

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் அசோகமித்திரன். வயோதிகம் உடல் நிலையைத் தளரச் செய்திருக்கும் நிலையில், கைத்தடியுடன் தள்ளாடியவாறேதான் நடக்கிறார். ஆனால், தள்ளாட்டம் உடலுக்குத்தான். வாசிப்பின் மீதான வேட்கை இன்னமும் அவர் மனதை ஒரு மாணவனின் இளமையுடன் அப்படியே வைத்திருக்கிறது. சென்னைப் புத்தகக் காட்சியின் மூத்த வாடிக்கையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இந்த ஆண்டும் இதுவரை மூன்று முறை வந்துசென்றுவிட்டார். வாசிப்பின் இன்பத்தை உற்சாகம் பொங்கப் பகிர்ந்துகொண்டார்.
“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணத்துக்காகப் புத்தகங்களை வாசிக்கிறதா சொல்வாங்க. நான் வாசிக்குறதுக்கும் ஒரு காரணம் உண்டு. புத்தகங்கள் எதுவானாலும் சரி – அது நல்ல புத்தகமோ மோசமான புத்தகமோ - வாசிக்கும்போது நமக்குள்ளே ஒரு கண்டுபிடிப்பு நிகழுது. எதையோ நாம கண்டடையுறோம். அதுதான் வாசிப்பு மேல உள்ள ஈர்ப்பு குறையாம இருக்கக் காரணம். உடம்பு முடியுதோ இல்லையோ ஒரு நாளைக்குக் குறைஞ்சது மூணு மணி நேரம் படிச்சுடுவேன். வாசிப்பு என்னை வேற உலகத்துக்கு கொண்டுபோயிடும். இதோ, இந்தப் புத்தகக் காட்சி தொடங்குனதிலிருந்து வர்றேன்; ஒவ்வொரு முறையும் பார்க்கப் பார்க்கப் புதுப்புது புத்தகங்கள்; புதுப்புதுக் கண்டுபிடிப்புகள்” என்றவர், அன்றைய தினம் அவருடைய பைக்குள் இருந்த புத்தகங்களில் ஐந்தைக் காட்டினார்: 1. சார்வாகன் கதைகள், 2. சா.தேவதாஸின் ‘எமிலிக்காக ஒரு ரோஜா’, 3. அரவிந்தனின் ‘கேளிக்கை மனிதர்கள்’, 4. அழகிய சிங்கரின் ‘ரோஜா நிறச் சட்டை’, 5. சா.கந்தசாமியின் ‘மழை நாட்கள்’.
“சென்னைப் புத்தகக் காட்சி ஏற்பாட்டாளர்களுக்கு ஒண்ணு சொல்லணும்னு நெனைக்கிறேன். இன்னைக்கு எவ்வளவோ பெரிய புத்தகக் காட்சியா இதை வளர்த்திருக்கீங்க. ஆனா, அது வெறுமனே வியாபார நோக்கமா மாறிடக்கூடாது. கேன்டீன்ல சாப்பாட்டுக்கு நிர்ணயிச்சிருக்குற விலையாகட்டும்; நுழைவுக் கட்டணமாகட்டும்; ஜாஸ்தி. குறைக்கணும். ஒரு சாமானிய வாசகரும் அடிக்கடி வந்து போற மையமா இதை மாத்தணும்.”