Last Updated : 26 Aug, 2018 09:35 AM

 

Published : 26 Aug 2018 09:35 AM
Last Updated : 26 Aug 2018 09:35 AM

தி.ஜானகிராமன்: இசைமையின் கனவு வடிவம்

மே மாத, 1982-ல் ஒருநாள் தி.ஜானகிராமனைச் சந்தித்தேன். என் வாழ்வின் பெறுமதியான நாட்களில் ஒன்று. மாலை 4 மணியிலிருந்து கிட்டத்தட்ட 9 மணி நேரம் அவருடன் இருந்தேன். பல எழுத்தாளர்களுடன் பல நாட்கள், பல மணி நேரங்கள் உறவாடியிருந்தபோதிலும் ஜானகிராமனோடு இருந்த அந்த 9 மணி நேரம், மதிப்புமிக்க தருணமாக இன்றும் என்னுள் உயிர்ப்புடன் சலனித்துக்கொண்டிருக்கிறது.

1982 மே மாதத்தில் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன், அவருடைய வாழ்க்கை இணை ஜெயா, ஓவியர் அச்சுதன் கூடலூர், அவருடைய அயல்நாட்டுத் தோழி, என்.சிவராமன், சுந்தர ராமசாமி, நான் ஆகியோர் கொடைக்கானலில் கூடினோம். ஓரிரு நாட்களில் சு.ரா.வும் நானும் திரும்பினோம். மதியம்போல மதுரை வந்திறங்கி சு.ரா.வை நாகர்கோவில் பஸ் ஏற்றிவிட்டு நான் வீடு திரும்பினேன். வீட்டுக்குள் நுழைந்ததும், ஜானகிராமன் காலையில் வீட்டுக்கு வந்ததாகவும், சாயந்தரம் 4 மணியிலிருந்து மீனாட்சி புத்தக நிலையத்தில் இருப்பேன் என்றும், முடிந்தால் வந்து பார்க்கும்படி சொன்னதாகவும் கூறினார் அப்பா. அப்போதே மணி நான்கை நெருங்கியிருந்தது. உடனே மனத் துள்ளலுடன் கிளம்பினேன்.

மீனாட்சி புத்தக நிலையத்தில் கல்லா மேசைக்குப் பின் பெரிய செட்டியார் இருந்தார். பக்கவாட்டில் ஒரு சேரில் உட்கார்ந்திருந்தார் ஜானகிராமன். நான் உள்ளே நுழைந்து ஜானகிராமனைப் பார்த்து மலர்ந்த அதேசமயம், “இவர்தான் மோகன்” என்றார் செட்டியார். ஜானகிராமன் சிரித்த முகத்துடன் எழுந்துகொண்டார். “நீங்கள் கொடைக்கானல் போயிருப்பதையும் இன்று வந்துவிடுவீர்கள் என்பதையும் அப்பா சொன்னார். உங்களுக்காகத்தான் காத்திருந்தேன். சரி, வாங்க அப்படியே ஒரு நடை போய்வரலாம்” என்றார். இருவரும் கிளம்பினோம். “நீங்கள் வருவதைத் தெரிவித்திருந்தால் நான் இருந்திருப்பேனே” என்றேன். “இல்லை, நான் எங்கு சென்றாலும் யாருக்கும் முன்கூட்டித் தகவல் தெரிவிப்பதில்லை. கூட்டம்சேர்வது பிடிப்பதில்லை. யாரையாவது பார்க்க வேண்டுமென்று விரும்பினால் நானே தேடிப்போய் அவர்களைப் பார்ப்பதுதான் வழக்கம்” என்றார். மீனாட்சி புத்தக நிலைய உரிமையாளரின் புதுமனைப் புகுவிழாவுக்காக தி.ஜா. அன்று காலை மதுரை வந்திருக்கிறார். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. விழா முடிந்ததும் மீனாட்சி அம்மன் கோயில் சென்றுவிட்டு அங்கிருந்து நடந்தே எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறார்.

மீனாட்சி புத்தக நிலையம் இருந்த அதே தெருமுனையில்தான் என்சிபிஎச் புத்தகக்கடை இருந்தது. “குழந்தைகளுக்கான புத்தகங்கள் வாங்க வேண்டும்” என்றார். சோவியத் பதிப்பகத்தின் குழந்தைகளுக்கான வண்ணமயமான சித்திரங்கள் கொண்ட கதைப் புத்தகங்களில் நான்கைந்து வாங்கினார். அவற்றைத் தேர்ந்தெடுத்தபோது அவர் முகம் பரவசம் சூடியிருந்தது. “குழந்தைகள் மீது இவ்வளவு அன்போடு அழகழகாகப் புத்தகங்களை வெளியிடும் அரசாங்கம் சிறந்ததாகத்தானே இருக்கும்” என்றார். புத்தகங்களைத் தபாலில் அனுப்பும் வகையில் உறையிட்டு வாங்கிக்கொண்டு தலைமைத் தபால் நிலையம் நடந்தோம். அவருடைய மகள்வழிப் பேத்தியின் பிறந்தநாளுக்கு அனுப்புவதற்கென்று அவர் புத்தகங்கள் வாங்கியிருப்பது செல்லும் வழியில் தெரியவந்தது. மகள் காதல் மணம் செய்துகொண்டிருப்பதையும், அதை அவருடைய குடும்பம் சுலபமாக ஏற்றுக்கொண்டிருப்பதையும், பையன் வீட்டில்தான் இன்னும் அதை ஏற்கவில்லை என்றும் சொன்னார். “சமூகம் நாங்கள்தான் ஜாதி, கெளரவம் பார்ப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கிறது” என்றார்.

