

எனது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் விஷ்வா, தர்ஷன், ரக்ஷிதா மூவரும் ஒரு வயிற்றில் பிறந்தவர்கள். கடைக்குட்டி ரக்ஷிதா கைக்குழந்தையாக இருந்தபோதே அவர்களுடைய அப்பா சேட்டு இறந்துவிட்டார். குடிபோதையில் ஆட்டுக்குத் தழை வெட்டுகிறேன் என்று மின்சாரக் கம்பி செல்லும் வழியில் இருந்த மரத்தில் ஏறி வெட்டியிருக்கிறார். மின்சாரம் பாய்ந்து உடல் கருகி விழுந்த கொடூர மரணம் அவருடையது. அம்மா மஞ்சுளா இளம்வயதிலேயே கைம்பெண்ணாகிவிட்டாள்.
அடுத்தத் தெருவில்தான் அவளுடைய பிறந்த வீடு இருந்தது. மகளையும் பேரப்பிள்ளைகளையும் அவர்கள் தங்களுடன் வைத்துக் கொண்டார்கள். மிகவும் ஏழ்மையான குடும்பம்தான். அடுத்தடுத்து மூன்று பிள்ளைகளையும் என் பள்ளியில் கொண்டுவந்து சேர்த்திருந்தார்கள். மஞ்சுளா, வீட்டின் வறுமையை நினைத்துத் துணிக்கடை வேலைக்குச் சென்றுகொண்டிருந்தாள். அங்கு அவளுடன் வேலைசெய்யும் பையனுடன் அவளுக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று மஞ்சுளாவின் அப்பாவிடம் யாரோ ஒருவர் புறங்கூறி இருக்கிறார்.