Last Updated : 02 Aug, 2018 09:12 AM

 

Published : 02 Aug 2018 09:12 AM
Last Updated : 02 Aug 2018 09:12 AM

மரணம் ஒரு கலை 22: பகுத்தறிவு இயக்கப் பாயும் சிறுத்தை

பட்டுக்கோட்டை அழகிரி

துப்பாக்கி முனைகளில் புரட்சி நடந்திருக்கிறது. பேச்சினால் நடந்த புரட்சியை, தமிழகம் கண்டிருக்கிறது. சுயமரியாதை இயக்கமும், திராவிட இயக்கமும் பேச்சினால்தான் தமிழ்ச் சமூகத்தில் மறுமலர்ச்சியைக் கொண்டுவந்தன. பகுத்தறிவை வளர்த்தன. அரசியல் மாற்றங்களை சமூக மாற்றத்தின் தொடர்ச்சியாக நிகழ்த்திக் காட்டின. பேச்சாற்றல் மாபெரும் தலைவரைப் போல் தமிழக மக்களை வழிநடத்தியிருக்கிறது.

மக்கள் தொகையில் அவரவர் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக,  தான் கொண்டு வந்த வகுப்புரிமைத் தீர்மானத்தை, 25.11.1925-ல் காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாடு ஏற்க மறுத்ததால், மாநாட்டில் இருந்தும் காங்கிரஸ் கட்சியில் இருந்தும் வெளியேறினார் பெரியார். அடுத்த ஆண்டே பார்ப்பனர் அல்லாதார் முதல் மாகாண மாநாட்டை நடத்தினார். சுயமரியாதை இயக்கம் தமிழகத்தில் தொடங்கியது.

ஒளியேந்தும் சிந்தனை சுயமரியாதை இயக்கத்தின் தொடக்கக் கால தளபதிகளில் பட்டுக்கோட்டை அழகிரி முதன்மையானவர். மேடையையே ஒரு வேள்வியாக்கி, தீப்பிழம்புகளை எழச் செய்யும் எழுச்சியான பேச்சு மரபை அழகிரிதான் தொடங்கி வைத்தார்.

பட்டுக்கோட்டை  அழகிரி பேசினால் கனல் துண்டங்களாக சொற்கள் எண் திசையிலும் தெறித்து விழும். வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் புரட்சியின் வெம்மை தெறிக்கும். அக்கனல் கனிந்து கனிந்து பகுத்தறிவு ஒளியாய் சுடர்விடும்.

வீதிகளிலும் வீடுகளிலும் மின்சாரம் இல்லாத காலம் அது. பேச்சைக் கேட்க வருபவர்கள் கையில் கொண்டு வரும் கைவிளக்குகள் கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்துக்கு எல்லாம் எண்ணெய் தீர்ந்துபோய் உயிரை விட்டு விடும். மக்களும் பேச்சாளரும் இருட்டில்தான் இருப்பார்கள். கண்களுக்குப் பழகிய ஒளியில் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு நிற்கும் மக்களுக்கு முன்னால் அழகிரியின் சொற்கள் சிந்தனையின் ஒளியேந்தி வந்திருக்கின்றன.

 வரவேற்கும் அவமரியாதை

முதன்முறை அழகிரி ஓர் ஊருக்குச் சென்றால் அவமரியாதையே வரவேற்பாகக் கிடைக்கும். “கழுதையே திரும்பிப் போ” என்று எழுதி கழுதை மேல் கட்டி ஊர்வலம் விடுவார்கள். அவர் பேசத் தொடங்கியவுடன் மேடைகளில் கற்கள் வந்து விழும். சிறிது நேரத்தில் செருப்பு. அப்படியும் தொடர்ந்தால் சாணிப் பால். தன்னை நோக்கி வீசப்படும் கற்கள் எல்லாம், “அழகர்சாமியே, உரத்துப் பேசு என்று தான் தட்டிக் கேட்கின்றன...’’ என்று நகைச்சுவையால் கடந்து, பகுத்தறிவுக் கருத்துகளை நிறுத்தாமல் பேசிக் கொண்டிருப்பார்.

