Last Updated : 07 Oct, 2018 02:26 AM

 

Published : 07 Oct 2018 02:26 AM
Last Updated : 07 Oct 2018 02:26 AM

நாவல் என்பது கோணிப்பை அல்ல!- இந்திரன் பேட்டி

கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர், எழுத்தாளர், இதழாசிரியர், ஆய்வாளர், கலை இலக்கிய விமர்சகர் எனப் பல்வேறு துறைகளில் தடம்பதித்தவர் இந்திரன். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள், கண்காட்சி ஒருங்கிணைப்புகள், கருத்தரங்குகள், ஆய்வுகள், பட்டறைகள் எனக் கலை இலக்கிய உலகுக்கு இவரது பங்களிப்புகள் ஏராளம். 2011-ல் சாகித்ய அகாடமியின் மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றிருக்கிறார். இந்திரனின் 70-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகக் கலை இலக்கிய விழா, ஓவியக் கண்காட்சி, ஆவணப்படம் திரையிடல், இலக்கியக் கூடல் என்று கலைத் துறையினர் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில் அவரோடு உரையாடியதிலிருந்து...

கலை கலைக்கானது, கலை மக்களுக்கானது; உங்கள் நம்பிக்கை எதில் இருக்கிறது?

நிச்சயமாக, கலை மக்களுக்கானதுதான். கலையா, மனிதனா என்று கேட்டால் நான் மனிதனைத்தான் தேர்ந்தெடுப்பேன். மனிதருக்கு எதிராகக் கலை இருக்குமானால் கலையே தேவையில்லை.

ஆனால், கலைஞர்கள் மட்டுமே கலையை அணுகும் விதமாகத்தானே தற்போதைய சூழல் இருக்கிறது?

காலனியாதிக்கக் காலத்தில் பிரிட்டிஷ் அரசாங்கம் கலைப் பள்ளிகளை இங்கே உருவாக்கியது. இந்தியாவில் ஏற்கெனவே உள்ள கைவினைக் கலையைப் பயன்படுத்தி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யலாம் என்பதுதான் கலைப் பள்ளிகளை உருவாக்கியதன் நோக்கமாக இருந்தது. கலை - கைவினைப் பள்ளி என்று பெயர் வைத்தபோதே அழிவு ஆரம்பமாகிறது. இந்தியாவில் அப்போது கைவினை மரபுதான் கலை மரபாக இருந்தது. காலம்காலமாக பயின்றுவந்த கலை மரபை அவர்கள் கைவினை மரபு என்றார்கள். பிரிட்டனின் ‘ராயல் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்’ஸிலிருந்து சில யுக்திகளை இங்கே கற்றுக்கொடுத்து அதுதான் ‘கலை’ என்று பிரித்துவைத்தார்கள். இதில் இன்னும் பெரிய அநீதி என்னவென்றால், கலையை மேலே வைத்து கைவினையைக் கீழே வைத்தது. மக்களோடு இருந்த கைவினைக்காரர்களெல்லாம் கலைஞர்கள் இல்லையென்று ஆகிவிட்டது. பிரிட்டிஷ்காரர்களுடைய வரவேற்பறையை அழகுபடுத்துவதுதான் ஓவியரின் வேலை என அன்று கற்றுக்கொடுக்கப்பட்டதை இன்றும் கடைப்பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். கலை என்பது பணம் படைத்தவர்களுக்கான வெளிப்பாடு என்றும் ஆகிவிட்டது.

யதார்த்த பாணி ஓவியங்களில் பெரும்பாலும் எளிய மனிதர்களே இடம்பெறுகிறார்கள். மேட்டிமை முகங்களோ, மேட்டிமைச் சூழலோ இடம்பெறுவது இல்லை. இதற்குப் பின்னுள்ள மனநிலை என்ன?

யதார்த்த கலை பாணிக்காக, நிர்வாணமாக மனிதரை உட்காரவைத்து ஓவியம் தீட்டும் ஒரு மரபை ஐரோப்பா கொண்டுவந்தது. இப்படியான மரபு நம்மிடம் கிடையாது. நிர்வாணமாக ஒரு ஆணையோ பெண்ணையோ நிறுத்தி ஓவியம் வரைவதற்கு இங்கே அனுமதியும் கிடையாது. நிர்வாண உடல் என்பது இரண்டு வழிகளில் சாத்தியம்; ஒன்று, உடையைத் தானாகக் கழட்டிப்போட்டவர்கள், இன்னொன்று, உடையே இல்லாதவர்கள். நம்மவர்கள் இரண்டாவது வழியைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார்கள். நாகரிகம் என்பது ஒற்றைத்தன்மையை நோக்கிச் செல்கிறது. எல்லா பணக்காரர்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். ஏழைகளின் வாழ்வியலில்தான் பலவிதமான வண்ணங்கள் இருக்கின்றன.

உங்கள் படைப்புக்கான ஆரம்பப்புள்ளி எங்கே தொடங்குகிறது?

