

திறன்பேசியில் 2 நிமிட வாசிப்பு முறையால் கவனச்சிதறல் சிக்கலோடு, வாசிப்பு பழக்கம் வழக்கொழியும் ஆபத்தும் நாளுக்கு நாள் அதிகரிப்பதாகத் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகிறது. உண்மையில், வாசிப்பை நேசிக்க விடாமல் செய்வதில் மொழிநடைக்கு முதன்மையான பங்கு உள்ளது. வாசிப்பின் வாசலில் இளையோர் அடியெடுத்து வைக்கத் தேவை வாசிப்பு மொழி. இதனை சில நிமிட வாசிப்பில் உணர்த்தும்படியாக வெளிவந்திருக்கிறது, ‘ஒவ்வொரு குழந்தையும்: கவனிக்கப்பட வேண்டும்...கண்டுபிடிக்கப்பட வேண்டும்...’ நூல். ‘புக்ஸ் ஃபார் சில்ரன்’ பதிப்பகத்தின் வெளியீடு இது.
பட்டிதொட்டியெங்கும் பாமர மக்களுக்கு 90களில் எழுத்தறிவு புகட்டியது அறிவொளி இயக்கம். இந்த இயக்கத்தின் முன்னணி களச் செயல்பாட்டாளர்களில் ஒருவரான கல்வியாளர் ச.மாடசாமியின் நூல் இது. தமது அனுபவங்களை எளிய எழுத்து நடையில் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார். வகுப்பறையில் விடுபட்டோரும், வாழ்க்கையில் விடுபட்டோரும் வாசிக்கத் தேவை வாசிப்பு மொழி என்கிறது முதல் அத்தியாயம்.