Published : 05 Aug 2018 08:47 AM
Last Updated : 05 Aug 2018 08:47 AM

“நிறைய வேலை இருக்கு...  எழுதணும்...”

நம் காலத்து முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான பிரபஞ்சன் தீவிரமாக உடல்நலிந்து புதுச்சேரி அருகிலுள்ள ‘மணக்குள விநாயகா மருத்துவக் கல்லூரி’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். பிரபஞ்சனைக் கவிஞர் லீனா மணிமேகலை பார்த்துவந்துவிட்டு பேஸ்புக்கில் எழுதிய குறிப்பு பலரையும் நெகிழச்செய்திருக்கிறது. லீனாவின் பேஸ்புக் குறிப்பிலிருந்து...

எனக்கு வார்த்தைகளே எழவில்லை. மெலிந்து வெளிறிப்போயிருந்த அவர் கைகளை என் கைகளுக்குள் பொத்திக்கொண்டேன். நண்பர்கள் எல்லோரையும் வரவேற்று விசாரித்தார். “ஒருத்தனுக்கு வாழும்போது ஆகிருதி சிறுத்துப்போறது துயரம் மணி” என்று என் முகத்தைப் பார்த்தார். கண்ணீரை அடக்கிக்கொண்டு, “உங்களுக்கென்ன அதே கம்பீரமும் மிடுக்குமாத்தான் இருக்கிறீங்க” என்றவுடன் இரண்டு கைகளையும் தட்டி கலகலவென சிரித்தார். “நம்ம திட்டமிட்டபடி படம் எடுக்கணும் மணி” என்று என் கைகளை அழுத்தினார்.

‘திரை’ பத்திரிகையில் அவர் பத்தி எழுதிய காலங்களில் சினிமா பற்றிய எங்கள் மணிக்கணக்கான உரையாடல்கள் இந்த வாக்கியத்தில்தான் முடியும். “நான் எழுதணும் மணி, எழுதும் வரைக்கும்தான் வாழ்க்கை என்ன உள்ள வச்சிக்கும். இல்லன்னா வெளியேத்திடும். கொந்தளிச்சு வரணும் வரிகள். வந்திட்டீங்க, இரண்டு வரியாவது உங்களுக்கு எழுதித் தரணும். நம்ம படத் திட்டத்தையும் விடக் கூடாது. பேசணும். பெண்கள் ஏன் தெருவுல குனிஞ்சு நடக்கணும் சொல்லுங்க? நிலைப்படியா இருக்கு தலை தட்டறதுக்கு. குனிய வைக்கிற விசயங்கள் எல்லாத்தையும் கேள்வி கேக்கணும். நான் நிறைய நாட்களை வீணாக்கிட்டேன்” என்று நிறுத்தியபோது அவர் கண்கள் கசிந்திருந்தன. என்னிடமிருந்த நோட்புக்கையும் தோழர் பாண்டியனிடம் இருந்த பேனாவையும் வாங்கிக் கொடுத்தேன். சில வார்த்தைகளை எழுத முயன்றார். “இந்தப் பேனா ஒருபக்கமே சாயுது. இதைக் கொண்டு எழுத முடியாது” என்று நோட்டைக் கீழே வைத்துவிட்டார்.

“சப்தங்களுங்கு உயிர் உண்டுதானே மணி? எனக்கு இரவில குழந்தைகள் பந்துகளத் தட்டித் தட்டி விளையாடற சத்தம் கேட்டுட்டே இருக்கு. இன்னும் உன்னிப்பா கேட்டு அந்த சப்தங்களுக்கு உருவம் கொடுத்து எழுதணும். ஹாஸ்பிடல் நிசப்தமே ஒரு சப்தம்தான். ஆனா சீக்கிரம் கிளம்பிடணும். எனக்கு நிறைய வேலைகள் மிச்சமிருக்கு மணி.”

அவர் பேசிக்கொண்டிருந்தபோது நர்ஸ் ஊசி போட வந்தார். பற்றிக்கொண்டிருந்த கைகளை விடுவித்துக்கொண்டோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x