Published : 12 Aug 2018 08:26 am

Updated : 12 Aug 2018 08:26 am

 

Published : 12 Aug 2018 08:26 AM
Last Updated : 12 Aug 2018 08:26 AM

வோர்ட்ஸ்வொர்த்: இயற்கையில் திளைத்த கவியரசர்!

இயற்கையின் மீது தான் கொண்ட காதலை, இயற்கையோடு இசைந்த வாழ்வைத் தனது மாந்திரீக சொற்களால் கவிதைகளாக்கியவர் வில்லியம் வோர்ட்ஸ்வொர்த். தன் வாழ்நாள் முழுவதும் இயற்கையின் வழிபாட்டில்தான் முடிய வேண்டும் என்று ஏங்கியவர். “வருமானம், செலவு என்ற வளையத்தைவிட்டு வெளியேவந்து உன் விரிந்த பார்வையால் இயற்கை அழகை விழுங்கு” என்றார். வானவில்லைக் கண்டு மகிழ்ந்து, நெகிழ்ந்து அதன் வழி தன் ஏக்கங்களையெல்லாம் கவிதையில் எதிரொலித்தார். “மலைகள், பாறைகள், கற்கள் மீது உருண்டோடும் நீர் எழுப்பும் ஒலி, மானுடத்தின் இசை” என்றார்.

அவரது உலகப் புகழ்பெற்ற கவிதை ‘டாஃபடில்ஸ்’ நினைவிருக்கிறதா? ஆலய மணியின் சிறிய வடிவில் அழகு கொழிக்கப் பூக்கும் தங்க நிறப் பூ. “மலையின் மேலே மடுவின் உள்ளே திரண்ட மேகம் தனியே மிதந்து தாவிச்செல்வதுபோல நான் உலவித் திரிந்தேன். இப்போது திடீரென்று மனம் கவரும் மலர்க்குழு என்னை வரவேற்றது. தங்கநிறத் தகடுகள் அவை.” 99 மலர்களைப் பாடிய குறிஞ்சிக் கபிலரைப் போல ஒரே ஒரு மஞ்சள் பூவின் மலர்ச்சியைக் கண்டே உருகிப் பாடினார் வோர்ட்ஸ்வொர்த்.


இயற்கையைக் கண்டு அதை மனத்தில் தேக்கி வைத்து பிறகு தனிமையில் மீண்டும் அக்காட்சியை அசைபோட்டு கவிதை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வோர்ட்ஸ்வொர்த். வோர்ட்ஸ்வொர்த்தின் குழந்தைப் பருவம் கற்பனையிலேயே மிதந்தது. “இளம்பருவத்தில் படகில் பயணித்தபோதெல்லாம் நிலவு ஒளி முலாம் பெற்ற நீர்ப்படுகைகள் என்னைத் துரத்தியதுபோல அச்சமுற்றேன், பென்ரித் பீக்கன் கிழக்குத் தொடர் மலைப்பிளவில் ஒரு சிலுவை மரக் காட்சி என் இளமைப் பருவத்தில் உலுக்கி வெருட்டியது” என்கிறார். உள்முக நோக்குடன் அத்தருணங்களைத் தனது அடையாளமாக மாற்றிக்கொண்டார் வோர்ட்ஸ்வொர்த். பேருண்மையின் தரிசனமாக இயற்கையும் கற்பனையும் இரு சிறகுகளாக அவருக்கு வாய்த்தன.

“வாழ்க்கையில் சிறைப்பட்டுக் கிடக்கும் சிலந்தி வலையிலிருந்து விடுபட்டு இயற்கையிலிருந்து பாடம் பெற்றுக்கொள்ளுங்கள்” என்ற வரி என்றென்றும் நினைவில் நிறுத்த வேண்டியது. நம் நவீன வாழ்க்கையை கொஞ்சமேனும் அர்த்தமுள்ளதாக்குவதற்கு இயற்கைக்குத் திரும்ப வேண்டும். வோர்ட்ஸ்வொர்த்தை வாசிப்பவர்கள் இயற்கையை நேசிக்கத் தொடங்குவார்கள்!

- ஒளவை ந. அருள்,

தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர்.Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x