

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு இது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கும் இது நூற்றாண்டு ஆகும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்ட 1925 டிசம்பர் 25ஆம் தேதிதான் நல்லகண்ணுவும் பிறந்திருக்கிறார். வேறு எந்த அரசியல் தலைவரின் வாழ்விலும் அமைந்திராத அரிய ஒற்றுமை இது.
ஆர்.நல்லகண்ணுவின் பெருமை மிகுந்த வாழ்க்கைத் தடத்தை, ‘அறவாழ்வின் அடையாளம்’ என்ற தலைப்பில் ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் நூலாக வெளியிட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சி பிறந்த நாளில் பிறந்தவரான நல்லகண்ணுவின் குடும்பம், கம்யூனிஸ்ட் இயக்கக் குடும்பம் அல்ல. விடுதலைப் போராட்டத்தின் எழுச்சியால் உந்தப்பட்ட ஆர்.நல்லகண்ணு, பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.