

நிலா மகனின் முதல் முயற்சியான இத்தொகுப்பில் ஏழு கதைகள் உள்ளன. வீட்டு மனிதர்களின் உறவுகளில் தொடங்கி, வெளியே செல்லும் பயணங்களில் எதிர்பாராமல் சந்திப்பவர்கள் வரை, மானுட தரிசனத்தைக் கண்டடைவதை நிலா மகனின் கதைகளில் காண முடிகிறது.
காதல் சிறகிழந்து வாடிக்கொண்டிருக்கும் தந்தையை அலட்சியப் படுத்திவிட்டோமே என்ற தவிப்பைப் பேசும் ‘காளிதாசும் கண்ணதாசும்’, ரயில் பயணத்தில், ஒரு முதியவர் தனது இறுதியை நெருங்கும் அறிகுறிகளோடு பழகும் பண்பான நிமிடங்களைச் சொல்லும் ‘கற்பகத்தின் ராஜாங்கம்’, தைப்பூச நடைபயண யாத்திரையின்போது, உடன் வரும் ஒரு பெண், தான் இலங்கையிலிருந்து நாடு விட்டு நாடு வந்து, பிழைப்பு தேடிய அவலங்களைச் சொல்லி உடன்வந்தவர்களை அதிர வைக்கும் ‘அளவி’ போன்ற கதைகள், நல்ல சிறுகதைகளாக உள்ளன. இவரது முதல் முயற்சியிலேயே வடிவம்கூடிவந்துள்ளது.