Last Updated : 01 Jul, 2018 10:38 AM

 

Published : 01 Jul 2018 10:38 AM
Last Updated : 01 Jul 2018 10:38 AM

ஜி.நாகராஜன்: மகளுடன் தந்தையின் கடைசி சந்திப்பு

என் திருமணத்துக்குப் பின் அமைந்த சில நட்புகளின் தொடர்ச்சியாக, 1979-லிருந்து ஜி.நாகராஜனோடு நெருங்கிப் பழக வாய்ப்புகள் கிடைத்தன. சந்திப்பு அடிக்கடி நிகழ்ந்தது. அவருடைய மரண நாள் வரை இது நீடித்தது. ஒரு வங்கிக் கிளை நண்பர்களைப் பார்க்க அவர் அவ்வப்போது வந்துகொண்டிருந்தார். அந்த வங்கிக் கிளைக்குப் பக்கத்தில்தான் எங்களுடைய குடும்ப வியாபாரமாக அப்போது இருந்த மொத்த மருந்து விற்பனைக்கடை இருந்தது. பல்கலைக்கழக ஆய்வு முறைகளிலும் சட்டகங்களிலும் சலிப்புற்று ஒதுங்கிய நிலையில், நான் சென்னைக்குக் குடிபெயர்வதற்கு முன்பு, அந்தக் கடைக்குத்தான் போய்க்கொண்டிருந்தேன். கடையில் இருப்பு கொள்ளாத நிலையில் நானும் வங்கிக் கிளை நண்பர்களைப் பார்க்க அடிக்கடி அங்கு சென்றுகொண்டிருந்தேன். இச்சமயத்தில் ஜி.என். உடல், எலும்பு போர்த்திய தோலாக வதங்கிப்போய்விட்டிருந்தது. லேசாகக் கூனும் விழுந்துவிட்டிருந்தது. குடியும் கஞ்சாவும் மட்டுமே உணவாகிவிட்டிருந்தன.

ஜி.நாகராஜன் தன்னுடைய பழைய மாணவர்கள், கலை இலக்கிய நண்பர்கள், பழைய தோழர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள் எனப் பலரிடமும் சிறு தொகை பெற்றே வாழ வேண்டியிருந்தது. எனினும், தருவதும் பெறுவதுமான அந்தச் செயல் பெரும்பாலும் கண்ணியமாகவே நடந்தது. இதற்கு அவருடைய அபாரமான உரையாடல் திறனும் புத்தி தீட்சண்யமுமே துணையாகின. அவருடைய பேச்சு அவர்மீது உயர்மதிப்பை உருவாக்கும். அவர்கள் தரும் பணமென்பது, சன்மானம் என்பது போலத்தான் இருக்கும்.

பொதுவாக போலீஸ், வழக்கு போன்ற இக்கட்டு களிலிருந்து விடுபட வசீகரமான ஆங்கிலத்தில் பேசும் அவர், இப்படியான தருணங்களில் ஆங்கிலத்தை நாடுவதில்லை. பேச்சின் தன்மைக்கேற்ப, சில மேற்கோள்கள் மட்டும் ஆங்கிலத்தில் வெளிப்படும். மொழி அறிவு அல்ல, விசய ஞானமும் சொல்முறையும்தான் முக்கியத்துவம் பெறும். நபருக்கு நபர், தருணத்துக்குத் தருணம் பேசும் விசயம் மாறுபடும். இடையிடையே பணத்தை ஞாபகப்படுத்துவார். அது கைக்குக் கிடைக்கும்வரை சளைக்காமல் பேசுவார். கிடைத்த மறுநொடி மாயமாய் மறைந்துவிடுவார்.

ஒருமுறை வங்கி நண்பரொருவர், ஏதோ ஒரு மனநிலையில், ‘இப்படி எல்லோரிடமும் காசு வாங்கிப் பிழைக்கிறீர்களே உங்களுக்கு அவமானமாக இல்லையா?’ என்று கேட்டுவிட்டார். உடனே ஜி.என். ‘நீங்கள் வட்டிக்கு விட்டு வரும் பணத்தில்தானே வயிறு பிழைக்கிறீர்கள். அது உங்களுக்கு அவமானமாக இல்லையா?’ என்று லேசான புன்னகையுடன் கேட்டார். வங்கி நண்பரால் பதில் பேச முடியவில்லை. ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலில் கந்தன், ‘எல்லோர் பிழைப்பும் அப்படியோ இப்படியோ பிடுங்கித் தின்னறதுதான்’ என்று சொல்வது சட்டென்று என் நினைவுக்கு வந்தது. அதேசமயம், அந்த நண்பர் கடைசிவரை, தன்னால் முடிந்த சிறு உதவிகளை அவருக்குச் செய்துகொண்டிருந்தார்.

