

‘காலப் பிசாசுகள்’ – ம.இராசேந்திரனின் சிறுகதைத் தொகுப்பு. ‘மெக்கன்சி சுவடிகளில் தமிழ்ப் பழங்குடிகள்’ குறித்த ஆய்வில் தன் எழுத்தைத் தொடங்கியவர் ம.ரா. இவர், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்… எனப் பல்லாண்டுகள் தமிழ்ப் பணி செய்து வருகிறார். கணையாழி இதழின் ஆசிரியரான இவர், அடிப்படையில் ஓர் படைப்பாளி. இதுவரை ஆறு சிறுகதைத் தொகுதிகளை எழுதி உள்ளார். இந்தத் தொகுப்பில் எழுபத்தைந்துச் சிறுகதைகள் உள்ளன.
மேலத் தஞ்சையின் முடிவும் கீழத் தஞ்சையின் தொடக்கமுமான நிலப்பகுதி சார்ந்த கதைகள் இவருடையவை. காவிரியின் ஈரமும் சுவையும் நிரம்பியவை. தான் கண்டு, கேட்டு, உண்டு உயிர்த்த வாழ்வின் மீள் நீட்சியாக இவரின் செம்பாதிக் கதைகள். இடப்பெயர்வும், நகர்மய வாழ்வும், நவீன வசதிகளும் புரட்டிப் போட்ட வாழ்வின் எச்சங்களாக மீதிக் கதைகள். மனிதர்களும் அவர்தம் அனுபவங்களுமே வாழ்க்கையாக விரிகின்றன. குழந்தைகளும் தாத்தாக்களும் இவரின் கதைகளில் அதிகம் கிளைக்கின்றனர். ஆதியும் அந்தமும் போல.