

தமிழ், உலகின் மூத்த மொழிகளில் ஒன்று. இன்றும் பயன்பாட்டில் இருக்கும் மொழிகளில் முதன்மையானதும் கூட. தென்னிந்திய மொழிகள் தோன்ற மூலமொழியாகவும் தமிழ் இருந்துள்ளது. இதனால்தான் தமிழை, ‘உயர்தனிச் செம்மொழி’ என அழைக்கிறோம்.
இந்தியாவுக்கு வந்த ஐரோப்பியர்கள் பலரும் தேவையின் பொருட்டு தமிழைக் கற்றாலும் அதன் சிறப்பால் கவரப்பட்டு தமிழராகவே மாறிப்போனார்கள்; நம் மொழிக்குத் தொண்டுகளும் செய்தார்கள். எல்லீஸ், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன்பால்கு போன்ற பலரும் இதற்கான உதாரணங்கள். உலகின் பல நாடுகளில் தமிழர் அல்லாத தமிழ் அறிஞர்கள் இன்றும் தமிழ்த் தொண்டாற்றி வருவதையும் நாம் பார்க்கிறோம்.
தமிழின் முதல் எழுத்து வடிவம், இப்போது கண்டுபிடிக்கப்பட்ட அகழாய்வுகளின் அடிப்படையில், பொது ஆண்டுக்கு முன் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த மொழி, பல நூற்றாண்டுப் பயணத்துக்குப் பிறகு இன்றைக்குள்ள எழுத்து வடிவத்தை எய்தியுள்ளது. இன்றைக்கு நாம் பயன்படுத்தும் எழுத்து வடிவம், பல்லவக் கிரந்தத்துக்கு நெருக்கமானது என்பது ஆய்வாளர்களின் துணிபு.
அறிவியல் வளர்ச்சியாலும் அயல் மொழி மோகத்தாலும் தமிழில் எழுதுவது அந்நியமாகிவிட்டது. இன்றைய தலைமுறையினர் பலருக்கும் தமிழ் எழுதுவதில் சிரமம் இருக்கிறது. தவறான சொல் பயன்பாடு, திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்பட்டு அதுவே பெரு வழக்காகி நிலைபெறும் அவலத்தையும் நாம் பார்க்கிறோம்.
இந்தப் பின்னணியில்தான் தமிழாசிரியர் நா.முத்துநிலவன் தமிழை எப்படித் தவறில்லாமல் எழுதுவது என இந்த நூலில் தெளிவுபட விளக்கியுள்ளார். தன்மையான ஒரு மொழியில், எளிமையான முறையில், இன்றைய பயன்பாட்டில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்டித் திருத்துகிறார்.
இலக்கணம் இனிது
நா.முத்துநிலவன்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ. 120
ஆன்லைனில் பெற: https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562