

இன்றைய என் பரந்துபட்ட வாசிப்புக்கு அடித்தளம் போட்டவை, பள்ளி நாட்களில் நான் படித்த கதைகள்தான். பதினோராம் வகுப்பு படித்தபோது துணைப்பாடத்தில் இடம்பெற்ற தி.ஜானகிராமனின் ‘முள்முடி’ சிறுகதை என்னை உலுக்கிப்போட்டுவிட்டது. ஆசிரியர் - மாணவர் பிணைப்பைமையமிட்ட கதையாக இருந்ததால் எளிதில் ஒன்றிவிட முடிந்தது.
ஆசிரியர் அனுகூலசாமி மிகவும் நல்லவர். தன் ஆறு வயது மகளை அவளுடைய வாத்தியார் அடித்தபோது மகளுடன் இவரும் சேர்ந்து துடித்த துடிப்புதான், ஒரு மாணவரையும் கடிந்துகொள்ளாமல், யாரையும் அடிக்காமல் அவரை இருக்க வைத்தது. அந்த உறுதி முப்பத்தாறு வருடங்களும் ஒரு மூளி விழாமல் பிழைத்துவிட்டது. இல்லாவிட்டால் பதவியை விட்டு ஓய்வு பெறுகிற எந்த வாத்தியாரை மேளதாளத்துடன் வீடுவரை கொண்டுவிட்டுப் போயிருக்கிறார்கள்? பிரிவு உபசார விழா முடிந்து அனைவரும் புறப்பட்ட பிறகு மூத்த மாணவன் ஆறுமுகத்தோடு அனுகூலசாமியின் மாணவன் சின்னையனும் அவனுடைய அம்மாவும் வந்திருந்தார்கள்.