கல்லால் அடித்து ஓய்ந்த மக்கள் சிறிது நேரத்துக்குள்ளேயே அழகிரியின் சொற்களுக்குள் மயங்கிக் கிடப்பார்கள். கல்லெறிதலுக்கு யார் தலைமையேற்றார்களோ, அவர்களே அடுத்தமுறை அழகிரியை அந்த ஊருக்கு அழைத்து மாலை அணிவித்துப் பேசுவதற்கு மேடையமைத்துத் தந்திருக்கிறார்கள். இதுதான் அஞ்சா நெஞ்சன் அழகிரியின் பேச்சின் வல்லமை.

பெரியாரை ‘தோழர் ராமசாமி’ என்று உரிமையுடன் கூப்பிடும் நட்பும், பொப்பிலி அரசரை ‘தோழர் பொப்பிலி’ என்று அழைக்கும் துணிவும் அழகிரிக்கே உண்டு. ஆறடி உயரமும் வழக்கத்தைவிட சற்றே நீண்ட முகமும், நிமிர்ந்த நன்னடையும், வெள்ளை ஜிப்பாவும், மல் வேட்டியும், கக்கத்தில் இடுக்கிய பத்திரிகைகளும்,

கனல் கக்கும் கண்களும் கொண்ட அழகிரிக்கு, இயற்கை கம்பீர தோற்றத்தைக் கொடுத்திருந்தது. சுயமரியாதை இயக்கம்தான் அவர் தோற்றத்துக்கு மிடுக்கைச் சேர்த்தது.

பட்டுக்கோட்டை  அருகே கருக்காக்குறிச்சியில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதிகளுக்கு பிறந்தவர் அழகிரி. பரம்பரையாக ராணுவத் தில் பணியாற்றியவர்கள் அவரது மூதாதையர்கள். தந்தையைப் பின் பற்றி அழகிரியும் முதலாம் உலகப் போரின்போது ராணுவத்தில் சேர்ந்தார். ஆறு ஆண்டுகாலம் ராணுவத்தில் பணியாற்றிய அழகிரி போரின்

கோரமுகம் பார்த்து வெளியேறிவிட்டார். ‘பாரத மாதா’ என்றொரு சங்கம் அமைத்து காங்கிரஸ்காரரானார். கதராடை அணிந்து, தக்ளியில் நூல் நூற்றுக் கொண்டிருந்த அழகிரியை எஸ்.வி.லிங்கம்தான் சுயமரியாதை இயக்கத்துக்குக் கொண்டு வந்தார்.

சுயமரியாதை இயக்கம் தொடங்கப்படுவதற்கு முன்பாகவே 1925-ம் ஆண்டு ‘குடியரசு’ இதழ் தொடங்கப்பட்டது. காங்கிரஸில் இருந்து வெளி யேறிய பிறகு பெரியார் உள்ளிட்ட தலைவர்கள் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மாகாணமெங்கும் பேசி வந்தார்கள். ‘குடியரசு’ இதழில் எழுதினார்கள். ‘தன்மான சங்கம்’, ‘சிந்தனையாளர் சங்கம்’, ‘பகுத்தறிவு சங்கம்’, ‘பார்ப்பனரல்லாதோர் சங் கம்’, ‘சுயமரியாதை சங்கம்’ என்று பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த அமைப்புகளை ஒருங்கிணைக்க வேண்டிய  தீர்மானத்தை அழகிரி சாமிதான் முன்மொழிகிறார்.

