கீதாரிகளின் கதைக்குள் நுழைந்த பெயரற்ற பெண் | அகத்தில் அசையும் நதி 28
நான் எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலத்தில் படித்தேன். பொங்கல், தீபாவளிக்கு மட்டும் பத்து நாட்கள் போல விடுமுறை இருக்கும். பெற்றோர் வந்து பிள்ளைகளை அழைத்துச் செல்ல வேண்டும். என்னை அழைக்க என் அப்பா வந்திருந்தார். இருவரும் பரபரப்பில்லாத காலை நேரத்திலேயே குருகுலத்தில் இருந்து கிளம்பிவிட்டோம். பேருந்தில் சன்னலோர இருக்கை எனக்குக் கிடைத்தது. திரும்பிப் பார்த்தால் முகம் தெரியும் இடத்தில் என் அப்பா உட்கார்ந்திருந்தார். நான் என் ஊரைத்தாண்டி, இடும்பவனம் பள்ளி தாண்டி வேறு இடங்களுக்குச் சென்றறியாது இருந்தேன்.
வேதாரண்யம் எனக்குப் புது ஊர். பார்ப்பதற்கு அப்போது எனக்கு எல்லாமே புதுமையாக இருக்கும். எனவே, சன்னலுக்கு வெளியே தெரியும் அனைத்தையும் ஒருவிதக் கொண்டாட்ட மனநிலையோடு பார்த்துக்கொண்டு வந்தேன். வேதாரண்யம் பெரிய கோயிலை மையமாக வைத்து நான்கு வீதிகளையும் சுற்றி வந்துகொண்டிருந்தது பேருந்து.
