Last Updated : 03 Aug, 2018 08:41 AM

 

Published : 03 Aug 2018 08:41 AM
Last Updated : 03 Aug 2018 08:41 AM

பார்த்திபன் கனவு 40: கடற் பிரயாணம்

இப்படி வெகு நேரம் அவளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்த விக்கிரமன், சூரியன் மறைந்து நாலுபுறமும் இருள் சூழ்ந்ததைக்கூட கவனிக்கவில்லை. தற்செயலாகக் கீழே கடலை நோக்கியபோது, விண்மீன்கள் தண்ணீரில் பிரதிபலிப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அத்தனை நேரமும், முன்பின் தெரியாத அந்தப் பெண்ணைப் பற்றியே தான் சிந்தித்துக் கொண்டிருந்ததை நினைத்துச் சிறிது வெட்கம் அடைந்தான். பிறகு பொன்னனையும், வள்ளியையும் பற்றி எண்ணினான். அவர்களுக்குத் தன் பேரில் எவ்வளவு பிரியம்! இந்த நேரமெல்லாம் அவர்கள் தன்னைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். அல்லது ஒருவேளை வள்ளியின் பாட்டனைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம். அந்தக் கிழவனுக்குத்தான் என்ன தைரியம்! சோழநாட்டு ஆண் மக்களெல்லாம் அவனைப் போன்ற வீரர்களாய் இருக்கக் கூடாதா?

இருட்டி ஒரு ஜாமம் ஆனபோது, நீலக் கடலைச் செம்பொற் கடலாகச் செய்துகொண்டு கீழ்வானத்தில் சந்திரன் உதயமானான். பூரண சந்திரன் இல்லை; முக்கால் சந்திரன்தான். பார்ப்பதற்கு ஒரு பெரிய பொற்கிண்ணம் கடலில் இருந்து வெளிக்கிளம்புவதுபோல் இருந்தது.

முன்னம் பாற்கடலைக் கடைந்தபோது இந்தச் சந்திரனாகிய பொற் கிண்ணத்திலேதான் அமுதம் வந்ததோ, என்னவோ? இன்றும் அந்தப் பொற்கிண்ணத்தில் இருந்த நிலவாகிய அமுதம் பொங்கிப் புவனமெல்லாம் பரவியதாகத் தோன்றியது.

இந்த மோகனக் காட்சியை விக்கிரமன் பார்த்தான். கடலில் இருந்து எழும்பிய சந்திர பிம்பத்துடனேகூட அவனுடைய மனக் கண்ணின் முன்னால் அந்தப் பெண்ணின் முகமும் மறுபடி எழுந்தது. இந்த உதயசந்திரனுடைய பொன்னிறந்தான் அவளுடைய முகத்தின் நிறமும்!

“ஆகா! அது என்ன அழகான முகம்!” என்ற எண்ணம் அப்போது விக்கிரமனுக்கு முதன்முதலாகத் தோன்றியது. அந்தப் பொன் முகத்தின் அழகை, அதைக் கவிந்திருந்த கருங்கூந்தல் எவ்வளவு நன்றாய் எடுத்துக் காட்டிற்று! ஆம். நிகரில்லாத சவுந்தர்யம் வாய்ந்தவள் அந்தப் பெண். சித்திரத்திலும், சிலையிலும்கூட அத்தகைய திவ்ய சவுந்தர்யத்தைக் காண்பது அரிதுதான். அவள் யாராய் இருக்கும்?

பன்னிரண்டு தினங்கள் சென்றன. அடிக்கடி குந்தவியைப் பற்றிய சிந்தனையில் ஆழ்ந்திருந்த விக்கிரமனுக்கு இந்தப் பன்னிரண்டு தினங்கள் போனதே தெரியவில்லை. பதின்மூன்றாம் நாள் பொழுது விடிந்தபோது சூரியோதயமான திசையில் விக்கிரமன் கண்ட காட்சி அவனை ஆச்சரியக் கடலில் மூழ்கடித்தது.

ஏனெனில் வழக்கம்போல சூரியன் சமுத்திரத்தில் இருந்து கிளம்பி ஜோதிப் பிழம்பாய் மேலே வருவதற்குப் பதிலாக, பச்சை மரங்களுக்குப் பின்னால் உதயமாகி மேலே ஒளிக்கிரணங்களைப் பரப்பினான். இந்த அபூர்வ காட்சியைப் பார்த்துக்கொண்டு விக்கிரமன் நிற்கும்போதே கப்பல் தலைவன் அவனை நெருங்கி, ‘இளவரசே! அதோ தெரிகிறதே, அந்தத் தீவின் அருகில்தான் தங்களை விட்டு விடும்படி எங்களுக்குக் கட்டளை. தங்களுக்கு நீந்தத் தெரியும் அல்லவா?” என்றான்.

“கரைக்கு எவ்வளவு தூரத்தில் விடு வீர்கள்?”

“ரொம்ப தூரத்தில் விடமாட்டோம். ஒத்தாசைக்கு ஒரு மரக்கட்டையும் போடு வோம்.”

“நான் இறங்க மாட்டேன் என்றால் என்ன செய்வீர்கள்?”

“மரக்கட்டையில் கட்டி மிதக்கவிடும்படி கட்டளை. தங்களுடைய விருப்பம் என்ன?”

“நானே இறங்கிவிடுகிறேன்” என்றான் விக்கிரமன்.

அவ்வாறே கப்பல் இன்னும் சிறிது கரையை நெருங்கியதும், விக்கிரமனைக் கடலில் இறக்கிவிட்டு ஒரு மரக்கட்டையையும் போட்டார்கள். விக்கிரமன் அதைப் பிடித்துக்கொண்டு அதிக நேரம் நீந்தியும், சிறிது நேரம் அதன் மேல் உட்கார்ந்து மிதந்தும், கரையை நோக்கிச் சென்றான். கரையை நெருங்க நெருங்க, தூரத்தில் கப்பலில் இருந்து பார்த்தபோது எறும்புக் கூட்டம் மாதிரி காணப்பட்டது உண்மையில் மனிதர்கள் கூட்டமே என்று தெரியவந்தது.

அந்த மனிதர்கள் யார்? எதற்காக கடற்கரையில் வந்து கூடியிருக்கிறார்கள்? அவர்கள் என்ன பாஷை பேசுவார்கள்? சக்கரவர்த்தி தன்னை இந்தத் தீவில் விட்டு வரச் சொன்னதன் நோக்கம் என்ன? இப்படிப் பற்பல எண்ணங்கள் விக்கிரமனுடைய மனதில் அலை அலையாக எழுந்தன.

மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x