Last Updated : 12 Aug, 2018 08:23 AM

 

Published : 12 Aug 2018 08:23 AM
Last Updated : 12 Aug 2018 08:23 AM

நடைவழி நினைவுகள்; ப.சிங்காரம்: நவீன காவியம்!

நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர் ஹெமிங்வேதான் ப.சிங்காரத்தின் எழுத்துலகப் பிரவேசத்துக்கு உந்துதலாக இருந்தவர். அவருடைய படைப்புகளின் அறிமுகமே சிங்காரத்தினுடைய படைப்பியக்க வாசல். யுத்தகாலத்தில் இந்தோனேசியாவை ஜப்பான் துருப்பு கைப்பற்றியபோது அங்கிருந்த நூலகம் சூறையாடப்பட்டிருக்கிறது. புத்தகங்கள் தெருவில் வீசி எறியப்பட்டிருக்கின்றன. இச்சமயத்தில், நூலகத்தில் பணியாற்றிய ஒரு நண்பர், அவற்றிலிருந்து பல புத்தகங்களைக் கொண்டுவந்து சிங்காரத்திடம் கொடுத்திருக்கிறார். அதில் ஹெமிங்வேயின் நாவல்கள் இருந்திருக்கின்றன. ஹெமிங்வேயின் போர்க்கால நாவல்கள் அவரைப் பெரிதும் ஈர்த்திருக்கின்றன. ஹெமிங்வேயின் நாவல்களில் அவருக்கு மிகவும் பிடித்தமானது, ‘ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ்’. பின்னாளில், அவர் போர்க்காலப் பின்னணியில் தன்னுடைய நாவல்களை உருவாக்க ஹெமிங்வேதான் ஆதர்சமாக இருந்திருக்கிறார்.

இரண்டாம் உலகப் போரின் தொடர்ச்சியாக அமைந்த தென்கிழக்காசிய யுத்தகாலகட்டத்தில் உருவான இந்திய தேசிய ராணுவப் படையில் சிங்காரம் பணியாற்றியிருக்கவில்லை. அதில் பணியாற்றிய பல நண்பர்கள் மூலம் அறிந்த தகவல்கள், கதைகள் மற்றும் மராமத்துப் பணியாளராகப் போர்க்களங்களுக்குச் சென்றுவந்த அனுபவங்களின் புனைவெழுச்சியாகவே தன் படைப்புகளை உருவாக்கியிருக்கிறார். ஹெமிங்வேயின் போர்க்கால அடிப்படையிலான நாவல்களிலிருந்து அவர் உத்வேகம் பெற்றிருப்பதன் சில சாயல்களைப் போர் நிகழ்வுகளிலும் விவரணைகளிலும் அறிய முடியும். ஆனால், மனித மன உலகில் சிங்காரம் கொண்டிருக்கும் சஞ்சாரம் மிகவும் அபூர்வமானது. புனைவில் பித்துநிலை கூடிய ஒரு படைப்பு மனதால் மட்டுமே சாத்தியப்படக் கூடியது. இவருடைய புனைவுப் பாதையில் மனக் கதவுகள் திறந்துகொள்ளும் விந்தை நவீனத் தமிழ் இலக்கியம் பெற்றிருக்கும் பெரும் பேறு. மனதின் தன்னிச்சையான நினைவோட்டங்கள் வெகு அநாயசமாக மொழிநடையில் புரள்கின்றன.

‘புயலிலே ஒரு தோணி’யின் படைப்பு மொழி, நவீனத் தமிழ் உரைநடைகளில் மிகவும் விசேஷமானது. கதைமாந்தர்களின் மன மொழி, தமிழில் இவரளவுக்கு எவரிடமும் இவ்வளவு அநாயசமாக வசப்படவில்லை. மனக்குகை வாசல்கள் திறந்துகொண்டு உள்ளுலகை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. உணர்வுகளின் ரகசிய முகமூடிகள் கழன்றோடி அப்பட்டமாய் வெளிப்படுகின்றன. ஒரு வார்த்தையைத் திரும்பத் திரும்ப இரண்டு முறை, மூன்று முறை என அடுக்கும் வாக்கிய அமைப்பில் இன்னிசையும் அழகும் கூடி முயங்குகின்றன. சில எண்ணவோட்டங்கள் மீண்டும் மீண்டும் புரண்டெழுந்து அலை அலையாய்த் தொடர்ந்துவருவது அதிர்வுகளை எழுப்புகின்றன.

‘செர்டாங்வே’ என்ற அத்தியாயம் இதுவரையான தமிழ் நாவல் புனைவில் மிகச் சிறந்த பகுதி. நிறை போதையில் குதிரை வண்டியில் செல்லும் பாண்டியனின் நினைவோட்டங்களிலான இப்பகுதி அபாரமான புனைவு மொழி கொண்டது. வெளியீட்டில் மொழி உச்சத்தைத் தொட்டிருக்கிறது. அரசியின் மனம் கவர்ந்த அறிவழகரான தாயுமானவருடன் மனதளவில் உரையாடியபடி இயங்கும் பாண்டியனின் மனம் ஒன்றை விட்டொன்று பற்றி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு கட்டத்தில் விலைமாதர்கள் நினைவுகள் உச்சியில் தெறிக்கின்றன. செர்டாங்வேயில் வண்டி திரும்பும்போது அயிஷா பொறியில் தட்டுகிறாள். ‘ஆ, அயிஷா அயிஷா அயிஷா. நன்மனம் நல்லுடல் நன்மணம். தங்கத் தந்தப் பளிங்குப் பட்டுச் சிலை.’

