத்தான் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ நாவலில் சொல்லியிருக்கிறேன். உண்மையாக நடந்த விஷயங்கள்தான். பொருளாதாரரீதியில் ஒடுக்கப்பட்ட ஜனங்கள் குறித்து ‘துறைமுகம்’ நாவலில் எழுதினேன். கருவாடு வியாபாரம் செய்த என் தகப்பனார் இப்படியாக ஒடுக்கப்பட்ட ஆள்தான். ‘கூனன் தோப்பு’ நாவலில் மீனவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் அடிக்கடி நடந்துகொண்டிருக்கும் பிரச்சினையை எழுதினேன். பாரம்பரியமான ஒரு குடும்பம் எப்படி பொருளாதாரரீதியில் வீழ்ச்சியுறுகிறது என்பதை ‘சாய்வு நாற்காலி’ நாவலில் காட்டுகிறேன். நாகர்கோவிலில் நான் தங்கியிருந்த தெரு குறித்து ‘அஞ்சுவண்ணம் தெரு’ நாவலில் எழுதினேன். போர்ச்சுக்கீசியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நடந்த போர் குறித்ததுதான் எனது சமீபத்திய நாவல் ‘குடியேற்றம்’. இந்த நாவலுக்காக மட்டும்தான் நான் கொஞ்சம் ஆய்வுசெய்தேன். பிற நாவல்களெல்லாம் நான் கண்டதும் கேட்டதும்தான்.

ஏன் உங்கள் அனுபவத்துக்கு மீறிய விஷயங்களை எழுத வேண்டுமென்று தோன்றவில்லை?

இன்னொருவரைப் போல எழுத வேண்டுமென்றோ இடங்களையும் தளங்களையும் மாற்றி எழுதிப்பார்க்க வேண்டுமென்றோ நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. எனக்குத் தெரிந்த விஷயங்களை, தெரிந்த மொழியில், தெரிந்தபடி எழுதுவதுதான் எனது பாணி.

ஆ.மாதவன், சுந்தர ராமசாமி, கி.ராஜநாராயணன் என இவர்களோடு நெருங்கிப் பழகியிருக்கிறீர்கள். அடுத்த தலைமுறை படைப்பாளிகளோடு உங்கள் உறவு எப்படி இருக்கிறது?

களந்தை பீர் முகமது, சோ.தர்மன், சுப்ரபாரதிமணியன் இவர்களுடனெல்லாம் நெருக்கமான பழக்கம் இருக்கிறது. அடிக்கடி பேசிக்கொள்வோம். நிறைய பேர் இருக்கிறார்கள். வயதாகிவிட்டதால் பெயர்கள் நினைவில் வர மாட்டேனென்கிறது. சேவல் சண்டை குறித்து ஒரு நாவல் எழுதினாரே? தவசியா அவர் பெயர்? அருமையான நாவல் அது. நான் ரசித்து வாசிக்கும் படைப்பாளிகளின் முகம் தெரியாவிட்டாலும் அவர்கள் குறித்து வேறு யாரும் சொல்லாவிட்டாலும்கூட என் மனதில் எப்போதும் இருந்துகொண்டிருப்பார்கள்.

அரசியலில் உங்களுக்கு ஈடுபாடு உண்டா?

தனிப்பட்ட முறையில் அன்பும் பழக்கவழக்கங்களும் இருக்கிறதே தவிர இயக்கங்களில் உடன்பாடு கிடையாது.

ஒரு மதம், ஒரு கலாச்சாரம் என்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்த நாட்டில் அது நடக்காது. ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்றால் எந்த மொழி வேண்டும்? ஒரு சமுதாயம் என்று எடுத்துக்கொண்டாலே அதற்குள் பல்வேறு பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு மொழிக்குள்ளும்கூட பல்வேறு வகைமைகள் இருக்கின்றன. திருநெல்வேலியில் ஒரு தமிழ், கன்னியாகுமரியில் ஒரு தமிழ், மதுரையில் ஒன்று, சென்னையில் ஒன்று. அப்படி இருக்கையில் ஒட்டுமொத்த இந்தியாவையும் எப்படி ஒரு மொழியின்கீழ் கொண்டுவர முடியும்?

