

சமீபத்தில் படித்த நாவல்களில் ‘நொய்யல்’ போன்று ஒரு நாவலை நான் வாசித்ததில்லை. பெருமாள் முருகன், வா.மு. கோமு என விரல் விட்டு எண்ணக்கூடிய படைப்பாளிகளே கொங்கு வட்டார வழக்கு மொழியில் படைப்புகளைப் படைத்திருந்தாலும் நொய்யலைப் படைத்த தேவிபாரதியே இவர்கள் எல்லாரையும்விட உச்சம் என்றே சொல்வேன்.
இது நொய்யலின் கதை அல்ல. நொய்யல் நதிக்கரையில் வாழ்ந்த மனிதர்களின் கதை. இக்கரையில் வாழ்ந்த சமூகங்களின் பண்பாடு, வழிபாடு, ஆட்சி, ஆதிக்கம், இயற்கை, தொன்மம் எனப் பல படிமங்களைக் கதை மாந்தர்கள் வழியாக ஒரு நூற்றாண்டு வாழ்க்கையை நம் முன்னே காண்பிக்கிறார் படம்போல. கதை நகர, நகர ஒருவிதப் பதைபதைப்பை உண்டாக்கிவிடுகிறது. முன் பின் கதை நகர்ந்தாலும் ஏதாவது ஒரு புள்ளியில் இணைத்துவிடுகிறார்.