அந்த நினைவோட்டப் பாதையின் ஒரு திருப்பத்தில் பாண்டியன் தன்னைப் பற்றியும் நினைத்துக்கொள்கிறான். ‘...நான் மந்தையிலிருந்து விலகிப் பிரிந்த ஓடுகாலி. பிரிந்ததால் மந்தையின் வெறுப்புக்கும், பிரிய நேர்ந்ததால் தன் வெறுப்புக்கும் உள்ளாகி, இந்தப் பரந்த வையகத்தில் காலூன்ற இடமின்றி, ஒட்டிப் பற்ற ஈரப்பசை காணாமல் தன்னந்தனியனாய் அலைந்து திரிகிறேன்; அலைந்தலைந்தே திரிவேன்; அலைந்தலைந்து திரிந்தே அழிவேன்...’ அந்த நினைவுப் பாதையில் எழுந்த வேசையர் நினைவுகளும் நிறை போதையும் உந்தித்தள்ள அயிஷா வீட்டை வண்டி அடைகிறது. ‘சாயா பூஞா சிந்தா! சாயா பூஞா ராஜா!’ அயிஷா வரவேற்கிறாள். ‘தங்கத் தந்தப் பளிங்குப் பட்டுச் சிலை அணைத்திறுக்கிக் குமுகுமுத்தது’ என அந்த அத்தியாயம் ஒரு நீண்ட மனவோட்ட எழுச்சி கொண்டிருக்கும்.

இந்தோனேசியாவின் மெடான் நகர் கெர்க் ஸ்ட்ராட் வீதியில் காலை அருக்கிருட்டு நேரத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தை அடிபணியச் செய்து மெடான் நகரைக் கைக்கொள்ள வரும் ஜப்பானியப் படையை வரவேற்க, அந்நகர மக்கள் இருபுறமும் கூடியிருக்கிறார்கள். மராமத்து காண்ட்ராக்டரிடம் குமாஸ்தாவாகப் பணிபுரியும் பாண்டியனும் வேடிக்கைபார்ப்பதற்காக அங்கு வருகிறான். ஒரு சாதாரணப் பார்வையாளனாகப் பாண்டியன் அறிமுகமாகும் அதே இடத்தில், நாவலின் இறுதியில், இந்தோனேசிய விடுதலைப் படையின் ராஜா உத்தாங் காட்டரசன் எனப் பெயரும் புகழும் பெற்று, அதிலும் சலிப்புற்று, ஊர் திரும்ப முற்படும்போது சுட்டுக் கொல்லப்படுகிறான். ஒரு காவிய நாயகனாக மரணமடைகிறான். அறிமுகத்துக்கும் முடிவுக்குமான இரு நிலைகளுக்கிடையில் ஒரு பிரமாண்டமான சாகச உலகம் பரந்து விரிந்து மகத்தான காவியப் படைப்பாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழின் நவீன செவ்வியல் நாவல், ‘புயலிலே ஒரு தோணி’!

படைப்பாளியின் தனிப்பட்ட வாழ்க்கை வெளியுலகால் அறியப்பட அவசியமில்லாதது என்ற எண்ணத்தோடு உலகெங்கும் பல மகத்தான எழுத்தாளர்கள், தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளியுலகம் அறியாதிருக்க பிரக்ஞைபூர்வமாகப் பிரயாசை எடுத்துக்கொண்டு இயங்கியிருக்கிறார்கள். அது குறித்த தங்கள் பிடிவாதங்களையும் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், எவ்விதப் பிரகடனமோ, பிரயாசையோ இன்றி தன் தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருந்த படைப்பாளி ப.சிங்காரம்.

ப.சிங்காரத்தின் படைப்பு மேதமை குறித்த என் அவதானிப்புகள், நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் முதலில் அசட்டையாகப் புறக்கணிக்கப்பட்டன. அன்று என் ஆதர்சங்களாக இருந்த சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன், தருமு சிவராம் மூவருமே ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைக் கொஞ்சமும் பொருட்படுத்தியிருக்கவில்லை. ஆனால், இதுவே கலை இலக்கியப் பார்வையில் ஒரு தனிப் பாதையை நான் கண்டடைய வழி அமைத்தது. நான் மதுரைக்காரன் என்பதால் சிங்காரம் மீது விசேஷ அக்கறை காட்டுவதாகவே இளம் படைப்பாள நண்பர்களும் கருதினார்கள். ஆனால், என்னைப் பொறுத்தவரை, தொடர்ந்து மேற்கொண்ட மறுவாசிப்புகளில் அதன் மகத்துவம் பற்றிய என் கணிப்பு திடப்பட்டது. காலமும் அதை உறுதிப்படுத்தியிருக்கிறது. கடவுளுடைய சிரிப்பின் எதிரொலியாக வெளிப்பட்டிருக்கும் ஒரு மகத்துவம்மிக்க நாவலைக் காலம் கைப்பற்றிக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: KAALAMKALAIMOHAN@GMAIL.COM

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x