சுயமரியாதை இயக்கத்தின் தளபதியாக அழகிரி உருவெடுத்தார். பிரச்சார ஆயுதமானார்

சடங்குகள், மூடநம்பிக்கைகள், கடவுள் மறுப்பு, தீண்டாமை ஒழிப்பு என்று  பெரியாரின் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சார ஆயுதமானார் அழகிரி. அரசியல் பிரச்சினைகளையும் பகுத்தறி வுக் கருத்துகளையும் இணைத்துப் பேசியவர் அழகிரி.

தமிழகத்தில் 28.05.1928-ல் நடந்த முதல்  சுயமரியாதைத் திருமணத்தை பெரியார் நடத்தி வைக்க, அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்தவர் அழகிரி. அவருடன் கி.ஆ.பெ.விசுவநாதன், சிதம்பரம் என்.தண்டபாணி  ஆகியோர் உடனிருந்தார்கள்.

27 வயதில் எத்திராஜம்மாளைத் திருமணம் செய்து கொண்ட அழகிரிக்கு, ஐந்து குழந்தைகள். இரண்டு ஆண், மூன்று பெண். குடும்பத்தைப் பற்றி அவர் என்றுமே கவலைப்பட்டது கிடையாது. சொந்த வருமானத்துக்கு வழியில்லாத நிலையில் குடும்பம் வறுமையில் வீழ்ந்தது. ‘‘சமூக சேவையே எனது ஜீவியம். அதுவே எனது ஜீவனோபாயம். என்னை உணர்ந்து என் பிள்ளைகளை சமுதாயம் ஏந்திக்கொண்டால் போகட்டும். இல்லையேல் அவர்களும் மண் ணோடு மண்ணாகக் கலக்கட்டும்” என்பார்.

1939-ல் இந்தி எதிர்ப்பு மாநாடு சென்னையில். திருச்சியில் இருந்து பெரும் படையொன்று நடைபயணமாக மணவை திருமலைச்சாமி தலைமையில் கிளம்பி வருகிறது. அழகிரி அணிவகுத்து அழைத்துச் செல்லும் தளபதி. 577 மைல்கள், 42 பகுத்தறிவு இயக்கப் பாயும் சிறுத்தை நாட்களில் நடந்து கடந்த தூரம். கொள்ளிடத்தை படகின் மூலமும், பெண்ணையாற்றை நீந்தியும் கடந்தது படை. வழிமுழுக்க மழை. போட்டிருக்கும் ஆடையும் ஈரம். கையில் இருக்கும் பையும் ஈரம். உலர்வதும் நனைவதுமாக வந்து சேர்ந்தது படை. அன்று சென்னைக் கடற்கரையில் நடந்த கூட்டத்தில் இந்தி எதிர்ப்பின் பேரொலியே அலையென ஆர்ப்பரித்தது. மணவை திருமலைச்சாமியின் அறிக்கையைப் படித்தால் உணர்ச்சி மேலோங்கும்.

சிந்தனை எப்பொழுதும் வேகத்துடன் இயங்கும். ஆனால் உடல்? ரத்தமும் சதையுமான  இயந்திரம்தானே. காரணங்கள்மேல் பழிபோட்டு ஏதோ ஒரு கணத்தில் பழுதாகி நின்றுவிடுகிறது.

மூன்று மணி நேரம்கூட இடைவிடாமல் பேசும் ஆற்றலுடைய அழகிரி சாமிக்குப் பேசிப் பேசி குடல் வெந்து போனது. நா வறண்டது. கடுமையான வயிற்று வலியினால் உடல் நலிவுற்றார். எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தேடிய அவருக்கு வலியை மறக்க போதை மருந்து பழக்கமானது.

போதை, வலியைக் குறைப்பது போல் போக்குக் காட்டி அவரை மொத்தமாக வீழ்த்தியது.

