Published : 19 Aug 2018 11:26 AM
Last Updated : 19 Aug 2018 11:26 AM

கீர்த்தனாரஞ்சிதம்: இஸ்லாமிய கர்னாடக இசை நூல்!

நபிகளின் வாழ்க்கை வரலாற்றை ‘சீறாப்புராணம்’ எனும் காப்பியமாக உமறுப்புலவர் எழுதுவதற்குப் பேருதவி புரிந்த சதக்கத்துல்லாஹ் அப்பாவின் குடும்ப வழியில் ஏழாம் தலைமுறை வழித்தோன்றலாய்ப் பிறந்தவர் பா.சு.முஹம்மது அப்துல்லா லெப்பை ஆலிம் (1870-1962). இஸ்லாமிய இசை அறிஞரான பா.சு.முஹம்மது அப்துல்லா லெப்பையின் பாட்டனார் அப்துல் காதிர் நெய்னா லெப்பை, காயல்பட்டினத்தில் நீதிபதியாகப் பணிபுரிந்தவர். அப்துல் காதிர் நெய்னா லெப்பையின் மூத்த மகனான முஹம்மது சுலைமான் லெப்பையின் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் பா.சு.முஹம்மது அப்துல்லா லெப்பை.

சிறு வயது முதலே முஹம்மது அப்துல்லா லெப்பைக்கு இசை ஆர்வமிருந்தது. மன்னர் ஔரங்கசீப்பால் அரசவைக்கு வரவழைக்கப்பட்டு பாராட்டு பெற்றார் சதக்கத்துல்லாஹ் அப்பா. அவரின் குடும்ப வழித்தோன்றலான முஹம்மது அப்துல்லா லெப்பை முறைப்படி கர்னாடக இசை கற்று அதில் இஸ்லாமியக் கீர்த்தனைகளை உருவாக்கிப் பாடினார். எந்தக் கீர்த்தனைகளைக் கேட்டாலும் அதே ராக தாளங்களில் இஸ்லாமியப் பாடல்களை எழுதிப் பாடுமளவுக்குக் கர்னாடக இசைப் புலமைமிக்கவராகத் திகழ்ந்தார். கர்னாடக இசையில் இஸ்லாமியக் கீர்த்தனைகளையும் பாடலாம் என்று நிரூபித்த அவர், தான் பாடிய கீர்த்தனைகளைப் பதிவாக்கும் நோக்கில் 1909-ல் ‘கீர்த்தனாரஞ்சிதம்’ எனும் பாடல் தொகுப்பாக வெளியிட்டார்.

ஸ, ரி, க, ம, ப, த, நி என்று கர்னாடக இசையில் அழைக்கப்படுபவை தமிழ் இசையில், குரல் - ஸட்ஜமம், துத்தம் ரிஷபம், கைக்கிளை காந்தாரம், உழை மத்தியமம், இளி பஞ்சமம், விளரி தைவதம், தாரம் நிஷாதம் என்று அழைக்கப்படுகிறது. கர்னாடக இசையின் உள்ளூற்றில் பொங்கிப் பரவிய இஸ்லாமிய இசைப் பிரதியான ‘கீர்த்தனாரஞ்சிதம்’ நூலின் வயது 109!

கர்னாடக இசை மேதைகளால் கச்சேரிகளில் பாடப்படும் கமாஸ், மோகனம், கல்யாணி, மோகனதோடி, பூபாளம், தேசிகம், சங்கராபரணம், குறிஞ்சி, பைரவி, உசேனி, காம்போதி, தன்னியாசி, வசந்தம், மணிரங்கு, தேசிகதோடி, நாட்டை, காந்தாரம் போன்ற ராகங்களில் இஸ்லாமிய இறைநேசச் செல்வர்களைப் பற்றிய கீர்த்தனைகளை முஹம்மது அப்துல்லா லெப்பை இசைத்துள்ளார். முஹம்மது அப்துல்லா லெப்பை இசையமைத்த 90 கீர்த்தனைகள் ‘கீர்த்தனாரஞ்சிதம்’ நூலில் இசைக்குறிப்புகளோடு கிடைக்கின்றன. காயல்பட்டினம் மஜ்லீஸ்களில் மூத்த இஸ்லாமிய இசைஞர்களால் அதே ராகத்தில், முன்னோர் பாடிய அதே மரபு சார்ந்த முறையில் இன்றும் பாடப்படுகின்றன.

யாப்பு அறிந்தவர்களால் மட்டுமே எழுத முடியும் கட்டளைக் கலித்துறையில் அமைந்த சித்திரக்கவிப் பாடல்கள் சித்திர வடிவத்தில் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. வலிமார்களின் கோமான் அப்துல்காதர் ஜிலானி குறித்த பாடல்களும் உள்ளன. கல்யாணி ராகத்தில் குத்புநாயகம் செய்யிது அப்துல் காதிறு ஷாகுல்ஹமீது ஆண்டகை மீது பாடப்பட்ட அரிய கட்டளைக் கலித்துறைப் பாடலையும் இந்நூலில் காண முடிகிறது.

1909-ல் அச்சிடப்பட்ட ‘கீர்த்தனாரஞ்சிதம்’ எனும் இஸ்லாமியக் கீர்த்தனை நூல் உலகளாவிய அளவில் பல்வேறு பாராட்டுகளைப் பெற்று மறுபடியும் 1963-ல் இரண்டாம் பதிப்பாக இலங்கையில் வெளிவந்தது. இந்நூலின் மூன்றாவது பதிப்பு இப்போது தயாராகிக்கொண்டிருக்கிறது. முஹம்மது அப்துல்லா லெப்பையின் பெயரர்களான காயல்பட்டினம் பிஎஸ்எம் உமர், பிஎஸ்எம் இல்யாஸ் ஆகியோர் தம் பாட்டனாரின் பெருமையைப் போற்றும் வகையில் இசை மேதை மம்மதுவின் அணிந்துரையோடு பதிப்பித்துள்ளார்கள். பதிப்பாசிரியர் பிஎஸ்எம் இல்யாஸ் இந்நூல் குறித்துக் கூறும்போது, “என் பாட்டனார் இயற்றிய இஸ்லாமியக் கீர்த்தனைகள் இன்றுள்ள தலைமுறைக்குச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் நூலின் வடிவமைப்பு மாறாமல் ராகம், தாளம், பல்லவி, அனுபல்லவி உள்ளிட்ட குறிப்புகளோடு மீண்டும் பதிப்பித்துள்ளோம். இப்பணியில் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மூலப்பிரதியை ஒப்புநோக்கி மெய்ப்புப்பார்த்து துணைபுரிந்தார்கள். ‘கீர்த்தனாரஞ்சிதம்’ போன்று நிறைய இசைப் பொக்கிஷங்கள் ஆங்காங்கே வெளியே தெரியாமல் மறைந்து கிடக்கின்றன. அவற்றையெல்லாம் வெளியே கொண்டுவந்து அச்சில் தர வேண்டும் என்பதே என் எண்ணம்” என்றார். இன்னிசையால் தமிழும், தமிழால் இன்னிசையும் ஒன்றை ஒன்று வளர்க்கின்றன. அரிய இசை நூல்களை மீண்டும் இளம் தலைமுறைக்குக் கொண்டுசேர்க்க விளையும் இந்த மகத்தான பணி தொடரட்டும்!

- சௌந்தர மகாதேவன், திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x