Published : 06 Oct 2018 10:01 AM
Last Updated : 06 Oct 2018 10:01 AM

தொடுகறி: ஆங்கிலம் பேசும் வனப்பேச்சி

ஆங்கிலம் பேசும் வனப்பேச்சி

தமிழச்சி தங்கபாண்டியனின் ‘வனப்பேச்சி' கவிதைத் தொகுப்பு ஆங்கிலத்தில் வெளியாகவிருக்கிறது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆங்கிலத் துறைத் தலைவர் பேராசிரியர் சி.டி.இந்திரா, ‘வனப்பேச்சி’ தொகுப்பிலிருந்து 31 கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்.

ஷார்ஜா உலகப் புத்தகக்காட்சியில் முதன்முறையாகத் தமிழ் அரங்கு

அக்டோபர் 31 அன்று தொடங்கவிருக்கும் சார்ஜா உலகப் புத்தகக்காட்சியில் முதன்முறையாகத் தமிழ்ப் புத்தகங்களுக்கென்று தனி அரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் வேடியப்பனின் முன்முயற்சியில் இது சாத்தியமாகியிருக்கிறது. இந்த அரங்கில் வேடியப்பனின் டிஸ்கவரி புக் பேலஸுடன் வம்சி புக்ஸ், தடாகம் பதிப்பகம், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகமும் கைகோத்திருக்கிறார்கள்.

லண்டனில் உலகத் தமிழ் நாடக விழா

முதலாம் உலகத் தமிழ் நாடக விழா 2016-ல் பாரிசில் நடைபெற்றது. இரண்டாவது உலகத் தமிழ் நாடக விழா அக்டோபர் 6, 7 அன்று லண்டனில் நடைபெறுகிறது. நாடக நிகழ்வில், வைக்கம் முகமது பஷீரின் ‘நீல வெளிச்சம்’ சிறுகதையை திரைக்கலைஞர் நாசரும், அ.மங்கையின் ‘பனித்தீ’ நாடகத்தை பேராசிரியர் கி.பார்த்திபராஜாவும் தனிநபர் நாடகங்களாக நடத்தவுள்ளனர்.

முடிகொண்டான் நூலகம்

ராஜேந்திர சோழன் ஆட்சியேற்ற ஆயிரமாவது ஆண்டு விழாவைக் கொண்டாட்டமாக மாற்றியதில் பொறியாளரும் வரலாற்று ஆர்வலருமான

இரா.கோமகனுக்குப் பெரும்பங்கு உண்டு. சோழர் கால வரலாற்றுச் சிறப்புகளைப் பரப்புவதையே பணியாகக் கொண்டிருக்கும் இரா.கோமகனின் வழிகாட்டலில், முடிகொண்டான் தமிழ்ச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செயல்திட்ட அறிக்கையில் முடிகொண்டான் நூலகமும் ஒன்று.

தொகுப்பு: மு.முருகேஷ், த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x