Published : 18 Aug 2018 09:56 AM
Last Updated : 18 Aug 2018 09:56 AM

தொடுகறி: வட சென்னையில் வாசிப்பு வழிகாட்டி!

மண்ணடியில் ஸ்டேஷனரி கடை நடத்தும் ரகுமத்துல்லாகானைச் சந்திப்பவர்களில் பலர் புத்தகக் காதலர்களாகிவிடுகிறார்கள். அவரது கடையிலிருந்து யார் வேண்டுமானாலும் எந்தப் புத்தகத்தையும் எடுத்துச்செல்லலாம். விருப்பமிருந்தால் பணம் தரலாம். “வாடிக்கையாளர்களை வாசிக்கச் சொல்லி கேட்டுக்கொள்கிறேன். பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்” என்கிறார் ரகுமத்துல்லாகான். புத்தக வாசிப்புக்குத் துணை நிற்கும் இவரது பணியை வாழ்த்துவோம்!

சென்னையின் முதல் இதழ் மீள்வருகை!

சென்னை மாகாணத்திலிருந்து வெளிவந்த முதல் இதழ் ‘மெட்ராஸ் கூரிய’ரின் அரிதான 500 இதழ்களை வெளியிடவிருக்கிறது தமிழ் இணையக் கல்விக் கழகம். தெற்காசியாவின் முதல் இதழான ‘பெங்கால் கெசட்’ 1780 ஜனவரி 29-ல் கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. ‘மெட்ராஸ் கூரியர்’ 1785 அக்டோபர் 12-ல் வெளிவந்தது. இந்த இதழ்கள் லண்டன் பிரிட்டிஷ் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டுவந்தாலும், பொதுவெளியில் வெளியிடப்படுவது இதுவே முதல் முறை. சென்னை தினக் கொண்டாட்டங்களுக்கு மேலும் சுவை சேர்க்கும் சேதி இது!

யுவபுரஸ்காருக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்!

2019-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் அனுப்பக் கடைசி நாள் ஆகஸ்ட் 20. 35 வயதுக்கு உட்பட்ட படைப்பாளிகள் தங்கள் புத்தகங்களுடன் பிறப்புச் சான்றிதழையும் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு: http://sahitya-akademi.gov.in/

நாளைய செய்தியாளர்களுக்கு ஒரு நல்வாய்ப்பு!

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல் மற்றும் பண்பாட்டுப் புலமும், ‘கல்கி’ இதழும் இணைந்து மாணவர்களுக்கான இதழியல் பயிற்சி முகாமை நடத்தவுள்ளன. செப்டம்பர் 7, 8 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெறவுள்ள இந்தப் பயிலரங்கில் மூத்த பத்திரிகையாளர்கள் பயிற்சியளிக்கவிருக்கிறார்கள். பங்கேற்க விரும்பும் மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வர்/துறைத் தலைவர் பரிந்துரைக் கடிதத்துடன் விண்ணப்பிக்கலாம். தொடர்புக்கு: 044-43438822.

தொகுப்பு: மு.முருகேஷ், த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x