

கோடை விடுமுறை என்பதெல்லாம் பிள்ளைகளுக்கு மட்டும்தான். அதன் பிறகும் ஏழெட்டு நாட்கள் வரை எங்களுக்கு வேலை இருக்கும். அதே போலப் பள்ளிக்கூடம் ஆரம்பிப்பதற்குப் பத்து நாட்களுக்கு முன்பிருந்தே அடுத்த கல்வியாண்டிற்கான வேலை தொடங்கிவிடும். இடையில் ஒரு பதினைந்து நாள் மட்டும் வெளியூர் பயணம் எதையாவது திட்டமிடலாம்.
இந்தக் கோடை விடுமுறையிலும் அப்படித்தான் மூத்த மகளோடு ஒடிஷா சென்றிருந்தேன். அதனால், பள்ளிக்கூடம் இருக்கும் ஊர் நிலவரம் பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. ஒடிஷாவிலிருந்து திரும்பி பயணக் களைப்பெல்லாம் நீங்கிய பிறகு பள்ளியைப் பார்த்துவிட்டு வரலாமென்று கிளம்பிச்சென்றேன். நான் பள்ளிக்கு வந்திருப்பதை அறிந்து அங்கு வந்தார் கொளஞ்சியம்மா ஆயா.