அவர் நடப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளவராக இருந்தார். “இன்னும் கொஞ்சம் நடக்கலாம்” என்றார். “ரயில்வே காலனிக்குள் நடப்பது அருமையாக இருக்கும்” என்றேன். “போகலாம்” என்றார். பின்பக்கமாக ரயில்வே காலனிக்குள் நுழைந்து, முன்பக்கமாக வரும் வகையில் நீண்ட நடை நடந்தோம். கொடைக்கானல் பயணம் பற்றிக் கேட்டார். மிகுந்த பரவசத்துடன் சொன்னேன். சுந்தர ராமசாமி பற்றி வாஞ்சையுடன் விசாரித்தார். சமீபத்தில் படித்த புத்தகம் பற்றிக் கேட்டார். ‘ஜே.ஜே:சில குறிப்புகள்’ பற்றிய என் அன்றைய புளகாங்கிதங்களைச் சொன்னேன். அவர் படித்திருக்கக்கூடும் என்ற எண்ணமே இல்லாமல், “நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்” என்றேன். அவருடைய அபிப்ராயத்தை மிகுந்த ஆர்வத்துடன் கேட்டேன். அவர் வெகு சுபாவமாக, அந்த நாவல் குறித்த அதிருப்தியைத் தெரிவித்தார். நாவல் கருத்துகளின் சேர்மானங்களாக இருப்பதாக அபிப்ராயப்பட்டார். மன உணர்வுகளின் நாடகார்த்தத்தை நாவல் இழந்திருப்பதான எண்ணம் அவரிடம் வெளிப்பட்டது. எனக்கு அது மிகுந்த ஏமாற்றமளித்தது. நான் மீண்டும் என் பரவசங்களைப் பதற்றத்துடன் வெளிப்படுத்தினேன். அவர் மிகுந்த அனுசரணையுடன் கேட்டுக்கொண்டிருந்தார். தன்முனைப்பற்ற தன்மை என்பது அவருடைய இயல்பான சுபாவமாக இருந்தது. அதில் எவ்விதப் பாசாங்கோ பாவனையோ கொஞ்சமும் இல்லை. என் பரவசங்களை அவர் கொஞ்சமும் அசட்டை செய்யவில்லை. கடைசியாக, “உங்களைப் போன்ற இன்றைய தீவிர இளம் வாசகர்களுக்குப் பிடிக்குமாக இருக்கும்” என்றார்.

இரவு அவர் கும்பகோணம் செல்வதற்காகத் திருவள்ளுவர் பேருந்து நிலையம் சென்றோம். அதிகாலையில் கும்பகோணம் சென்றடையும் வகையில் இரவு 11.30க்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் 10.30 அளவில் பேருந்து நிலையம் சென்றுவிட்டோம். அவருடைய இயல்பான சுபாவம் மிகவும் இதமாக இருந்தது. எவ்விதப் பிசிறும் சிறு துறுத்தலும் இல்லாமல் மிகவும் பாந்தமாக தன்னியல்பில் ஒளிர்ந்துகொண்டிருந்தார். அதுவரை இவ்வளவு பண்பட்ட இசைமையை வேறெந்த எழுத்தாளர்களிடமும் கண்டதில்லை. எவ்வித உரையாடலும் இன்றி அமைதியாகச் சுற்றுப்புறத்தைக் கவனித்துக்கொண்டிருந்தபோதும் அவருடைய இருப்பு இதமளித்தது. அவருடைய பஸ் வருவது தாமதமாகிக்கொண்டிருந்தது. அப்போது எங்கள் வீட்டு மாடியில் குடியிருந்தவர், என்னைக் கவனித்துவிட்டு என்னோடு பேச வந்தார். நான் அவரிடம் சம்பிரதாயமாகப் பேசிக்கொண்டிருந்தபோது எழுந்துசென்ற தி.ஜா. சற்று நேரத்தில் இரண்டு குளிர்பானங்களோடு வந்து எங்களிடம் கொடுத்தார். நான் கொஞ்சம் பதறிவிட்டேன். “நீங்க எதுக்கு இதெல்லாம்...” என்றேன். “அதனாலென்ன, நீங்க பேசிட்டிருக்கீங்க. நான் சும்மாதானே இருக்கேன்” என்றார். நாங்கள் குடித்து முடித்ததும், இரண்டு பாட்டில்களையும் வாங்கிக்கொண்டு சென்றார். மறுக்க முயன்ற என் பிரயாசைகள் அவரிடம் செல்லுபடியாகவில்லை. அவர் திரும்புவதற்குள் இடையில் வந்த நண்பர் விடைபெற்றுக்கொண்டார்.

அவர் கும்பகோணத்திலிருந்து சென்னை சென்றுசேர்ந்ததும் ஒரு கடிதம் எழுதினார். அதில் தொலைபேசி எண் குறிப்பிட்டு, “எங்கள் வீட்டு தொலைபேசி அவ்வப்போது ஊமையாகிவிடும். இரண்டு, மூன்று தடவை சலிக்காமல் முயன்றால் கிடைத்துவிடும்” என்றும், “நீங்கள் சென்னை வரும்போது, அவசியம் வீட்டுக்கு வர வேண்டும்” என்றும் எழுதியிருந்தார். ஆனால், அடுத்த ஆறு மாதத்தில், அசந்தர்ப்பவசமாக, வாழ்வின் குரூர அபத்தங்களில் ஒன்றாக அவருக்கு மரணம் நேர்ந்தது.

வாழ்வும் எழுத்தும் இசைபட வாழ்ந்த ஒரு மகத்தான கனவின் வடிவம் தி.ஜானகிராமன்.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x