உங்கள் எழுத்துகளுக்காகக் கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறீர்கள். சமீபத்தில்கூட கேரளாவில் ‘மீசை’ நாவலுக்கு எதிர்ப்பு வந்தது. கருத்துச் சுதந்திரம் குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

வரலாற்றிலுள்ள விஷயத்தைப் பெருமாள் முருகன் எழுதினார். நானும் அப்படி எத்தனையோ விஷயங்கள் எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மீசை’ நாவலில் நடந்தது வேறு. அந்நாவலில் இருவருக்கும் இடையே நடைபெறும் உரையாடலில் மதத்தை இழிவாகப் பேசும்படியாக அமைந்திருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது சமூகத்தில் பிளவு ஏற்பட வழிவகுக்கக் கூடாது. மக்களிடத்தில் மூடநம்பிக்கைகளை, தவறான எண்ணங்களை விதைக்கக் கூடாது போன்ற பொறுப்புணர்வு எழுத்தாளருக்கு வேண்டும். எழுத்தாளன் என்பவன் சமூகத்தின் வழிகாட்டி.

நீங்கள் எழுத வேண்டுமென நினைப்பதையெல்லாம் எழுத முடிகிறதா?

இல்லை. சாதியம் ஒரு தடையாக இருக்கிறது. எனக்கு மீனவ சமுதாயமும், நாடார் சமுதாயமும் மிகவும் தெரிந்தவை. நாடார் சமூகம் குறித்து ஒரு நாவல் எழுதி வைத்திருக்கிறேன். ஆனால், வெளியிடத் தயாராகயில்லை. சாதி, மதக் குளறுபடிகளால் இங்கே ஒரு கிளாசிக் நாவல் வர வாய்ப்பேயில்லை என்றுதான் தோன்றுகிறது.

இவ்வளவு கெடுபிடிகளுக்குள்ளேயே இயங்க வேண்டியிருக்கிறது. இத்தனை ஆண்டுகால எழுத்து வாழ்க்கை உங்களுக்குத் திருப்தி அளிப்பதாக இருக்கிறதா?

நான் எழுதியதில் எனக்கு முழு திருப்தி. ஆனால், பொருளாதாரரீதியான தேவைக்கு எழுத்து எனக்கு எதுவும் செய்ததில்லை. கிட்டத்தட்ட 22 புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். சில புத்தகங்கள் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையாகியிருக்கின்றன. சமீபத்தில் வெளியான ‘குடியேற்றம்’ நாவல் தவிர மற்ற எல்லா நாவல்களுக்கும் விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஆனால், விருதுத் தொகையைத் தவிர பதிப்பாளர்களிடமிருந்து பெரிதாக எதுவும் வந்ததில்லை. எழுத்தாளர்களைப் பதிப்பாளர்கள் சுரண்டுகிறார்கள். ஒரு பெருநாளின்போது செலவுக்குப் பணம் இல்லை. எனது தமிழ், மலையாளப் பதிப்பாளர்கள் எல்லோருக்கும் எழுதினேன். காலச்சுவடு தவிர வேறு எந்தப் பதிப்பகமும் பதில் எழுதவில்லை. வாழ்க்கை ஒரு மாதிரியாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், அதெற்கெல்லாம் சோர்ந்துவிடுவதில்லை. எழுதி முடிக்கும்போது பிரசவம் முடிந்ததுபோல, இமயமலையிலிருந்து இறங்கியதுபோல ஒரு திருப்தி கிடைக்கும். அது போதும். நேற்று இரவுகூட, ஒரு மணி வரை எழுதிக்கொண்டிருந்தேன்.

என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?

கிணறு பற்றி ஒரு நாவல் எழுதிக்கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டில் பல காலமாக ஒரு கிணறு இருந்தது. சமைப்பதற்கு அதைப் பயன்படுத்த முடியாது. ஆனால், குளித்தீர்களென்றால் எத்தனை வருடத்துச் சூடும் அப்படியே போய்விடும். அவ்வளவு குளிர்ச்சி. நாங்கள் அதைப் பாதுகாத்துக்கொண்டிருந்தோம். பிறகு, எங்களுக்குள் பங்கு பிரியும்போது என் தம்பி செய்த முதல் வேலை அந்தக் கிணறை மூடியதுதான். இது என் மனதுக்குள் ரொம்பக் காலம் ஓடிக்கொண்டிருந்தது. அதுபோலவே, திருநெல்வேலியில் போய்வரும் வழியில் ஒரு கிணறு இருந்தது. எவ்வளவோ மூட முயன்றும் அதற்கு மேலே தண்ணீர் பொங்கிக்கொண்டுவந்தது. அதை விற்றுவிட்டார்கள். அதை வாங்கிய நபர் காங்கிரீட் கொண்டு மூடிவிட்டார். அந்தப் பகுதி முழுவதுக்கும் தண்ணீர் கொடுத்துக்கொண்டிருந்த கிணறு அது. ஊறிக்கொண்டிருக்கும் கிணறை மூடுவது என்பது கொடுமையானது.

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x