

சென்னை: எழுத்தாளர் சோம வீரப்பனுக்கு ‘சிறந்த எழுத்தாளர்’ விருது வழங்கப்பட்டது. நகரத்தார்களின் சர்வதேச வர்த்தக மாநாடு பெங்களூருவில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது.
இதையொட்டி, நேற்று முன்தினம் மாலை நடைபெற்ற விழாவில், சிறந்த ஸ்டார்ட் அப், சிறந்த குடும்ப நிறுவனம், வாழ்நாள் சாதனையாளர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், எழுத்தாளர் சோம வீரப்பனுக்கு ‘சிறந்த எழுத்தாளர்’ விருது வழங்கப்பட்டது.
திருக்குறளில் உள்ள மேலாண்மை கருத்துகள் குறித்தும், சாணக்கியரின் பொன்மொழிகள் குறித்தும் அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் தொடர்ந்து நான்கரை ஆண்டுகள் 226 கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது ‘குறள் இனிது ’ நூல் தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, ஒடியா ஆகிய 5 மொழிகளில் வெளியாகி, சிறப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. மேலும், விரைவில் பிரெஞ்ச், குஜராத்தி, மலையாள மொழிகளிலும் வெளியாக உள்ளது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் 8 மொழிகளில் ‘வள்ளுவர் உலகின் மூத்த மேலாண்மைக் குரு’ எனும் கருத்தை கொண்டு சென்று சேர்த்துள்ளார். இந்த மாநாட்டில் இந்தியா மட்டுமின்றி, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, துபாய், மலேசியா போன்ற நாடுகளில் இருந்து 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அவர்களுக்கு எழுத்தாளர் சோம வீரப்பன் எழுதிய “Trusting & Entrusting” என்ற ஆங்கில நூல் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஐபிசிஎன் தலைவர் விப்ரோ ரவி வீரப்பன், மருத்துவர் பால், சொக்கு வள்ளியப்பன், விசாலாட்சி, சித்தார்த், அக் ஷரா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.