

பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல், தமிழ்க் கவிதையும் அவ்வப்போது சட்டையை உரித்துக்கொள்வதற்கு உதாரணம் யுகன் கவிதைகள். இவற்றில் எந்த கூடுதல் செய்நேர்த்தியும் இல்லை. மனதில் தோன்றும் கீற்றொளியைத்தான் அவர் எழுதிப் பார்க்கிறார்.
அது கவிதைதான் என நம்பத் தொடங்கியதில் இருந்து அவருக்கு கவிதை வசப்படத் தொடங்கிவிடுகிறது. அதில் பலவும் வெறும் ஸ்டேட்மென்ட்தான் என்று நினைத்திருப்பார் என்றால், கவிதை குறித்து மட்டுமல்ல; வாழ்க்கை குறித்து மெல்லிய நகைச்சுவை இழையோடும் பார்வை ஒருவருக்கு இருப்பதே கூட நமக்கு தெரிந்திருக்காது.