Published : 17 Aug 2018 08:53 AM
Last Updated : 17 Aug 2018 08:53 AM

1,000 குழந்தைகள் பாடிய ஸ்வதந்திர கீதம்

டி.கே.பட்டம்மாளின் பிறந்தநாள் நூற்றாண்டு விழா மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு டிகேபி 100 அறக்கட்டளை சார்பில் ‘ஸ்வதந்திர கீதம்’ இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 1,000 மாணவர்கள் சேர்ந்து தேசபக்திப் பாடல்களை பாடினர்.

‘கான சரஸ்வதி’ என்று போற்றப்படும் பிரபல கர்னாடக இசைப் பாடகி மறைந்த டி.கே.பட்டம்மாள் கடந்த 1919-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி பிறந்தார். இதையொட்டி, அவரது பிறந்தநாள் நூற்றாண்டு விழா, ‘டிகேபி 100’ அறக்கட்டளை சார்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், 72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் பி.எஸ்.சீனியர் செகண்டரி பள்ளியில் ‘ஸ்வதந்திர கீதம்’ என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், 15 பள்ளிகளைச் சேர்ந்த 1,000 மாணவர்கள் பங்கேற்றனர்.

திரைப்படங்களில் டி.கே.பட்டம்மாள் பாடிய தேசபக்திப் பாடல்களை மாணவர்கள் பாடினர். ‘பாரத சமுதாயம் வாழ்கவே’, `பாருக்குள்ளே நல்ல நாடு’, ‘விடுதலை விடுதலை விடுதலை’ ஆகிய பாரதியார் பாடல்கள், கல்கியின் ‘தேச சேவை செய்ய வாரீர்’, மதுரை டி.கே.சுந்தர வாத்தியாரின் ‘எங்கள் நாட்டுக்கு எந்த நாடு ஈடு’ பாடலையும் மாணவர்கள் ஒருமித்த குரலில் பாடினர்.

கர்னாடக இசைக் கலைஞரும், டி.கே.பட்டம்மாளின் பேத்தியுமான நித்ய பேசும்போது, ‘‘கான சரஸ்வதியான டி.கே.பட் டம்மாள் இசையைவிட்டு எங்கும் போகமாட் டார். குழந்தைகள் சேர்ந்து நேர்த்தியாக, இனிமையாகப் பாடியதை மானசீகமாக கேட்டுக்கொண்டுதான் இருப்பார்’’ என்றார்.

மதுரை, கோவை, நெல்லையிலும் ஒரே நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகளைக் கொண்டு ‘ஸ்வதந்திர கீதம்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான விஜய் சிவா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து சென்னை வாணி மஹாலில் ‘கொட்டு முரசே’ எனும் நிகழ்ச்சியை டிகேபி100 அறக்கட்டளை, தியாக பிரம்ம கான சபாவுடன் இணைந்து நடத்தியது. இதில், டி.கே.பட்டம்மாளின் மருமகளும், நித்யயின் தாயுமான லலிதா சிவகுமாரின் மாணவிகள் சேர்ந்திசையாக, டி.கே.பட்டம்மாள் பாடிய சில பாடல்களை பாடினர்.

உறவினர்கள், நண்பர்கள் வட்டாரத்தில் ‘பட்டா’ என்றே செல்லமாக அழைக்கப்பட்டார் டி.கே.பட்டம்மாள். அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை தொகுத்து, பட்டாவின் சித்திரக் கதையாக திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிக்கில் குருசரணின் தேசபக்திப் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x