நூல் வெளி: சமகாலச் சித்திரங்கள்

நூல் வெளி: சமகாலச் சித்திரங்கள்
Updated on
1 min read

தமிழின் சிறந்த சிறுகதையாசிரி யர்களுள் ஒருவரான சுரேஷ்குமார இந்திரஜித்தின் சமீபத்திய சிறு கதைத் தொகுப்பு ‘நடன மங்கை’. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவரும் சுரேஷ் சென்ற ஒரு வருடத்தில் எழுதிய கதைகளின் தொகுப்பே இந்நூல். தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவ ரான மெளனியை ஒத்த விவரிப்பு மொழியைக் கொண்டவை சுரேஷின் கதைகள். அதே சமயம் மெளனியின் உலகத்தையும் தாண்டி எழும் இவரது எழுத்துகள் சமூகப் பின்புலத்துடன் வெளிப்படும் காத்திரத்தை ஒருங்கே கொண்டுள்ளன.

இவரது பாத்திரங்களின் விவரிப்பு கள் மனக் கூர்மையுடன் வெளிப்படும். கோயில் திருவிழாவில் கண்ட பெண், முப்பது வருடங்களாக அதே இடத்தில் நின்றுகொண்டிருப்பாள். இம்மாதிரியான மனம் உருவாக்கும் கணங்களின் மாயாஜாலங்களையும் இவரது கதைகள் மிக நுட்பமாகச் சித்திரிக்கின்றன. சுரேஷ் சமீபத்திய கதைகளை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளார். பத்துக் கதைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் விவரிப்பு மொழியின் இறுக்கம் தளர்ந்திருக்கிறது. ஒருவகை யில் அது இந்தக் காலகட்டத்தின் வெளிப் பாடாக இருக்கலாம். ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ கதை அதற்கு உதாரணம். ‘எழுத்தாளன், நடிகை, காரைக்காலமையார்’ கதை ‘உயிர் எழுத்’தில் வெளிவந்தபோதே கவனம் பெற்ற கதை. இக்கதை எழுத்தா ளரின் சொந்த அனுபவத்தில் விளைந் தது. அவர் எழுதிய சிறுகதை ஒன்றை வாசித்த நடிகையொருத்தி எழுத்தாளரைச் சந்திக்க விரும்பு கிறாள். அவள் தெலுங்கைத் தாய்மொழி யாகக் கொண்டவள். இம்மாதிரி தீவிர எழுத்துகளை வாசிக்கும் பழக்கமும் இல்லாதவள். எதற்காகச் சந்திக்க விரும்பினாள் என்பதைச் சுவாரசியமாக இந்தக் கதை சொல்கிறது. ரோசாப்பூ என்ற செளந்தரவள்ளியின் கதை, வாழ வேண்டியிருப்பதற்கான மனித மனத்தின் வேட்கையையும் பலவீனங்களையும் இயல்பான தொனியில் சொல்கிறது. ‘அம்மா வின் சாயல்’ கதை, அருகில் குடி வந்திருக்கும் இளம் தம்பதியினர் குறித்த ஒரு முதியவரின் பார்வையில் தொடங்குகிறது. ஆனால் அதன் தொனி பல்வேறு வழிகளில் சென்று முடிகிறது. தொகுப்பில் உள்ள கதைகள் முழுக்கவும் இந்தக் கால கட்ட சமூகத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளன.

நடன மங்கை
சுரேஷ்குமார இந்திரஜித்
உயிர்மை பதிப்பகம்
அபிராமபுரம், சென்னை - 18
தொலைபேசி: 94443 66704
விலை: ரூ. 50

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in