எத்தகைய கலை வெளிப்பாடாக இருந்தாலும் படைப்புக்கும் படைப்பாளிக்கும் இடையே ஒரு வெளிப்பாட்டுச் சாதனம் இருக்கிறது. விலங்கும் வேட்டைக் காரனும்போல வெளிப்பாட்டுச் சாதனமும் படைப்பாளியும். ஒரு விலங்கை வேட்டையாடப் பல யுக்திகளை வேட்டைக் காரன் கொண்டிருப்பான். அவனிடம் சிக்கிக்கொள்ளாததற்கும் எண்ணற்ற யுக்திகள் அந்த விலங்கிடம் இருக்கின்றன. இந்தப் போராட்டம் இருக்கிறதல்லவா, நான் ஒரு வேட்டைக்காரன் என்ற வகையில், எது என்னை ரொம்ப ஏமாற்றுகிறதோ அந்த விலங்கை வேட்டையாடுவதுதான் எனக்கு விருப்பமானது. அதில் நான் தோற்றுக்கூடப் போய்விடலாம். ஆனால் அந்த விளையாட்டு மகிழ்ச்சி அளிக்கக்கூடியது. ஆக, என்னிடம் அவ்வளவு சீக்கிரத்தில் வசப்பட்டுவிடாது எனத் தோன்றும் விஷயங்களோடு விளையாடத் தொடங்குவேன்.

நிறைய எழுதுவதில் உங்களுக்கு உடன்பாடு கிடையாது இல்லையா?

நிறைய எழுதுவது ஆரோக்கியமானது. ஆனால், வாசகர்கள் முன் சமர்ப்பிக்கும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். பிரசுரிப்பது சுலபமாகியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் எழுதிக் குவித்துவிடுகிறார்கள். நிறைய எழுதினால் அதில் ஏதாவது ஒன்று நின்றுவிடும் என்று நினைப்பது முறையல்ல. ‘பிரெஷ்னெஸ் டெஸ்ட்’ என்று எழுத்தில் இருக்கிறது. பிரெஷ்ஷாக இல்லையென்றால் தயவுதாட்சண்யமேயின்றித் தூக்கி எறிந்துவிட வேண்டும்.

எழுத்தாளர்-ஓவியர் சந்திப்பை நீங்கள் முன்னெடுப்பதன் நோக்கமென்ன?

எழுத்து ஓவியம் மட்டுமல்ல. எல்லா கலைத் துறையினரும் வேறுவேறு கலைத் துறையினரோடு உரையாட வேண்டும் என்பது எப்போதும் எனது விருப்பமாக இருந்துவருகிறது. ஒரு கலையில் உள்ள யுக்தியை இன்னொரு கலையில் பயன்படுத்தும்போது புதிய பரிமாண விஸ்தீரணங்களெல்லாம் உருவாகும்.

கவிஞர், மொழிபெயர்ப்பாளர், ஓவியர் எனப் பல்வேறு துறைகளில் இயங்கினாலும் கலை விமர்சகர் என்கிற அடையாளமே தொடர்ந்து முன்வைக்கப்படுகிறதே ஏன்?

அதில் எனக்குத் தனிப்பட்ட மனவருத்தமும் இருக்கிறது. எனது துறைகளில் கவிதையை முக்கியமானதாகக் கருதுகிறேன். கலை விமர்சனத்துக்கு இப்போது ஆள் குறைவு என்பதால் என்னை அதற்குப் பொறுப்பாளியாக்கிவிடுகிறார்கள்.

கவிதையை ஆதாரத் துறையாகக் கருதுபவர் என்ற வகையில் சமகாலக் கவிதை குறித்த உங்கள் அவதானிப்பு என்ன?

இன்றும்கூட நிலா, பூ, காதலி, காதல் என்று கவிஞர்கள் எழுதிக்கொண்டிருப்பது அயர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. ‘பொன்வண்டுகளையும் பட்டாம் பூச்சிகளையும் பாடிய காலம் முடிந்து விட்டது இப்போது. அதனால்தான் கரப்பான்பூச்சிகளைப் பாடுகிறோம்’ என்று தொடங்கும் ஒரு கவிதை எழுதினேன். இன்னும் எவ்வளவு நாள்தான் இதைப் பாடிக்கொண்டிருப்பீர்கள் என ஒரு எதிர்வினையாகத்தான் இந்தக் கவிதையை எழுதினேன். போலவே, மொழி விளையாட்டில் அதிக கவனம்கொள்கிறார்கள். கவிதையில் கவித்துவம் வேறு இடத்துக்கு நகர்ந்துவிட்டது.

ஐவ்வகை நிலப் பாகுபாட்டையே இன்னும் எவ்வளவு நாள் பேசிக்கொண்டிருப்பது? தமிழர்கள் பனிப்பிரதேசத்தில் போய் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். திணைக் கோட்பாடு என்பது தமிழரின் மிகப் பெரிய அழகியல் கோட்பாடு. அதைப் புதிய நிலப்பரப்புகளோடு விஸ்தீரிக்கும்போது கவிதைக்கான அழகியலும் மாற்றமடையும்.

நீங்கள் ஏன் நாவல் எழுதவில்லை?

எழுத முயன்றிருக்கிறேன். நான்கு நாவல்கள் அரைகுறையாக எழுதப்பட்டு முழுமையடைவதற்காகக் காத்திருக்கின்றன. நாவல் என்பது வடிவநேர்த்தி மிக்கது. ஒரு விமர்சகன் என்ற வகையில் சொல்கிறேன், நாவல் என்பது ஒரு கோணிப்பை என்றொரு எண்ணம் நம்மிடம் இருக்கிறது. நாவல் எழுத வேண்டும் என்ற முடிவை எடுத்ததும் ஒரு கோணிப்பையை எடுத்துக்கொண்டு தனக்குத் தெரிந்த எல்லா விஷயங்களையும் அதில் கொட்டிவிட முடிவெடுக்கிறார்கள். அதற்குள் எதைப் போட்டாலும் நிரம்பிவிடும் என்று நினைக்கிறார்கள். தகவல்கள் இலக்கியமாகாது. இன்றைய நாவல்கள் தகவல்களின் திரட்சியாகத் தேங்கிவிட்டன.

- த.ராஜன்,

தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x