

தொழிற்புரட்சியை அடுத்து ஐரோப்பிய நாகரிகம் அடைந்த அதீத வளர்ச்சியும் வறட்டு அறிவியல் முன்னேற்றமும் ஒரு கட்டத்தில் உலகை இயந்திரகதியாக்கியது. வாழ்க்கையை இலகுவாக்கும் இடத்திலிருந்து அதிவிரைவாக மனித மனம் வெளிநடப்பு செய்தது. ஒருவரை ஒருவர் அழித்து ஆதிக்கத்தை நிலைநாட்டும் வக்கிரம் காற்றில் விஷம்போல் பரவியது. இதனால் அத்தனையும் அர்த்தமற்று போன வெறுமையை மனித இனம் உணரத் தொடங்கியது. அதுவரை உலகைத் தாங்கிப்பிடித்த சித்தாந்தங்களும் கோட்பாடுகளும் காகிதக் கட்டிடம்போல் மளமளவெனச் சரிந்து விழுந்தன.
இருத்தலின் உறுத்தல் மனிதர்களை வாட்டியது. நான் நானாக இருக்கின்றேனா? இருக்கத்தான் முடியுமா? என்பன போன்ற நூற்றுக்கணக்கான கேள்விக்கணைகள் மனதைத் துளைத்தன. உறங்கவிடாமல் துரத்தின. எதன் மீதும் நம்பிக்கை அற்ற ஊசலாட்ட நிலை உண்டானது.