Last Updated : 28 Oct, 2018 08:52 AM

 

Published : 28 Oct 2018 08:52 AM
Last Updated : 28 Oct 2018 08:52 AM

வேலை போய்விடும் என்ற பயத்தில்தான் எழுதவில்லை!- கண்மணி குணசேகரன் பேட்டி

தி.ஜானகிராமனின் யமுனா, ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் அமலா போன்று தமிழ்ப் புனைவுலகில் உயிரோடு உலவும் பெண் கதாபாத்திரங்களில் ஒன்று கண்மணி குணசேகரனின் அஞ்சலை. கவிதை, சிறுகதை, நாவல், வழக்குச் சொல்லகராதி என்று எழுத்தின் எல்லா வகைமைகளிலும் தனது தனித்துவமான முத்திரைகளைப் பதித்தவர் கண்மணி குணசேகரன். சமூக அமைப்பில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் துயரங்களையும் வலியையும் பேசும் ‘அஞ்சலை’, போக்குவரத்துத் தொழிலாளர்களின் தினசரி வாழ்வினூடாக அரசு அமைப்புகளின் அவலங்களைச் சாடும் ‘நெடுஞ்சாலை’, வளர்ச்சித் திட்டங்களால் நிலமிழந்து இடம்பெயர்ந்து வாழ நேரும் எளிய மனிதர்களைப் பேசும் ‘வந்தாரங்குடி’ ஆகிய இவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. தமிழ் இலக்கியப் பரப்பில் நடுநாட்டுப் பிராந்தியங்களைக் களமாகக் கொண்டு எழுதிவரும் எழுத்தாளரும் விவசாயியுமான கண்மணி குணசேகரனோடு உரையாடியதிலிருந்து...

எடிட்டிங் கொள்கையைக் கடைப்பிடிக்கும் சொற்பமான தமிழ்ப் பதிப்பாளர்களுள் தமிழினி வசந்தகுமாரும் ஒருவர். அவருடனான உங்களது எடிட்டிங் அனுபவத்திலிருந்து தொடங்குவோமே?

எனது ‘அஞ்சலை’ நாவல் முதலில் மணியன் பதிப்பக வெளியீடாக 1999-ல் வெளியாகியது. மறுபதிப்புக்காகத் தமிழினியிடம் போகும்போது நாவலின் பலவீனமான சில இடங்களை வசந்தகுமார் அண்ணன் சுட்டிக்காட்டினார். அவர் சொன்னது எனக்கு நியாயமாகவும் பட்டது. எடிட்டர் என்பதற்காகப் படைப்பாளனை எட்டத் தள்ளிவிட்டு, குடல் ஆபரேஷனெல்லாம் செய்ய மாட்டார். கைகாட்டிவிடுவாரே தவிர அதைச் சரிசெய்வது படைப்பாளியின் கையில் இருக்கிறது. ‘வந்தாரங்குடி’ நாவல் எடிட்டிங்குக்காக 12 நாட்கள் விருத்தாச்சலம் வந்து தங்கியிருந்தார். நாவலின் ஒவ்வொரு வரியும் அவர் மனதில் பதிந்திருக்கும். ஒரு பிரதி முழுமை பெறுவதற்காகப் பல ஆண்டுகள்கூடக் காத்திருப்போம். எப்போதும் அவரது எடிட்டிங், நாவலுக்கு வலுசேர்ப்பதாகவே இருந்திருக்கிறது.

உங்கள் நாவல் பதிப்பிப்பதற்குப் பல ஆண்டுகள் காத்திருந்திருக்கிறீர்கள் இல்லையா? இப்போது பதிப்புகள் எளிதாகியிருக்கும் சூழலை வரவேற்கிறீர்களா?

இப்போது எழுதவரும் இளம் படைப்பாளிகள் அவர்களாகவே எழுதி, அவர்களாகவே பதிப்பித்தும் கொள்வது வரவேற்கத்தக்கதல்ல. நமக்குள்ளேயே பத்து புத்தகங்களைப் போட்டுவிட்டு, நமக்குள்ளேயே பாராட்டிவிட்டு இருப்பதால் அடுத்த கட்டத்துக்குப் போக முடியாமல் சமகாலப் புனைவுலகம் தேங்கி நிற்கிறது. இந்தக் காலத்துக்கு இன்னும் அதிகமாக எடிட்டிங் அவசியமாகிறது. குறைந்தபட்சமாக, நான்கு நண்பர்களிடமாவது வாசிக்கக் கொடுத்து அபிப்பிராயங்கள் கேட்டுச் செம்மைப்படுத்த வேண்டும். திரும்பத் திரும்ப எழுதுவதற்குத் தயங்குபவர்களால் ஒரு கச்சிதமான படைப்பை உருவாக்கிவிட முடியாது.

