Published : 13 Oct 2018 08:59 AM
Last Updated : 13 Oct 2018 08:59 AM

தொடுகறி: ஏ.ஆர்.ரஹ்மான் கைகளில் பிரமிள்

எழுத்துக்காரர் நளினிதேவி

புறநானூறு மட்டுமே ஐநூறு ஆண்டுகாலத் தமிழர்களின் வாழ்வைக் கற்பனைக் கலப்பின்றிச் சொல்கிறது என்று சொல்லும் நா.நளினிதேவி, ‘புறநானூறு தமிழர்களின் பேரிலக்கியம்’ எனும் ஆய்வுநூலை நாளை வெளியிடுகிறார் (வேளச்சேரி, சீ ஷெல் ஓட்டல் அரங்கம், மாலை 6 மணி). ஓர் அறுவைச் சிகிச்சையில் செவித்திறனையும் பேச்சுத்திறனையும் இழந்த 74 வயது இளைஞி நளினிதேவியின் ‘காதல் வள்ளுவன்’, ‘என் விளக்கில் உன் இருள்’ நூல்களும் நாளை வெளியாகின்றன. வெளியிடுபவர் நக்கீரன் கோபால்.

கேரள மனங்களை வென்ற சூர்யகாந்தன் நாவல்கள்

எழுத்தாளர் சூர்யகாந்தனின் ‘மானாவாரி மனிதர்கள்’ நாவல், தமிழில் இதுவரை 10 பதிப்புகளுக்கு மேல் வெளிவந்துள்ளது. மலையாளம், இந்தி, ஆங்கில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்ற நாவல் இது. இதன் மலையாள மொழிபெயர்ப்பு இதுவரை ஐந்து பதிப்புகளைக் கண்டிருக்கிறது. கொங்கு வட்டார விவசாய மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் எழுத்துகளுக்குச் சொந்தக்காரர் சூர்யகாந்தன். இவரது ‘பூர்வீக பூமி’, ‘கிழக்கு வானம்’, ‘விதைச் சோளம்’, ‘அழியாச்சுவடு’, ‘ஒரு வயல்வெளியின் கதை’ உள்ளிட்ட எட்டு நாவல்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1989-ல் அமரர் அகிலன் நினைவு நாவல் போட்டியில் முதல் பரிசை வென்றதன் மூலம் கவனம் ஈர்த்தவர் சூர்யகாந்தன்.

உலக மொழிகளில் கெளதம சித்தார்த்தன்!

எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் படைப்புகள் ஜெர்மன், பல்கேரியன், இத்தாலி, ஸ்பானிஷ், பிரெஞ்சு, சைனீஸ், அரபி, ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகளில் வெளியாகியிருக் கின்றன. தனி மனிதனாக இப்பணியை மேற்கொண்டுள்ள கௌதம சித்தார்த்தன் இன்னும் பல ரகசியத் திட்டங்கள் வைத்திருப்பதாகச் சொல்கிறார். பணி சிறக்கட்டும்!

ஏ.ஆர்.ரஹ்மான் கைகளில் பிரமிள்

தமிழ் இலக்கிய வெளியில் கவிதை, சிறுகதை, விமர்சனம், ஆன்மிகம், மொழிபெயர்ப்பு, ஓவியம் என அபூர்வமான மேதைமையை வெளிப்படுத்திய பிரமிளின் கவிதைகளை ஏ.ஆர்.ரஹ்மானின் கரங்களில் தவழவிட்டிருக்கிறார் கவிஞர் குட்டி ரேவதி. திடீரென தனது புத்தக அலமாரியிலிருக்கும் கவிதைப் புத்தகங்களிலிருந்து அந்த வரிகளுக்கு ஏற்ப மெட்டமைக்கும் வழக்கம் ரஹ்மானுக்கு இருக்கிறதாம். பிரமிள் கவிதைகளும் ரஹ்மானின் மெட்டில் பாடலாகக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் திளைக்கிறார்கள் இலக்கிய வாசகர்கள்.

தொகுப்பு: மானா பாஸ்கரன்,

மு.முருகேஷ், த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x