

கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டை முன்னிட்டு (1925-1965) அவரது மொத்தப் படைப்புகளையும் பேராசிரியர் வீ. அரசு, ஆறு தொகுதிகளாகத் திரட்டிப் பதிப்பித்துள்ளார். கவிதைகள், காவியங்கள், சிறார் பாடல்கள், சிறார் கதைகள், சிறுகதைகள், ஓரங்க நாடகங்கள், ஆய்வுரைகள், கட்டுரைகள், தன்வரலாறு என வெவ்வேறு வகைமைகளில் தமிழ்ஒளி எழுதியுள்ளார். நாற்பத்தோரு வருடங்கள் மட்டுமே வாழ்ந்த தமிழ்ஒளி ஏறக்குறைய மறக்கப்பட்டு விட்டார் என்றே கூறலாம். தமிழ்ஒளியின் அன்பரான செ.து.சஞ்சீவி (1929-2023) தன் வாழ்நாள் முழுக்கத் தமிழ்ஒளியின் படைப்புகளைத் திரட்டி வெளியிடுவதையே அரும்பணியாகக் கருதிச் செய்து வந்திருக்கிறார்.
அவருக்குப் பிறகு பேராசிரியர் வீ. அரசுதான் இப்படியொரு அரிய பணியைத் தமிழ்ஒளிக்குச் செய்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட பின்புலத்தில் பிறந்த விஜயரங்கம் என்ற சிறுவன்தான் பாரதி, பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு தமிழ்ஒளி என்ற மக்கள் கவிஞராக உருவாகியிருக்கிறார்.