

ஆணாதிக்கப் பார்வையோடு பெண் கல்வி எதிர்ப்பும் மேலோங்கி இருந்த 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதுக்கோட்டை சமஸ் தானத்தில் பிறந்தவர் முத்துலெட்சுமி. பெண் கல்வியின் அவசியத்தை உணர்ந்த முத்துலெட்சுமி, பெரும் போராட்டங்களுக்கிடையே படித்து முன்னேறியவர். புதுக்கோட்டை மன்னரின் சிறப்பு அனுமதியைப் பெற்று, மாமன்னர் கல்லூரியில் படித்த முதல் மாணவியான இவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று, ஆசியாவின் முதல் பெண் மருத்துவர் எனும் சிறப்பினையும் பெற்றார்.
பெண் கல்விக்காகவும், பெண் சமூக விடுதலைக்காகவும் போராடிய முத்துலெட்சுமி, மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் துணைத்தலைவராகவும் செயலாற்றினார். ஆங்கிலேய அரசு காந்தியை முறையற்ற வகையில் சிறையிலடைத்ததை எதிர்த்து, தனது மேல்சபை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார். தேவதாசி முறையை ஒழிப்பதில் பெரும்பங்காற்றினார். டாக்டர் முத்துலெட்சுமி பற்றி பலரும் அறிந்திராத அரிய செய்திகளைத் திரட்டி, அக்காலப் புகைப்படங்களோடு தந்திருக்கும் நூலாசிரியரின் பணி பாராட்டுக்குரியது. - மு.முருகேஷ்