Published : 26 Aug 2018 09:31 am

Updated : 26 Aug 2018 09:31 am

 

Published : 26 Aug 2018 09:31 AM
Last Updated : 26 Aug 2018 09:31 AM

நிழல் அனுபவங்களின் சுவாரஸ்யத் தொகுப்பு

திரைத் துறையில் தொழில்நுட்பப் பிரிவுகளில் பணியாற்றியவர்களின் அனுபவங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. நட்சத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் பக்கங்களை அறிந்த அந்தக் கலைஞர்கள் எழுதும் புத்தகங்களில் அதுபோன்ற அனுபவங்கள் அசலாக, இயல்பாகப் பதிவாகிவிடும். புகைப்படக் கலைஞராகப் பணியாற்றிய நேஷனல் செல்லையாவின் அனுபவக் குறிப்புகள் அடங்கிய இந்தப் புத்தகமும் அப்படித்தான்.

ஏவிஎம் ஸ்டுடியோவில் இளம் வயதிலேயே அலுவலக உதவியாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கியவர் செல்லையா. ‘ஓர் இரவு’ படத்துக்காகக் கதை-வசனம் எழுதவந்த அண்ணாவுக்கு வெற்றிலை, சீவல், காபி பரிமாறும் பணி செல்லையாவுக்கு வழங்கப்பட்டது. இரவு முழுவதும் விழித்திருந்து பணியாற்றிய அண்ணா தனக்கு உதவியாக இருந்த அந்தச் சிறுவனிடம் “ஏதாவது தொழிலைக் கற்றுக்கொள்” என்று அறிவுரை வழங்கிச்சென்றார். ஏவிஎம் நிறுவனத்தில் பணிபுரிந்த பி.கே.நடராஜனிடமும் ஒளிப்பதிவாளர் மாருதி ராவிடமும் புகைப்படக் கலையைக் கற்றுக்கொண்டு தனது வாழ்க்கையைத் தொடங்கினார் செல்லையா. அந்த வகையில் அண்ணா காட்டிய வழியில் உயர்ந்த இன்னொரு கலைஞர் இவர்!


தனது உழைப்பின் மூலம் தயாரிப்பாளர்களின் நன்மதிப்பைப் பெற்ற செல்லையா தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல மொழித் திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறார். அவர் எடுத்த பல புகைப்படங்கள் புகழ் பெற்றவை. சர்ச்சையைக் கிளப்பிய புகைப்படங்களும் உண்டு. ‘ஓடி விளையாடு தாத்தா’ படத்துக்காக செல்லையா எடுத்த ஸ்ரீப்ரியாவின் கவர்ச்சிப் புகைப்படம், ஓவிய வடிவத்தில் கட்-அவுட்டாக மவுன்ட்ரோடில் வைக்கப்பட்டபோது போக்குவரத்தே ஸ்தம்பித்ததாம். ‘குதிக்கும் போஸ்’ கொடுப்பதில் ஆர்வம் காட்டிய கமல்ஹாசன், ‘சங்கர்லால்’ படத்துக்காக ஸ்ரீதேவியுடன் சேர்ந்து குதித்தபோது ஸ்ரீதேவிக்குக் கால் சுளுக்கி ஒருவாரம் ஓய்வெடுக்க வேண்டிவந்தது. லட்சக்கணக்கில் நஷ்டமாம். ‘ஒரு ‘ஸ்டில்’லுக்காக லட்சக்கணக்கில் செலவழிக்க வைத்துவிட்டாயே?’ என்று தயாரிப்பாளரும் இயக்குநருமான டி.என்.பாலு சலித்துக்கொண்டாராம்.

‘பூந்தளிர்’ படப்பிடிப்பின்போது காட்சி இயல்பாக வர வேண்டும் என்பதற்காக, குழந்தை நட்சத்திரம் விமலைத் தெருக்களில் நடக்கவைத்துப் படமாக்கியிருக்கிறார்கள். திடீரென்று குழந்தையைக் காணவில்லை. பதறித் தேடினால் யாரோ ஒரு பெண்மணி அழைத்துச்சென்றிருக்கிறார். ‘காளி’ படத்தின்போது நேர்ந்த தீவிபத்தின்போது எடுத்த புகைப்படம், ‘தெய்வத் திருமணங்கள்’ படப்பிடிப்பின்போது தங்க நகையைத் திருடிய பிரபல நடிகை, கன்னடப் படப்பிடிப்பின்போது புலி துரத்திய சம்பவம் என்று பல சம்பவங்களை சுவாரஸ்யமாகப் பதிவுசெய்திருக்கிறார். சில திரைப்படங்களில், பாடல் காட்சிகளில் நடித்திருக்கிறார். ‘பாட்ஷா’வில் நக்மாவின் கண்ணுக்கு ரஜினியாகத் தெரியும் ட்ராபிக் கான்ஸ்டபிள் செல்லையாதான்!

தொடக்கத்தில் புறக்கணிப்புக்கு ஆளாகிறவர்கள், ஒருகட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் புகழ் பெறும்போது திரைத் துறையில் தவிர்க்க முடியாதவர்களாகிவிடுவார்கள். புறக்கணித்தவர்களே கால்ஷீட் கேட்டு காத்திருப்பார்கள். புகழ்பெற்ற நடிகரால் அவமதிக்கப்பட்டு பின்னாளில் அவரை அலையவைத்த சில்க் ஸ்மிதா பற்றிய தகவல் வாழ்க்கையின் உண்மையை உணர்த்துவது. படுத்துக்கொண்டே ஒப்பனை போட்டுக்கொள்ளும் அளவுக்கு சற்று மதர்ப்புடன் நடந்துகொண்ட நடிகர் பின்னாளில் காணாமல்போனது பற்றிய செய்தி இன்னொரு ரகம். தனக்கு உதவிய நடிகர்கள், வாய்ப்பளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் பட்டியலை மறக்காமல் பதிவுசெய்திருக்கிறார் செல்லையா.

நிழற்பட நினைவலைகள்

நேஷனல் செல்லையா

டிஸ்கவரி புக் பேலஸ்

கேகே நகர், சென்னை - 78.

விலை ரூ.130 8754507070


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x