

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களைப் பதிப்புலகம் பயன்படுத்திக்கொள்வதற்கான சாத்தியங்களைப் பற்றித்தான் இந்நூலாசிரியரான நதீம் சாதிக் பேசுகிறார். ஆனால், அதைப் பதிப்புலகம் உடனடியாக ஒப்புக்கொண்டுவிடுமா? எனவே, பதிப்பு வரலாற்றின் மிகச் சுருக்கமான அறிமுகத்தோடு இப்புத்தகத்தைத் தொடங்குகிறார். ஆதி மனிதர்களின் குகை ஓவியங்கள், அச்சுப்பொறிகள், மின் நூல்கள் என அந்த வரலாற்றின் முக்கியத் திருப்புமுனைகளைச் சுட்டிக்காட்டுகிறார்.
அச்சுத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியும் வேகமும் உள்ளீடற்ற கதைப் புத்தகங்கள் குவிவதற்குக் காரணமாயின. ஆனால், பொழுதுபோக்கு அம்சங்களோடு தொலைக்காட்சியும் சினிமாவும் அறிமுகமான பிறகு அவற்றின் தேவை குறைந்துவிட்டதல்லவா? அதுபோல, இப்போதும் பாரம்பரியமான பதிப்புச் செயல்பாடுகள் ஒரு புதிய தொழில்நுட்பத்திற்கு முகங்கொடுத்தே ஆக வேண்டும் என்பதை அவர் ஏற்றுக்கொள்ளச் செய்துவிடுகிறார்.