மற்றவரை அண்டியும் வேண்டியும் காசு பெற்று போதை ஏற்றிக்கொண்டிருந்த அந்த நாட்களிலும்கூட, மதிய சாப்பாட்டு நேரத்தில் வங்கி நண்பர்களைப் பார்க்க வரும்போது ஏதாவது பழம் அல்லது இனிப்பு கொண்டுவருவார். ‘என் பங்கு’ என்று கொடுத்துவிட்டுப் பேசிக்கொண்டிருப்பார். (அவர் எப்போது வங்கிக்கு வந்தாலும் அப்போது நான் அங்கு இல்லாதபட்சத்தில் கடைக்கு ஃபோன் செய்துவிடுவார்கள். நான் உடனே போய்விடுவேன்.) பொதுவாக அவர் சாப்பிடுவதில்லை. எப்போதாவது கொஞ்சம் தயிர் சாதம் சாப்பிடுவார். மற்றபடி, பழம், இனிப்புதான் அவருடைய உணவாக இருந்தது. ஒருகாலத்தில் சாப்பாட்டுப் பிரியராகத்தான் இருந்திருக்கிறார். அசைவ உணவாகட்டும் சைவ உணவாகட்டும், அவர் சாப்பிடும் அளவைப் பார்த்து ஹோட்டல் பணியாளர்களே பிரமித்துப்போய்விடுவார்களாம். எந்தக் குழம்புக்கு என்ன கூட்டு அல்லது பொறியல் பாந்தமாக இருக்குமென்று விவரிப்பார். வெங்காய சாம்பார் – உருளைக்கிழங்கு பொறியல்; வத்தக்குழம்பு – மாங்காய் பச்சடி; மோர்க்குழம்பு – கொத்தவரங்காய் பருப்பு உசிலி. அவர் சொல்லும்விதத்தில் நமக்கு சப்புக்கொட்டும்.

அவருடைய அபாரமான நினைவாற்றல் எவரையும் பிரமிக்க வைக்கக் கூடியது. ஒருமுறை, அவருக்கு மிகவும் பிடித்தமான ஆல்பெர் காம்யூவின் ‘அந்நியன்’ நாவலின் ஆங்கில வடிவம் ‘தி அவுட்சைடரி’ன் முதல் பத்தியை அப்படியே சொன்னார். பிரமிப்போடு கேட்டுக்கொண்டிருந்தோம். உச்சரிப்பும், வார்த்தைகளில் உறைந்திருக்கும் உணர்வுகளின் தொனியும் அவருடைய மேதமையை வெளிப்படுத்தின.

‘யதார்த்தா’ திரைப்பட இயக்கத்தின் திரையிடல்களுக்கும் அவர் இடையிடயே வருவார். ஒருமுறை, ஜி.வி.ஐயரின் ‘ஹம்ச கீத்’ திரையிடப்பட இருந்தபோது, அதுபற்றி அவரிடம் சொன்னேன். கேட்டவுடன் ‘ஸ்வான் சாங்’ என்று சொல்லிவிட்டு, அன்னப் பறவையின் இறுதிப் பாடலின் மகத்துவம் பற்றிப் பேசினார். அன்னப் பறவை தன் மரணத்துக்கு முன்பாகக் கடைசியாக ஒரு கீதம் இசைக்கும். அதிஅற்புதமான இரங்கல் பாடலாக அது அமையும். இது ஒரு கிரேக்க புராணீக நம்பிக்கை என்றார். இந்த நம்பிக்கை சார்ந்து, வாழ்வின் கடைசி நிகழ்வை ஒப்பற்றதாக ஆக்கும் பல படைப்புகள் உலக மொழிகளில் வெளிவந்திருப்பதாகவும் விரித்துக்கொண்டேபோனார்.

இக்காலகட்டத்தில், ஒரு தந்தையாக அவர் வெளிப்பட்ட ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தில் நான் பங்குபெற நேரிட்டது. ‘நாளை மற்றுமொரு நாளே’ நாவலின் மறுபதிப்பைக் கொண்டுவர விரும்புவதாகவும், ஒப்பந்தப் படிவமும் முன்பணமும் அனுப்பிவைப்பதாகவும், அதை ஜி.என்.னிடம் சேர்ப்பித்து படிவத்தில் அவரிடம் கையொப்பம் வாங்கி அனுப்பும்படியும் ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதுபோல் அனுப்பியும் வைத்தார். ஜி.என்.னை சந்தித்துப் படிவத்தையும் பணத்தையும் கொடுத்தேன். (அன்று ‘க்ரியா’ ராமகிருஷ்ணன் அனுப்பிய முன்பணம் ரூ.500 என்று ஞாபகம்.) படிவத்தில் கையெழுத்திட்டு என்னிடம் கொடுத்துவிட்டு, பணத்தை மகள் ஆனந்தியிடம் அப்படியே கொடுத்துவிடலாம் என்றார். நான் நெகிழ்ந்துபோனேன். என்னையும் கூட வரும்படி கேட்டுக்கொண்டார்.

அவருடைய மனைவி நாகலட்சுமியும் மகள் ஆனந்தியும் தங்கியிருந்த மகளிர் விடுதிக்கு மாலை 5 மணி போலச் சென்றோம். (அந்த விடுதியும் வங்கிக் கிளைக்கு அருகில்தான் இருந்தது.) அந்த விடுதிக்குள் அவரை அனுமதிப்பதில்லை என்பதால் அவர் வாசலிலேயே நின்றுகொண்டார். நான் உள்ளே சென்று விடுதி மேலாளரைச் சந்தித்து விபரம் சொன்னேன். என்னை இருக்கச் சொல்லிவிட்டுச் சென்றவர், திரும்பி வரும்போது ஆனந்தியோடு வந்தார். நான் ஜி.என்.னை உள்ளே வரச் சொன்னேன். உள்ளே வந்து ஆனந்தியிடம் பணத்தைக் கொடுத்தார். (அப்போது ஆனந்திக்கு 15, 16 வயது இருக்கலாம்.) நான் ஒதுங்கிக்கொண்டேன். எவ்வளவு வருடங்களுக்குப் பிறகு, அன்று அவர் தன் மகளைப் பார்த்தாரென்று தெரியவில்லை. ஆனால், அவர் ஆனந்தியைக் கடைசியாகப் பார்த்தது அன்றாகத்தான் இருக்கும். அதுவும் ஓரிரு நிமிடம்தான்.

- சி.மோகன், எழுத்தாளர்.

தொடர்புக்கு: kaalamkalaimohan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x