

ஒரு படைப்பாளியின் விருப்பமும் சமூகத்தின் தேவையும் ஒன்றிணையும்போது தோன்றும் நூல், கூடுதல் கவனத்துக்கு உள்ளாகிறது. அதை வாசகர்கள் படிப்பது தவிர்க்க முடியாததாகிறது. வலி, நட்புக்காலம், கடைசி மழைத்துளி என கவிஞர் அறிவுமதி எழுதிய கவிதைத்தொகுப்புகள் காலத்தின் தேவையை எதிரொலித்தவை.
அதே அக்கறையோடு அறிவுமதி தற்போது தேர்ந்தெடுத்துள்ள கருப்பொருள், போர் அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? அண்மையில் அவர் எழுதியுள்ள ‘உலக அமைதிக்கான நூல் புறநானூறு’ என்கிற கவிதை நூல், புறநானூற்றுப் பாடல்களை முன்வைத்து, நல்லிணக்கத்தின் அவசியத்தையும், அதை உலகுக்குக் கற்பிக்கத் தமிழ் மொழிக்கு உள்ள தகுதியையும் பேசுகிறது.