உங்களது கதைகள், கவிதைகளைவிட நாவல்கள்தான் அதிகமாக வாசிக்கப்பட்டிருக்கின்றன. சிறுகதைகள் எழுதிய நமது முன்னோடி நாவலாசிரியர்களுக்கும் இதே நிலைமைதான். இதற்கு என்ன காரணமென்று நினைக்கிறீர்கள்?

நாவல்களில் ஒரு மனிதரின், மக்கள் கூட்டத்தின் வாழ்க்கையை முழு அளவில் எழுதுகிறோம். அதிலிருக்கும் பாத்திரங்கள் நமக்கான, நாம் சந்திக்கும் மனிதர்களாக இருப்பதால் வாசகருக்கு ஒரு பாதிப்பை உருவாக்குகிறது. ஆனால், கவிதைகளோ சிறுகதைகளோ ஒரு சிறு பொறிதான். ‘அஞ்சலை நாவலை நான் படித்து முடித்த பிறகு வெட்ட வெளியில், யாருமில்லா ஒரு வனாந்திரத்தில் தலையில் அடித்து அடித்து அழ வேண்டும்போலத் தோன்றியது’ என்று ஒருவர் எழுதியிருந்தார். ‘அஞ்சலை’ நாவல் வெளியாகி 20 வருடங்கள் ஆகப்போகின்றன. இந்த நாவலுக்கு மட்டும் இப்போதுவரை புதிது புதிதாக வாசகர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

சரி, தனிப்பட்ட முறையில் உங்கள் நாவல்களில் உங்களுக்கு விருப்பமானது எது?

‘கோரை’! அந்த நாவலில் வரும் விவசாயி நான்தான்.

‘நெடுஞ்சாலை’ நாவலில் போக்குவரத்துத் துறையில் பணிபுரிபவரின் வாழ்க்கையைக் காட்டுவதன் ஊடாக அரசு செயல்பாடுகளின் மெத்தனத்தையும் எழுதிச்சென்றிருப்பீர்கள். ஆனால், அந்தப் பகுதிக்குள் பிரதானமாகப் போகவில்லையே, ஏன்?

நிர்வாகத்துக்கு எதிராக இருக்கிறதென்று சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட்டால் என்ன செய்வது என்கிற பயம்தான் காரணம். சொல்லப்போனால், அந்த நாவல் எழுதி ஆறேழு வருடங்கள் வெளியிடாமலேயே வைத்திருந்தேன். பிறகு, ஒருகட்டத்தில் வேலை போனாலும் பரவாயில்லை, விவசாயம் பார்த்துப் பிழைப்பு நடத்திக்கொள்ளலாம் என்கிற தெம்பு வந்த பிறகுதான் வெளியிட்டேன். இந்த நாவல் குறித்து ஒருமுறை இராஜேந்திரசோழன், ‘இந்த நாவலைப் படித்து முடித்த பிறகு, ஒரு பேருந்தைத் தடத்தில் இயக்குவதற்கு என்ன பிரயத்தனம் எடுக்க வேண்டியிருக்கிறது என்பது புரிகிறது. இப்போதெல்லாம் ஒரு டெப்போவைப் பெரும் மனத்துயரோடுதான் கடக்கிறேன்’ என்று சொல்லியிருந்தார்.

இடம்பெயர்வதன் துயரத்தை, நிலக்கரி ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம், அதைத் தொடர்ந்த காவல் துறையின் துப்பாக்கிச்சூடு இதையெல்லாம் ‘வந்தாரங்குடி’ நாவலில் எழுதியிருக்கிறீர்கள். இதுமாதிரியான சூழலை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இதற்கெல்லாம் அரசாங்கத்தைத்தான் குற்றஞ்சாட்டுவேன். தொடர்ந்து பல்வேறு ஏமாற்றுவேலையைச் செய்துகொண்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட நிலத்தைக் கையகப்படுத்த முயலும்போது அங்கு வாழும் மக்களைக் குறித்துக் கொஞ்சமும் யோசிக்க மறுக்கிறார்கள். மக்கள் இன்னமும் ஏமாற்றப்படுபவர்களாகவே இருக்கிறார்கள். நெய்வேலியில் தங்கள் நிலத்தைக் கொடுத்தவனெல்லாம் என்ன வாழ்ந்துவிட்டான்? ஒன்றும் கிடையாது. தவிர்க்க இயலாமல் நிலத்தை எடுக்கிறார்கள் என்றால், இரண்டு விஷயங்களை அரசு செய்ய வேண்டும். ஒன்று, அங்கு இருப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு. இரண்டாவது, ஒட்டுமொத்தமாக ஒரு தொகையைக் கொடுப்பதற்குப் பதிலாக அந்த நிறுவனத்தில் பங்குதாரர்களாக ஆக்கிவிட வேண்டும். லாபமாக எதிர்காலத்தில் ஒரு ஆயிரம் இரண்டாயிரம் வந்தால்கூட அது அவர்களுக்குப் பலம்தான்.

