

பல்வேறு வகையான பண்பாடுகளைக் கொண்டுள்ள இந்திய மக்களை ஒன்றிணைக்கும் இலக்கியமாக ராமாயணம் உள்ளது. வடமொழியில் வால்மீகி எழுதியதை மூல நூலாகக் கொண்டு, தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் எழுதப்பட்ட ராமாயணம் ஒவ்வொரு மொழிக்குமான தனித்தன்மையைப் பிரதிபலிக்கிறது. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் கம்பர் இயற்றிய ‘ராமாவதாரம்’ என்கிற நூல், ‘கம்பராமாயணம்’ எனப் பெயர் பெற்றமை கம்பரின் கவித்திறனுக்குச் சான்றாகும்.
இந்நூலைப் பயில்வதையும் உலகம் முழுவதும் பரப்புவதையும் தங்கள் வாழ்நாள் கடமையாகக் கருதிய சான்றோர்களால் 1974இல் தொடங்கப்பட்ட அமைப்புதான் ‘சென்னை கம்பன் கழகம்’. நீதியரசர் மு.மு.இஸ்மாயில் இதன் முதல் தலைவராகவும் பன்மொழிப்புலவர் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் பதிப்பாசிரியர் குழுத் தலைவராகவும் இருந்தார்கள்.
கம்பராமாயணத்தின் மூலப் பிரதியைப் பதிப்பித்தல், கம்பன் விழா, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமண்டபம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துதல், கம்பராமாயண வகுப்பு நடத்துதல் போன்ற கம்பன் கழகத்தினரின் பணிகளுக்கெல்லாம் மகுடம் வைப்பதுபோலத் தற்போது வெளியிடப்பட்ட கம்பன் கழகத்தின் பொன்விழா நிறைவு மலரைக் கூறலாம்.