

எழுதப்படுகிற, சொல்லப்படுகிற எல்லா கதைகளும் பெருங்கடலைப் போலத்தான். இரு கை கொண்டு அள்ளும் அளவில் அவை வற்றிவிடுவதில்லை. அது, அள்ள அள்ள வந்துகொண்டிருக்கும் தீரா வரம். இன்னும் எழுதப் படாமலும், தன்னை எழுத மாட்டார்களா என்ற நிலையிலும் பல கதைகள் ஏக்கம் கொண்டு காத்திருக்கின்றன. சித்ரா சிவன் எழுதிய 'அத்தினி' கூட, அப்படி ஏக்கம் கொண்ட ஒரு கதை , தன்னை எழுதச் சொல்லி அடம்பிடித்து நாவலுக்குள் வந்தமர்ந்து கொண்டதாகவே தோன்ற வைக்கிறது.
பொதுவாகப் பெண்களைப் பற்றி பெண்கள் எழுதும்போதுதான் அவர்களின் உணர்வு வெளிப்பாடுகளின் நேரடித் தன்மை, உண்மையானதாக இருக்கும் என்கிற பொது கருத்து இருக்கிறது. அது காதல், காமம், கொண்டாட்டம், துக்கம், ஏக்கம், ஏமாற்றம் என எதுவாக இருந்தாலும் அப்படித்தான்.