‘வந்தாரங்குடி’ நாவலில் அரசியல் செயல்பாடுகள் - குறிப்பாக, பாமக குறித்துப் பதிவாகியிருக்கிறது. உங்கள் பிற படைப்புகளில் அரசியல் எட்டிப்பார்க்கவில்லையே ஏன்?

‘வந்தாரங்குடி’ நாவலின் களம் அப்படி. அங்கே பிரதானமே நிலம்தான். ‘முன்ன ஒரு வாசப்படி, பின்ன ஒரு வாசப்படி’ என்று வாழ்ந்தவன் தன் நிலத்தை இழந்து பத்துக்குப் பத்து வீட்டில் வாழும் துயரத்தைப் பேசுவதால் அங்கு அரசியல் தவிர்க்கவே முடியாததாக ஆகிவிட்டது. அரசியல்ரீதியான புனைவுகள் நம்மிடையே குறைவுதான். அப்படி எழுதினாலும் அதற்கு ஆயிரம் கெடுபிடிகளை முன்வைத்து நம்மை எழுத விடாமல் செய்துவிடுவார்கள். ‘வந்தாரங்குடி’ வெளியானபோது இது திட்டமிட்ட வன்னிய நாவல் என்று பேசினார்கள். ஆனால், காலப்போக்கில் ஒரு நல்ல படைப்பாக அது தன்னை நிறுத்திக்கொண்டதும் வாயை மூடிக்கொண்டார்கள்.

அம்மா, மனைவி, அண்ணன் என நெருங்கிய உறவுகளின் தற்கொலையைப் பார்த்திருக்கிறீர்கள்...

நாம் என்ன பேசினாலும் அதுவொரு பெரிய பாடு. எதுவும் செய்ய முடியாது. கண்டுபிடிக்கவே முடியாத, தீர்க்க முடியாத முடிச்சாகத்தான் அது இருக்கிறது. ஜனங்களோடு வாழ்வதுதான் அதற்கு ஒரே தீர்வு. பிரச்சினைகளை மற்றவர்களோடு கலந்துகொள்ளாமல் நாமாகவே தீர்த்துக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களுக்குத்தான் இப்படி நேர்கிறது.

விவரம் தெரிந்தவர்களும்கூட இப்படிச் செய்துவிடுவார்கள். இப்போது சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனருக்கு நடந்ததையெல்லாம் என்ன சொல்வது? எனக்கு ஏதாவது பிரச்சினையென்றால் எனது நண்பர்கள் எல்லோருக்கும் அதைச் சொல்லிவிடுவேன். இப்படியான குடும்பப் பாதிப்புகளிலிருந்து நான் வெளியே வந்ததற்கு வசந்தகுமார் அண்ணன் ஒரு காரணம். நள்ளிரவில்கூட போனில் அழைத்து இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருப்பார். பேசிப் பேசிதான் என்னை வெளியே எடுத்துக்கொண்டுவந்தார். சக மனிதர்களோடு நல்ல உறவு, எல்லாவற்றையும் சொல்வதற்கான சுதந்திரத்தோடு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும்.

பெண்களை நுட்பமாகப் பாத்திரமாக்கியிருப்பவர், பெண்களைச் சுரண்டிப் பிழைப்பவர்களைச் சித்திரித்திருப்பவர் என்கிற முறையில் தற்போது பெண்கள் கையிலெடுத்திருக்கும் ‘நானும் (மீடூ)’ இயக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

வரவேற்கிறேன். பணியிடங்களில் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டு அதில் வெற்றிபெற்றாலும்கூட பெண்களுக்கு ரொம்பவும் சிக்கலான விஷயம்தான் இது. இதைச் செய்யத் துணிபவர்களுக்கு ஒரு எச்சரிக்கைத்தன்மையை ‘மீடூ’ இயக்கம் கொடுத்திருக்கிறது. பொதுவாக, ஒழுக்கம், அறம் சார்ந்த படிப்பினைகள் இயல்பாகவே ஒருவருக்கு உருவாகும் சூழலைச் சமூகத்தில் உருவாக்க வேண்டும். மேல்தட்டு வர்க்கமோ, கீழ்த்தட்டு வர்க்கமோ நம் சமூகத்தில் பாதியளவு பெண்களுக்காவது பாதுகாப்பு கிடைக்கிறது எனும் அடிப்படையில் இது நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான்.

‘நடுநாட்டுச் சொல்லகராதி’ உருவாக்கிய ஒரு அகராதியாளராக தமிழ் மொழியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

ஒரு மொழியிலிருக்கும் பழமையான சொற்கள் அழிந்துபோவது என்பது கொடுமையானது. உரையாடுவதற்கு வாய்ப்பில்லாமல் பழமொழிகளும், சொலவடைகளும் செத்துப்போய்க்கொண்டிருக் கின்றன. மொழியைச் சாகவிட்டுவிட்டால் என்னவாகும் நம் எதிர்காலம்? தெரியவில்லை!

- த.ராஜன், தொடர்புக்கு: rajan.t@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x