காலம் காத்திருப்பதில்லை

‘‘கட்சிக்காக பாதி உடல், நோய்க் காக மீதி உடல்” என்று அழகிரியே வருந்தி கூறுவதைப்போல் காசம் அவர் உடலைத் தின்னத்தொடங்கியது. சுயமரியாதை மேடைகளில் மேருவைப் போல் உயர்ந்து நின்ற அழகிரி நோயினால் சுருண்டு கிடந்தார் வீட்டில். காலமும் இயக்கங்களும் யாருக்காகவும் காத்திருந்த தில்லை. இருக்கும்வரை அவரவர் இடம். அழகிரி இல்லாத மேடைகளில் முழக்கங்கள் எழுந்தன. ஆனால் சிங்கமென கர்ஜித்த அவர் இடம் மட்டும் வெற்றிடமாக.

சென்னையில் கவர்னர் ஜெனரல் ராஜாஜிக்குக் கருப்புக்கொடி காட் டும் போராட்டத்துக்கு வருகிறார். அதற்காக கைது செய்யப்பட்டார். கொல்லும் இருமலுடன் ஆறு நாட்கள் சிறைவாசம். ஊருக்குத் திரும்பிப் போக கையில் காசு இல்லாததால் கழகச் செயலாளரிடம் இருபது ரூபாய் வாங்கினார். பெரியாருக்கு ‘மயக்க

மருந்துண்போன்’ என்ற கோபம். இருபது ரூபாயை உடனே திருப்பியனுப்பச் சொல்லிக் கடிதம் எழுதச் சொல்கிறார். கடைசிக் காலங்களில் வறுமையும் நோயும் அவரை அணுஅணுவாகக் கொல்கிறது. நண்பர்கள் ‘விடுதலை’ ஏட்டில் பண உதவிகேட்டு வேண்டுகோள் விடச் சொல்கிறார்கள். மறுக்கிறார் அழகிரி. 

அழகிரியின் துன்ப காலத்தில் அண்ணாவே முழுமையாக அரவணைத்துக் கொண்டவர். ‘‘தன்னைப் பேச அழைப்பவர்கள் அழகிரிக்கு நூறு ரூபாய் மணியார்டர் அனுப்பிவிட்டு அந்த ரசீதை எனக்கு அனுப்பினால்தான் வருவேன்” என்று அறிவித்தார் அண்ணா.கலைவாணரும், எம்.ஆர்.ராதாவும்  அழகிரியின் துயர் துடைத்திருக்

கிறார்கள். செ.திவான் அழகிரியின் பங்களிப்பை  ‘அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரி’ என்ற நூலாகத் தொகுத்திருக்கிறார்.

ஈரோட்டில் சுயமரியாதை இயக்கத்தின் மாநாடு நடக்கிறது. அழகிரிக்கு உடலில் தெம்பில்லை. அவரால் வீட்டில் படுத்திருக்க முடியவில்லை. ரயிலைப் பிடித்து தஞ்சையில் இருந்து ஈரோட்டுக்கு வருகிறார். மாநாட்டில் உட்கார்ந்தபடி பேசினார். ‘‘மிகவும் தளர்ந்த நிலையில் வந்துள்ளேன். உங்கள் அனைவரை

யும் மறுபடியும்  காண்பேனா? சொல்ல முடியாது. என் தலைவருக்கும் தோழர்களுக்கும் கடைசி முறையாக என் வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ளவே இங்கு வந்தேன்” என்று அழகிரிசாமி பேசிய போது, அந்த மாநாட்டில் இருந்த ஒன்றரை லட்சம் பேரும் கண்ணீர் விட்டார்கள்.

அழகிரிசாமி வார்த்தைப் பொய்க் குமா? ஆம், அவர் கூறியதுபோல் அவர் கலந்துகொண்ட கடைசிக்கூட் டம் அதுதான். ஊர் திரும்பியவர் காச நோய்க்குத் தன்னை ஒப்புக் கொடுத்து விட்டார். சுயமரியாதை இயக்கத்தின் ஓர் அத்தியாயமானார் அழகிரி.

- வருவார்கள்...

எண்ணங்களைப் பகிர:

vandhainila@gmail.com

ஓவியம்: பாரதிராஜா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x